இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர் குழுவில் தென்னிந்தியர்களை நியமிக்காதது துரதிர்ஷ்டம் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தனது ட்விட்டரில் பதிவில்,12 ஆயிரம் ஆண்டுகளாக உள்ள இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய 16 பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த குழுவில் கன்னடரையோ அல்லது தென்னிந்தியாவின் திராவிட பரம்பரையை சேர்ந்த ஒருவரையோ நியமிக்காதது துரதிர்ஷ்டம்.மேலும் அந்த குழுவில் ஒரு பெண் கூட நியமிக்கப்படவில்லை. நிபுணர் குழுவில் கன்னடர் ஒருவர் இல்லாத நிலையில் கர்நாடகத்தின் கலாச்சாரம், பண்பாடு குறித்து நியாயமான ஆய்வு நடைபெறுவது எப்படி சாத்தியமாகும்.
தென்னிந்தியர்களை தூரத்தில் வைத்துவிட்டு, ஒட்டுமொத்த தேசத்தின் கலாச்சாரம் எப்படி ஆய்வு செய்யப்படும்?. நாங்கள் இந்த நாட்டை தாய் மற்றும் பசுவுடனும் ஒப்பிடுகிறோம். பெண்களை வழிபடும் இந்த நாட்டின் கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் குழுவில் ஒரு பெண் கூட இடம் பெறாமல் எப்படி ஏற்புடையதாகும்.
கலாச்சாரம், இதிகாசம், பண்பாடு ஆகிய விஷயத்தில் முழுவதும் வடஇந்தியர்களை கொண்டுள்ள அந்த குழு ஒரு தலைபட்சமாக செயல்படும் என்ற சந்தேகம் எங்களுக்கு பெரியதாக எழுந்துள்ளது. எனவே, அந்த குழுவை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.