சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பஞ்சாப் முதலமைச்சர் சன்னி உத்தரப்பிரதேசம் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் உ.பி போலீசாரால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உ.பி போலீசார் மற்றும் ரேபிட் ஆக்சன் போர்ஸ் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் துணை முதலமைச்சர் ஆகியோர் லக்கிம்பூர் செல்ல வர உள்ளனர் என்ற தகவலை அறிந்தவுடன் இருவரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என உ.பி அரசு லக்னோ விமான நிலைய இயக்குனருக்கு கடிதம் எழுதியது. இந்நிலையில், பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி உத்தரபிரதேசம் மாநிலத்தில் லக்கிம்பூர் செல்ல திட்டமிட்டுள்ளார் எனவும் முதலமைச்சர் ஹெலிகாப்டர் தரை இறங்க அனுமதிக்க வேண்டும் என பஞ்சாப் அரசு சார்பில் உத்தரபிரதேச மாநில கூடுதல் தலைமைச் செயலாளருக்கு இன்று காலை கடிதம் எழுதப்பட்டது.
அதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள உத்தரப்பிரதேச அரசு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளதாலும், அங்கு பதற்றம் உள்ள காரணத்தினால் முதலமைச்சர் உத்திரபிரதேசம் வருகை தர அனுமதி வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர்.