ஐபிஎல்: சென்னை – மும்பை மோதல்..பலம்..பலவீனம்.. யாரு கெத்து?

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் இன்று தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்க இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக 6 மாதங்கள் கழித்து ஐக்கிய அரபு அமிரகத்தில் இன்று தொடங்க உள்ளது.

வீரர்களை உற்சாகப்படுத்த மைதானத்தில் குவியும் ரசிகர்கள், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள், நடன அழகிகள் என பிரம்மாண்டமாக நடைபெறும் ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு எளிமையான முறையில் நடைபெற உள்ளது.

அபுதாபியில் ஷேக் சையது மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில், பரம எதிரிகளாக கருதப்படும் தோனி தலைமையிலான சென்னை,
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை ஆகிய அணிகள்
விளையாட உள்ளன. கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்கு பழி தீர்க்க சென்னை அணியும், இந்த முறையாவது தொடரை வெற்றியுடன் தொடங்க மும்பை அணியும் முனைப்பு காட்டுகிறது.

சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால், முதல் போட்டியே அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த இரு அணிகளும் 28 முறை மோதிய நிலையில், மும்பை அணி 17 முறை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியை பொறுத்தவரையில், வாட்சன், டூப்லெசி, ஜடேஜா, ராயுடு, பிராவோ ஆகியோருடன் கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டத்தையே பேட்டிங் வரிசை நம்பியுள்ளது. பந்துவீச்சில், ஷ்ரதுல் தாகூர், இம்ரான் தாகீர் ஆகியோருடன் பிராவோ, ஜடேஜா போன்ற ஆல்-ரவுண்டர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெய்னா இடத்தை நிரப்பபோவது யார் என்பது கேள்விக்குறி ஆக உள்ளது.

மும்பையை அணியில் அதிரடிக்கு பஞ்சமில்லாமல் ரோகித், டி காக், லெனின், சூர்யாகுமார் யாதவ், பாண்டியா சகோதரர்கள், பொல்லார்ட், இஷான் கிஷான் என பலர் வரிசை கட்டி நிற்கின்றனர். மலிங்கா தொடரில் இருந்து விலகிய நிலையில், பந்துவீச்சில பும்ராவிற்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அதுபோக போல்ட், மெக்லனகன் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

இரு அணிகளும் வரிந்து கட்டுவதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Exit mobile version