உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவைக் கணக்கிட தண்ணீர் மீட்டர் முறை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் உலகப்போர் என ஒன்று ஏற்பட்டால், அது தண்ணீருக்காக தான் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். உலக அளவில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், இந்தியாவும் அந்த பிரச்னையை எதிர்கொண்டு வருகிறது. உரிய அனுமதியின்றி தனியார் நிறுவனங்கள் முறைகேடாக நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சு எடுப்பதும், ஆற்றுப் படுகைகளில் அதிகரித்துள்ள மணல் கொள்ளையும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நொய்டாவில் குடிநீர் வீணாவதை தடுக்கும் நோக்கில், நகரத்தில் 79,000 க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் மீட்டர்களை நிறுவ நகர நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்த வாரத்தில் நடைபெற்ற வாரியக் கூட்டத்தில், மல்டி ஜெட் நீர் பாய்ச்சல் தொழில்நுட்பத்திற்கான பணிக்காக ரூ.99.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 10 சதவிகித வீடுகளுக்கு தண்ணீர் மீட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தண்ணீர் மீட்டர் முறை மூலம் பொதுமக்கள் நுகரும் தண்ணீர் பயன்பாட்டை கணக்கிட்டு அதற்கேற்றார்போல் அவர்களுக்கு கட்டணம் விதிக்கப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறையின் மூலம் தண்ணீர் வீணாவது தடுக்கப்படும் எனத் தெரிவித்த அதிகாரிகள், பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் தண்ணீருக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என விளக்கமளிக்கின்றனர்.
தண்ணீர் மீட்டர்களை நிறுவுவதற்கும், 10 ஆண்டுகள் வரை பராமரிப்புகளை மேற்கொள்வதற்கும் ஒரு தனியார் நிறுவனத்தை பணியமர்த்த நொய்டா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்குள் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பற்றாக்குறையான அளவில் குடிநீர் விநியோகம் நடந்து வரும் நிலையில் அதனை நிவர்த்தி செய்யாமல் நீர் வீணாவதைத் தடுப்பது எனும் பெயரில் மீட்டர் முறையை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரு நிறுவனங்களில் நிகழும் பகல் கொள்ளையை தடுக்காமல், மக்களின் அன்றாட பயன்பாட்டினை அளந்து அரசு வருவாய் ஈட்ட முயல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முன்னதாக தமிழகத்தில் கோவை மாநகராட்சியிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.