ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய அணியில் வீரர்களின் காயம் காரணமாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. 4 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் என மிக நீளமான தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது; இந்திய அணி கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று டெஸ்டுகளில் இடம்பெற மாட்டார். அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்டுக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பி விடுவார். காயம் மற்றும் ஓய்வு காரணமாக ஒருநாள், டி20 தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா தேர்வாகியுள்ளார்.
இந்திய ஒருநாள் அணியில் கூடுதல் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதமியில் சிகிச்சை பெற்று வருகிறார் இஷாந்த் சர்மா. முழுமையான உடற்தகுதியை அடைந்த பிறகு இந்திய டெஸ்ட் அணியில் அவர் இணைத்துக் கொள்ளப்படுவார்.
காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து வருண் சக்ரவத்தி விலகியுள்ளார். இதனால் தமிழக வீரர் டி. நடராஜன் இந்திய டி20 அணிக்குத் தேர்வாகியுள்ளார். ஐபிஎல் போட்டியில் சஹாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அவருடைய நிலைமை குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். கமலேஷ் நாகர்கோட்டி ஆஸ்திரேலியாவுக்குச் செல்லமாட்டார். மருத்துவக் குழுவினர் அவரைக் கண்காணித்து வருகிறார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.