கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதலின்போது வீர மரணமடைந்த, 20 இந்திய வீரர்களுக்கு போர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னை, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஜூன் மாதம் 15ம் தேதி கால்வான் பள்ளத்தாக்கில் சீனா, இந்திய ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் ஆகும்.
இந்திய பகுதிக்குள் அத்துமீறி ஊடுருவி தங்கிய சீன படையினரை இந்திய வீரர்கள் அப்புறபடுத்தியபோது இருதரப்புக்கும் இடையே கைகலப்பு நேரிட்டது. மரக்கட்டைகள், கற்கள் ஆகியவற்றை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில், இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
அதேசமயம், சீனா தரப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், அதனை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. உயிரிழந்த வீரர்களின் விவரங்களை கூட சீனா வெளியிடாத நிலையில், ராணுவத்திற்கு அந்நாட்டு அரசு உரிய மாரியாதை வழங்கவில்லை என சீன அரசுக்கு சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. இந்தியாவை காட்டிலும் கூடுதல் உயிரிழப்பு என்பதை ஒப்புக்கொண்டால் அவமானம் என கருதி, நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் விவரங்களை சீனா மறைத்துள்ளது.
இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிர்த்தியாகம் செய்த 20 இந்திய வீரர்களை நினைவுகூரும் வகையில், லடாக்கின் டர்பக்-சியோக்-தெளலத் பெக் ஓல்டி சாலையில் இந்திய அரசு சார்பில் நினைவுச்சின்னம் கட்டப்பட்டுள்ளது.
அங்கு கல்வான் மோதலில் உயிரிழந்த 20 வீரர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் குறித்த விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும், ஜூன் 15ம் தேதி நடந்த சம்பவம் குறித்தும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.