அன்று வழக்கத்தை விட தாலுக்கா அலுவலகத்தில் பொதுமக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. அலுவலகத்திற்கு வந்து இருக்கையில் அமர்ந்த பின் ஊழியர்களின் வருகைப்பதிவேட்டை சரிபார்த்து முடித்து விட்டு தொடர்ச்சியாக பொது மக்கள் கொடுத்த மனுக்களையும் அலுவலக ஊழியர்கள் தன் மேசை மீது வைத்திருந்த கோப்புகளையும் சரிபார்த்து மைகெயழுத்திட்டு போஸ்டமேன் கொண்டு வந்த தபால்களை வாங்கி பதிவு தபால் சதாரண தபால் என்று பிரித்து வட்டாட்சியர் பார்வைக்கு பதிவேட்டில் வைத்து விட்டு செக்ஷன்கிளார்க் ஒருவர் வைத்திருந்த நீண்ட நாள் நிலுவைக் கோப்பை எடுத்து இருக்கையில் அமர்ந்து தலை குனிந்தவாறே கவனமாக படித்துக்கொண்டிருந்த துணை வட்டாட்சியர் விஜயன். ”சார்…” என்ற மரியாதை கலந்த பணிவான குரல் கேட்டு நிமிர்ந்துப் பாரத்தான் சுமார் முப்பது வயது தக்க இளைஞன் தோளில் ஒரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு அவன் எதிரே நின்றிருந்தான்..பார்ப்பதற்கு ஓரளவு படித்தவன் போல் இருந்தான் குழந்தை அவன் தோளில் முகம் புதைத்திருந்தது. இதமாக அதன் முதுகி்ல் தட்டிக் கொடுத்துக் கொண்டே. தன் முகத்தைப் பார்த்த விஜயனுக்கு மறுபடியும் ”வணக்கம் சார்” என்றான் இளைஞன்.
” என்னப்பா என்றான்” அவனைப்பாரத்து..
”சார் என் பொண்ணுக்கு ஆதார் அட்டை எடுக்கனும் இந்த அப்ளிகேஷன்ல ஒரு அட்டஸ்டேஷன் கேட்குறாங்க… அதான் சார் கிட்ட அட்டஸ்டட் வாங்கலாம்னு வந்தேன்…” என்றான்.அந்த இளைஞன். பெரும்பாலும் இந்த மாதிரி தெரியாத முகங்கள் யாரும் ஆதார் அட்டைக்கு அட்டஸ்டேஷன் கேட்டு வந்தால் ”ஏம்பா எங்களுக்கு இருக்குற வேலையில் இது வேறயாக்கும்.. போய் உங்க ஊர்ல ஏதாச்சும் வாத்தியார் இருந்தா வாங்கிட்டு போங்க… என்று எரிந்து விழுவான். சமயத்தில் ரொம்பவும் பரிதாபமான முகங்களைப் பாரத்தால் யாராவது தெரிஞ்சவங்கள அழைச்சிட்டு வாங்க…” என்று சொல்லி கொஞ்சம் தளர்வு கொடுத்து அட்டஸ்ட் பண்ணுவான். அனால் என்னவோ இந்த இளைஞனைப் பார்த்த அவன் ஏதும் சொல்லவில்லை.
”எந்த ஊருப்பா….”
அந்த இளைஞன் பக்கத்திலிருக்கும் ஒரு ஊரைச் சொன்னான்.
”பொண்ணுக்கு எத்தனை வயசாகுது..”
அவன் ஏதும் யோசிக்காமல் ”பதினாறு வயசாவுது சார்..” என்றான்.
விஜயனுக்கு துாக்கி வாரி போட்டது. என்னது பதினாறு வயதா.. இரண்டடிக்கும் குறைவான வளர்ச்சியில் சிறிய பாவாடை சட்டையைப் போட்டுக்கொனடு அவன் தோளில் முகம் புதைத்தவாறே இருக்கும் காட்சியைப்பார்த்து அதை ஒரு குழந்தையாக நினைத்து விசாரித்தவனுக்கு அந்த இளைஞன் தான் வைத்திருக்கும் குழந்தைக்கு பதினாறு வயது என்றதும் அவனால் நம்ப முடியவில்லை. ”என்னப்பா சொல்ற குழந்தையோட முகத்த சாரி… உன் பொண்னோட முகத்தை காட்டு என்று அவன் சொன்னதும் குழந்தையிடம் ”எழுந்திருடா செல்லம்.. எனறு இளைஞன். கூற தோளில் முகம் புதைத்திருந்த அது உடனே தலைநிமிர்ந்து திரும்பிப் பாரத்தது. அதன் முகத்தைப் பார்த்த விஜயனுக்கு இன்னும் அதிர்ச்சி கூடியது. உண்மையில் அது உடலிலும் உடையிலும் தான் குழந்தையே தவிர முகத்தைப் பார்த்த போது அது பருவ வயது பெண்ணின் வளர்ச்சிக்குரிய முகமாக இருந்தது கண்டு அவன் கண்களை அவனாலயே நம்ப முடிய வில்லை.
”என்னப்பா இது உன்னோட பொண்ணு தானே..” என்றான் விஜயன்.
”ஆமா சார்…” என்றான் அந்த இளைஞன்.
”எப்படி இது… பிறந்துலேயே இருந்து இப்படி தானா…”
”ஆமா சார்….”
”ஏதும் டாக்டர்கிட்ட காட்டினீங்களா…”
”நெறைய டாக்டர்கிட்ட காட்டுனோம் சார் ஒன்னும் குணமான பாடில்லை.. அதுக்கு மேல ஆண்டவன் விட்ட வழின்னு நானும் என் வொய்பும் கவனிச்சுக்குறோம் சார்….. என்றான். என்னமோ தெரியவில்லை அவனையும் அந்த குழந்தையையும் பார்த்த பின்பு விஜயனுக்கு அவன் படித்துக் கொண்டிருந்த கோப்பின் மீது நாட்டம் குறைந்து அவனைப் பற்றியும் அந்த குழந்தையைப் பற்றியும் விசாரிப்பதில் அவன் மனது சென்றது. அலுவலகத்தில் கொஞ்சம் கூட்டம் குறைந்திருந்ததால் அந்த இளைஞனிடம் மேலும் பேச்சு கொடுத்தான்… ”ஏம்பா பார்க்குறதுக்கு சின்னப் பொண்ணா இருந்தாலும் வயசுல பெரிய பொண்ணா இருக்கே.. ஏன் அவங்க அம்மா வர்லயா..” என்றவனிடம் வந்திருக்கு சார்.. இதுக்கு கொஞ்சம் மருந்து வாங்க வேண்டியிருந்துச்சு.. அதான் பக்கத்துல இருக்கிற மெடிக்கல் ஷாப்ல மருந்து வாங்கிட்டு வந்துடுறேன்னு போயிருக்கு ”என்றான்.
பேசிக் கொண்டிருக்கும்போதே அவன் மனைவியும் வந்து விட்டாள். குழந்தை தோற்றத்தில் இருந்த அந்த இளம் பெண் அவளைப் பார்த்தவுடன் சிரித்தது. சிரித்த போது பற்கள் கூட குழந்தையின் பற்களைப் போன்று சிறிதாக இருந்தது. கண்ட விஜயனுக்கு என்னவோ போலாகியது. கடவுளின் படைப்பில் எத்தனை மாற்றங்கள் வினோதங்கள். ஆச்சர்யங்கள் மனதுக்குள் நினைத்துக்கொண்டே வந்திருந்த இளைஞனின் மனைவியைப் பார்த்தான். அவளுக்கு ஒரு முப்பத்தியைந்து வயதுக்குள் தான் இருக்கும். அவளுக்கும் கணவன் என்று சொல்லும் அந்த இளைஞனுக்கும் பெரிதாக வயது வித்தியாசம் தெரியாதது போல் இருந்தது. அவளும் நல்ல உடற் வாகோடு எந்த குறையும் இல்லாமல் மாநிறத்தில் நல்ல குடும்ப பாங்கான தோற்றத்தில் இருந்தாள். இளைனும் நல்ல ஆரோக்கியமாகத்தான் தெரிந்தான். பின் எப்படி இவர்களுக்கு இப்படி ஒரு குழந்தை என்று யோசித்தவன் மனதில் இந்த குழந்தையின் வயதுக்கும் இளைஞனின் வயதுக்கும் தெரியும் வித்தியாசமும் ஒன்றும் பெரிதாக தெரியவில்லையே எப்படி ஒரு வேளை சீக்கிரம் திருமணம் செய்து விட்டானோ… சிந்தனைகள் விஜயன் மனதில் ஓடிக் கொண்டிருந்த போது அவனின் மனைவியை நன்கு பார்த்தான். அவளை எங்கோயோ பாரத்தது போல் இருந்தது அவனுக்கு.
எங்கு பாரத்திருப்போம் என்று நினைவலைகளை விரித்தவனுக்கு ஒன்றும் புலப்படவில்லை. ஆனாலும் கண்டிப்பாக அவளை எங்கேயோ பாரத்திருக்கிறோம் என்ற எண்ணம் மட்டும் அவன் மனதில் ஓட ஆரம்பித்தது. கடைசியில் அவனாகவே கேட்டு விட்டான். ”ஏம்மா உங்களை எங்கோயோ பாரத்த மாதிரி இருக்கு.. அவள் சிரித்துக் கொண்டே .. ஆமா சார் ஏழு வருஷத்துக்கு முன்னால நீங்கதான் எங்க ஊர்ல ஆர். ஐ. யா இருந்தீங்க நான் சர்டிபிகேட் வாங்க உங்க ஆபீஸ்க்கு வந்திருக்கேன் என்றாள்.. சர்டிபிகேட் என்று சொன்னாளே தவிர என்ன சர்டிபிகேட் என்று அவள் சொல்ல வில்லை. ஆனாலும் அவனுக்கு இவள் என்ன சர்டிபிகேட் வாங்க வந்தாள் என்று ஞாபகம் வந்தது. அப்போது அவள் ஒல்லியாக சின்ன பெண்ணாக இருந்தாள் தன் நிலையைச் சொல்லும் சொல்லும் போது அவள் தேம்பி தேம்பி அழுத காட்சி இவன் மனதில் நன்கு பதிந்திருந்தது.
நான் நினைக்கும் அவளாக இருந்தாள் எப்படி இவள் இப்போது கணவன்.. பூ… பொட்டு.. குழந்தை என உடல் வாகு மாறி.. மங்களகரமாக காட்சியோடு நிற்கிறாள். என்று குழப்பாக இருந்தது அவனுக்கு. அதற்குள் அவள் கணவன் குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு ஆதார் எடுக்கும் இடத்தில் கூட்டம் குறைந்து விட்டதா என்று பார்த்து வருகிறேன் என்று அலுவலகத்தில் மேல் மாடியில் உள்ள அந்த அலுவலகத்திற்கு சென்றான். ஆதார் எடுப்பதற்கான அப்ளிகேஷன் பாரத்தில் அட்டெஸ்ட் போடுவதையே மறந்து விட்டு அவர்களை அறிவதிலேயே விஜயன் மூழ்கிப்போனான்.
அவன் சென்ற பிறகு விஜயன் சற்று தயங்கியவாறே ”ஏம்மா நீங்க உங்க கணவன் இறந்துட்டார்னு அப்போ விதவைச் சான்று கேட்டு வந்தீங்களே நீங்க தானே அது…. அவள் மறுப்பேதும் சொல்லாமல் ஆமா சார்… என்றாள்.
”அப்புறம் மறுபடியும் கல்யாணம் பண்ணிகீட்டிங்களா…. தயங்கியவாறே கேட்டான். கேட்டுவிட்டு தப்பா நெனக்காதம்மா என்று சொல்லிக் கொண்டான்
” பரவாயில்ல இதிலென்ன சார் தப்பு.. என்ன பண்றது பதினாலு வயசுலேயே சொந்தம் விட்டுப் போயிடக்கூடாதுன்னு. அத்தை பையனுக்கு கட்டி வச்சாங்க ரெண்டு குழந்தை பொறந்த பிறகு என்னோட சண்டை வம்பு போட்டுகிட்டு திடீர்னு மருந்த குடிச்சுட்டு என்னையும் என் குழந்தைகளையும் அம்போன்னு விட்டுட்டு போயிட்டாரு.. மரியாதையோடு சொன்னாள். ”அதுக்குப்பிறகு கல்யாணம் காட்சி எதுவும் வேண்டாமுன்னு இருந்தேன்.. ஆனா எதிர்காலத்துல பாதுகாப்பு வேணும் அது வேணுமின்னா சொல்லி என் மனச மாத்தி பெரியவங்களா பார்த்து அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இவர பா்ர்த்து கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க…” என்று சொல்லி முடித்தாள்.
”அப்போ இந்த குழந்தை..”
”இது என்னோட குழந்தைதான் சார்.. ஆனா அப்பா இவரில்ல செத்துப் போன என்னொட முதல் கணவர்தான். இந்த குழந்தைக்கு அப்பா..” என்றாள். விஜயனுக்கு தான் நினைத்தது சரியாக இருந்தது போல் தெரிந்தது. தொடர்ந்து அந்த பெண் கூறினாள். ”இவ பிறந்திலேயிருந்து சரியா வளர்ச்சியும் இல்ல பேச்சும் ஒழுங்கா போசாது.. சாப்பாட ஊட்டிதான் விடனும் நல்லது கெட்டது எல்லாமே நாங்கதான் செய்யனும் எல்லாதுக்கும் மேல பதினாறு வருஷமா மல்லாக்கதான் சார் படுத்திருக்கிறா…. நாங்களாதான் ஒருக்கணிச்சு வச்சு படுக்க வைக்கனும்.. ..” சொல்லும் போது அவளுக்கு அழுகை முட்டியது.
”ஆனா மனசுல அதப்பத்தியெல்லாம் எதுவும் நெனைக்காமா எந்த குறையும் இல்லாம நல்லபடியா இந்த பொண்ணையும் என் பையனையும் பார்துக்கிறார் சார் இவரு.. ” தங்கமான மனுஷன்.. கடவுள் ஒரு கதவ பூட்டினா இன்னோரு கதவ திறப்பாருங்க மாதிரி அந்தரத்துல விட்டுட்டு போன அவருக்கு பதிலா நல்லா மனுஷனா நல்ல படியா எங்கள கவனிச்சுக்கிறதுக்கு இன்னொருத்தர எனக்கு கொடுத்திருக்காரு கடவுள்,,, ” என்று சொல்லும் போது அவள் கண்கள் குளமாகியது. புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள்.
நீ்ண்ட நாள் நிலுவைக் கோப்பை எடுத்து படிக்க ஆரம்பித்த விஜயனுக்கு சோகமான நீண்ட கதையை கேட்டு மனது பாரமாகிப் போனது. அதற்குள் அந்த இளைஞனும் வந்து விட்டான்.. அவனைப் பாரத்ததும் அநத பெண்ணிடம் இருந்த அந்த குழநதை வடிவ பெண் அவனை பார்த்து சிரித்துக் கொண்டே அவனிடம் தாவியது. அதற்கும் மேலும் அவர்கள் கதையை கேட்க மனமில்லாமல் ஒரு வழியாக விஜயன் குழந்தை வடிவத்தில் இருந்த அந்த பெண்ணுக்கு அட்டஸ்டேஷன் போட்டுக் கொடுக்க அவர்கள் அங்கிருந்து நகர்ந்தார்கள்.
அந்த இளைஞனைப் பார்த்த போது விஜயனுக்கு சிறுவயதில் கேள்விப்பட்ட சம்பவம் நினைவுக்கு வந்தது தன் முட்டையை கூடு கட்டி அடைகாக்க முடியாத சோம்பேறி குயில்கள் எல்லாம் காகங்கள் கூட்டில் முட்டையிட்டு சென்று விடுமாம் காகங்கள் அடைகாத்து குஞ்சுகள் வெளிவந்த பின் தன் குஞ்சுகள் என்று நினைத்து வளர்க்குமாம் வளர்ந்த பின் குயில் குஞ்சுகள் கூவுவதைப் பார்த்து அதை கொத்தி துரத்துமாம்… அனாலும் தான் வளர்ப்பது ஒரு குயில் குஞ்சு என்றும் அதிலும் ஊனமுற்றது என்று தெரிந்தும் அந்த குழந்தை வடிவ பெண்ணிடம் எந்த வித வெறுப்பையும் எதிர்ப்பையும் காட்டாமல் அந்த இளைஞன் காட்டும் அன்பையும் பாசத்தையும் பார்க்கும் போது அவன் வித்தியாசமான காக்கையாக தெரிந்தான் விஜயன் கண்களுக்கு.
****