தருமபுரி: மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் இளநிலை உதவியாளருடன் கூடிய பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தலா ஒரு பணியிடம் வீதம் இரண்டு இடங்கள், முற்றிலும் தற்காலிகமாகத் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி என்ன?
இளநிலை உதவியாளர்–பதிவேடு எழுத்தர் பணிக்கு 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினிப் பயன்பாட்டில் திறன் அவசியம். தமிழ் மற்றும் ஆங்கிலத் தட்டச்சுச் சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாதத் தொகுப்பூதியம் ரூ.20,000.
அலுவலக உதவியாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதத் தொகுப்பூதியம் ரூ.13,000. இரு பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்குக் குறைவானவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
மாவட்ட நிர்வாக இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். கல்விச் சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் அனுபவச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை இணைத்து அஞ்சல் அல்லது கூரியர் மூலம் அனுப்ப வேண்டும். இரண்டு பணிகளுக்கும் விண்ணப்பிப்பவர்கள் தனித்தனி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பழைய மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி – 636705.
அக்டோபர் 16 கடைசி நாள்
விண்ணப்பங்கள் 16 அக்டோபர் 2026 அன்று மாலை 5.45 மணிக்குள் அலுவலகத்தைச் சென்றடைய வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத அல்லது உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 6382612276 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
