கொரோனா மரணத்தை கணக்கிட ஏன் புதிய கமிட்டி அமைக்க வேண்டும்? தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் கொரோனா மரணத்தை கணக்கிட ஏற்கனவே 39 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், புதியதாக கமிட்டி அமைப்பது ஏன்? என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் 20ல் வெளியிடப்பட்ட அரசாணைப் படி கொரோனா மரணங்களில் விடுபட்ட கணக்குகளைத் தணிக்கை செய்வதற்காக அரசின் சார்பில் 38 மாவட்ட கமிட்டிகளும், 1 மாநில அளவிலான கமிட்டியும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஜூலை 11 நிலவரப்படி அத்தகைய கமிட்டிகள் அமைக்கப்பட்டது பற்றியோ அதன் அறிக்கைகள் பற்றியோ பொதுமக்களுக்கு அறிவிக்கவில்லை.

ஜூன் 11-ல் அரசாங்கத்தின் இரு துறைகளின் மரணக் கணக்கில் உள்ள வேறுபாட்டைக் கணக்கிடுவதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. 6 வாரகால மறு ஆய்வுக்குப் பிறகு, 444 கொரோனா மரணங்கள் புதிதாகப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. மறைக்கப்பட்ட இந்த கொரோனா மரணங்கள் வெளிப்பட்டதன் காரணமாக, ஜூலை10 வரை சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் விகிதம் 2.67% என்ற உண்மை வெளிப்பட்டது.

63% மரணங்களை அ.தி.மு.க அரசு மறைத்து மோசடி செய்ய முடிந்திருக்கிறது என்றால், இந்த அளவுக்கு நிர்வாகக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கும் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

மதுரையில் ஏற்பட்ட கொரோனா மரணங்கள் குறித்த தொடர் விசாரணையில், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட மரணங்களின் எண்ணிக்கைக்கும் மயானப் பதிவேடுகளில் உள்ள எண்ணிக்கைக்கும் முரண்பாடுகள் தெரிகின்றன. ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலின் அடிப்படையில் பார்த்தால், அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தால் மதுரையில் ஏற்பட்ட உண்மையான மரணங்களின் எண்ணிக்கையைக் கண்டறிய மற்றொரு விசாரணை தேவைப்படுகிறது.

புதிய கமிட்டி ஏன்?மறைக்கப்பட்ட மரண எண்ணிக்கை தொடர்பான விசாரணைக் கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையில் இதுநாள்வரை, 63 சதவீதம் மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது எனக்கொண்டால், தமிழ்நாட்டில் கொரோனா மரண விகிதம் என்பது 3.66 சதவீதம் ஆகும். சென்னையில் மட்டும் அது 4.47 சதவீதம் என்ற அளவில் இருப்பதையும் அறிய முடியும். முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் அதிகாரிகளும் காட்டுகிற மரண விகிதத்திற்கும் உண்மையான மரண விகிதத்திற்குமான வேறுபாடு பெரிய அளவில் உள்ளது. மரணக் கணக்கில் உள்ள தவறுகளைத் திருத்துவதற்காக ஏற்கனவே 39 கமிட்டிகளை அமைப்பதாகச் சொல்லியிருந்த அரசு ஏன் புதிதாக ஒரு கமிட்டியை அமைக்கவேண்டும்?

ஜூலை 24 அன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், இனி தவறான கணக்கீடுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட – குறைந்த அளவிலான மரண எண்ணிக்கை கொண்ட அறிக்கைக்கு முரணாக மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எண்ணிக்கை வெளிப்படக்கூடாது என்பதற்கான மறைமுக எச்சரிக்கைதான் இந்த கடிதமா?. இவ்வாறு ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version