கொரோனாவால் உயிரிழந்த 2800 பேர் குடும்பத்தினருக்கு வேலை- ரெயில்வே துறை அறிவிப்பு

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி இதுவரை ரெயில்வே துறையில் வேலை பார்த்து வந்தவர்களில் 3,256 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் ரெயில்வேயில் வேலை தர வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் தொற்றால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வேலை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது அத்தியாவசிய தேவைக்காக தொடர்ந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

அப்படி பணியில் இருக்கும் போது பல ரெயில்வே ஊழியர்கள் பலர் கொரோனா தாக்கி உயிரிழந்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி இதுவரை 3,256 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் ரெயில்வேயில் வேலை தர வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் வற்புறுத்தி வந்தன.

உயிரிழந்தவர்களில் அதிகாரிகளில் இருந்து கடைநிலை ஊழியர்கள் வரை அடக்கம். அவர்கள் குடும்பத்தினரின் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இதை ரெயில்வே துறை பரிசீலித்தது. அதைத் தொடர்ந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வேலை வழங்க முடிவு செய்தனர்.

3,256 பேர் இறந்தாலும் குடும்பத்தினருக்கு வேலை கொடுக்கும் தகுதியை 2,800 பேர்தான் பெற்று இருந்தனர். அவர்கள் குடும்பத்தில் இருந்து ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதில் பெரும்பாலும் கடை நிலை ஊழியர் பணி ஆகும். சிலருக்கு உரிய கல்வித்தகுதி இல்லை. தேவையான உயர் கல்வியை பெற்றதற்கு பிறகு உரிய வேலைவாய்ப்பு தரப்படும்.

சில குடும்பங்களின் வாரிசுகள் சிறுவர்களாக உள்ளனர். அவர்களுக்கு 18 வயதானதும் வேலை வழங்கப்படும். பெரும்பாலான வேலைகள் 4 மாதத்துக்குள் வழங்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version