நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 2.46 லட்சமாக குறைந்தது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.
டெல்லி,
இந்தியாவில் 2-வது நாளாக இன்றும் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது. நாடு முழுவதும் இன்று மட்டும் 18,833 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,38,71,881 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24,770 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,31,75,656 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,46,687 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 203 நாட்களில் இல்லாத வகையில் குறைந்த எண்ணிக்கை ஆகும். அதே போல் இந்தியாவில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 278 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,49,538 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 97.94 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை மொத்தமாக 92.17 கோடி டோஸ்கள் தடுப்பூசி இந்தியாவில் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே போல் நாட்டில் 57.68 கோடி கொரோனா மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
