பலமுறை பாபு கணபதியை தொடர்பு கொண்டும் கணபதியின் செல்போன் சுவிட்ப் ஆப்பிலே இருந்தது. “வேலை இல்லாத நேரத்தில போன் பண்ணி சாகடிப்பானுவ. இப்ப போன் பண்ணிணா சுவிட் ஆப்பிலே இருக்கு. இப்ப யார கூப்பிடறது.” என்று மூர்த்தி புலம்ப “ஏங்க, சூட்டிங் போயிருப்பானோ.” மனைவி புஷ்பா கேட்க, “இல்ல… இல்ல போன வாரம் கூட போன் பண்ணி வேலை கேட்டான். ஐயங்காரு வேல. கணபதியைவிட பாஸ்கரன் நல்லா வேலை செய்வான். கறுப்பா இருக்கான். இல்லண்ணா பாஸ்கரனைக் கூப்பிட்டு போயிருக்கலாம். நேத்து கூட போன் பண்ணி வேல கேட்டான். பாவம்”
“நீங்க நடேசன கூப்பிடுங்க.”
“வெள்ளையா இருந்தா மதியா வேல செய்யிணுமில்ல. அவனுக்கு ஒரு வேல குடுத்த அத போய் நம்ம சரி பண்ணனும். தலவலி.”
“ஏங்க, பாஸ்கரனும், கணபதியும் ஒரே ரூம்மேட் தானே. பாஸ்கரனுக்கு போன் பண்ணி கேட்டா கணபதியைப் பற்றித் தெரிஞ்சுக்கலாம்.”
“போடி, அவனுக்குப் போன் பண்ணினா எனக்கு வேலை தராம அவனுக்கு மட்டும் வேலை குடுக்குறீங்கண்ணு பேசுவான்.”
“ஏங்க, அவன் கிட்ட சொல்லுங்க ஐயங்கார் வேலைன்னு. அசிஸ்டெண்ட் டைரக்டர் தானே புரிஞ்சுக்குவான்.” மூர்த்தி கொஞ்ச நேரம் யோசிக்க, “ஏங்க, போன் போட்டு குடுங்க. நா பேசுறேன்.” அமைதியாக இருந்த பாபு “வேண்டாம் வேண்டாம், நானே பேசுறேன்.” என்று சொல்லி பாஸ்கரனுக்கு போன் போட்டார்.
“அண்ணே வணக்கம்.”
“வணக்கம் பாஸ்கரன். கணபதி இருக்கானா? இல்ல, சூட்டிங் எங்கையாவது போனானா. போன் போட்டா சுவிட்ச் ஆப்பிலே இருக்கு.”
“ரூம்ல தான் இருக்கான் அண்ணே.”
“குடு.”
“அண்ணே, நா டீ சாப்பிட கடைக்கு வந்தேன்.”
“நீ ரூமுக்கு போன உடனே கால் பண்ணச் சொல்லு.” முகம் வாடியது.
“என்னண்ணே வேலையா.” தயக்கத்தோடு கேட்க,
“ஆமா பாஸ்கரா…. அம்பது பேரு சாப்பாடு. ஐயங்கார் வீடு. இல்லன்னா உன்ன அழச்சீட்டு போயிருக்கலாம்.”
“இதெல்லாம் எப்ப மாறும். மனிசன மனிசனா பார்க்காத வரைக்கும் அழிவு தான்.”
“பாஸ்கரா, நீ சொல்லுறதில எனக்கு எந்த முரணும் இல்ல. என்னுடைய பொழப்பு ஓடுதது இவங்கள வச்சு தான். எனக்கு வேலை வந்தா உன்னபோல அசிஸ்டெண்ட் டைரக்டர் வயிறும் நிறையும் மட்டுமில்ல கூட எத்தன பேரு வேல பாக்கிறாங்க.”
“அண்ணே, வேலை இருந்தா சொல்லு. தேதி பத்து ஆகுது. வாடகை இன்னும் கட்டல. மாஸ்டருக்கு சப்போட்டா கூட வேலை இருந்தா சொல்லுங்க.”
“பாஸ்கரன், உன்னுடைய நிலைமை எனக்கு நல்லா தெரியும். வறது ஐம்பது, இருபத்து அஞ்சுண்ணு வேல வந்தா நா யாருக்கு வேல குடுக்கிறது. இவங்க வேலை போயிட்டு என்ன வேலை வந்தாலும் கூப்பிடுகிறேன்.”
“செரி அண்ணே.”
“நீ ரூமுக்கு போனா கணபதியிடம் மறக்காம கால் பண்ணச் சொல்லு.”
“செரி அண்ணே.” என்று போனை பாக்கெட்டில் வைக்க “சார், லெமன் டீ றெடி” கடைக்காரன் சொல்ல, கடைக்காரனிடம் சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டு, லெமன் டீயை எடுத்துக்கொண்டு கடையிலிருந்து வெளியே வந்தான். ஒரு வாய் லெமன் டீயை குடிக்க, அடுத்து சிகரெட்டைப் பற்றி இழுத்தான். “டைரக்டர் ஆகணும்னு வந்து எதேதோ வேலை பாக்கிறோம். தேடிச் செல்லும் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் போது வாழ்க்கை அழகாகும். தேடலை விட்டு விட்டு வயிற்றையும், வாடகையும் நிரப்ப இனி எத்தனை காலம் ஓடுவது. கொஞ்சம் காசு கெடச்சா எங்கையாவது போய் ஸ்கிரிப்ட றெடி பண்ணலாம். நல்ல சினிமா குடுக்கணும். நான் வாழும் வாழ்க்கை ஏதோ ஒரு விதத்தில் பூமிக்கு அர்த்தமுள்ளதாக மாறணும். அது நாம் பூமிக்கு கொடுக்கும் சிறப்பு ஆகும்.” என்று எல்லாம் யோசித்தவாறு டீயையும், சிகரெட்டையும் சேர்த்துக் குடித்துவிட்டு, கடைக்காரனிடம் ஐம்பது ரூபாய் தாளை நீட்டினான். அவன் மீதிக் காசைக் கொடுக்க வாங்கிக்கொண்டு ரூமை நோக்கி நடந்தான்.
கணபதி ரொம்ப மகிழ்ச்சியிலே இருந்தான். மும்முரமாக எழுதிக்கொண்டிருந்தான். பாஸ்கரன் பார்த்தும், எதுவும் பேசாமல் நாற்காலியில் வந்து அமர்ந்தான். பொருளாதாரப் பிரச்சனை அவனுக்கு நெருக்கடி கொடுத்ததால் அவன் மனம் நிலையில்லாமல் குழப்பமாக இருந்தான். எதையும் ரசிக்க, படைக்க, கேட்கத் தோன்றவில்லை. இனி எத்தனை நாள் இப்படியே சென்னையில். பொருளாதாரப் பிரச்சனை இருக்கும். ஓடணும், தேடணும் என்று எல்லாம் யோசித்துக் கொண்டிருக்கையில் “டேய் பாஸ்கரா.” என்று அழைத்தவாறு கணபதியின் அருகில் சென்றான். பாஸ்கரன் அவனைப் பார்க்க, “டேய், ஸ்கிரிப்ட் கிளைமேக்ஸ் நேத்து சொன்னதை விட வேற மாதிரி மாத்திருக்கேன். நல்லா வந்திருக்கு. கேட்கிறியா.” பாஸ்கரன் அவனை முகத்தைப் பார்த்தான்.
“அதாண்டா ஹீரோவுடைய தம்பி கலெக்டருன்னு தெரிஞ்சதும் ஹீரோவும் நண்பனும் தனது ரவுடித் தொழிலை விட்டுவிட்டு சரண்டர் ஆக வரும்போது சதியில ஹீரோ கொல்லப்படுகிறான். எப்படிடா இருக்கு.” பாஸ்கரன் சிரித்தான்.
“எதுக்கடா சிரிக்கிற. நீ ஒரு கத சொல்லு.”
“டேய்….. நீ சொன்னது தளபதி படம் மாதிரி இருக்கடா.”
“இருக்குமடா. இன்ஸ்பயர் தாண்டா. எந்தப் படம் எடுத்தாலும் ஏதாவது ஒரு படத்தோட இன்ஸ்பயர் இருக்கும்.”
“போடா…. நீ பண்ணிவச்சிருக்கிறது இன்ஸ்பயர் இல்ல. காப்பி.”
“இருக்கட்டும். அட்லி ஜெயிக்கலியா. பாரு, இண்ணைக்கு போலிவுட்டில போய் படம் பண்ணுறான். இருபது கோடிக்கு மேல சம்பளம் வாங்கிறான்.”
“போ அவன் கூட போ.”
“உனக்கு பொறாமைதான்டா.”
“டேய், இனி மேல் எங்கிட்ட ஒரு கதையும் சொல்லாத.”
“ஏண்டா நா எத்தனை கதை சொல்லுறேன். ஒரு கத கூட நீ சொன்னது இல்ல. நீயெல்லாம் எப்படி படம் பண்ணப் போறீயோ.” பாஸ்கரன் அவனைப் பார்த்துச் சிரித்தவாறு, “போடா டேய்….. எனக்கு கத பண்ணத் தெரியாது. முடிஞ்சா எனக்கு ஒரு கத பண்ணிக்குடு.”
“தெரியாதுன்னா எதுக்கடா இந்த வேலையில இருக்க?. உனக்கு சமையல் வேல தான் செரியாகும்.”
“ஐயோ மறந்திட்டேன்…பாபு அண்ணன் கூப்பிட்டாரு. என்னன்னு கேளு. உனக்க போன் சுவிட்ச் ஆப்பில இருக்காமே.”
“ஆமா, ஸ்கிரிப்ட் எழுதும் போது யாராவது டிஸ்றப் பண்ணுவாங்கனு சொல்லி சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கேன்.” பாஸ்கரன் தலையைத் தடவிக்கொண்டு, பற்களைக் கடித்துக்கொண்டு வலதுகையை நீட்டி “போடா டேய் போ….” கணபதி சிரித்தான்.
“அந்த ஆளுக்கு வேலைன்னா மட்டும் தான் கண்ணு தெரியும். கடன் எதாவது கேட்டுப்பாரு, பத்து பைசா கூட இல்லன்னு சொல்லுவான். அவன் பேச்சை கேட்டா சென்னையில இவனமாதிரி பரதேசி யாரும் இல்லன்னு பேசுவான்.” என்று பேசியவாறு செல்போனை ஆன் செய்து பாபுவுக்கு கால் பண்ணினான்.
“அண்ணே, வணக்கம்.”
“எதுக்கடா சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்க.”
“இல்லண்ணே…. எனக்கே தெரியாம சுவிட்ச் ஆப் ஆயிருக்கு.” என்று சொல்லியவாறு பாஸ்கரனைப் பார்த்தான். பாஸ்கரன் அமைதியாக இருந்தான். “அதுதாண்டா ஐயங்காரு வேலை. அம்பது பேருக்கு சர்வீஸ். நானும் கூட வாறேன்.”
“செரி அண்ணே…..”
“அப்புறம் வெள்ளை வேட்டி, சட்டை போடாம வந்தாலும் பரவாயில்ல, மறக்காம பூநூல் போட்டுக்கோ.”
“செரி அண்ணே.”
“கணபதி, ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடு. பத்து மணிக்கு சாப்பாடு கேட்டிருக்காங்க.”
“சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கில்ல. பாத்து வந்திடு.” என்று சொல்லி போனை வைக்க, பாஸ்கரன் நாற்காலியிலிருந்து எழுந்து, திரும்பவும் சிகரெட்டைப் பற்ற வைத்தான். கணபதி அவனைப் பார்த்து “அண்ணன் வேலைக்கு கூப்பிட்டிருக்காரு.”
“சந்தோசம்.”
“டேய்….. உனக்க வெள்ளை வேட்டி வேணும்.”
“டேய்…. வேலைக்குப் போற உனக்கு வாங்கினா என்னா.” அமைதியாக இருந்தான் கணபதி. “போன வாட்டி கொண்டு போய் ஒரே சாம்பார் கறை. அத தொவச்சாவது போட்டியா?. பின்ன நான் தான் தொவைக்கணும்.”
“சாறிடா மறந்திட்டேன்…. இந்த ஒரு வாட்டி குடு.”
“அங்கதான் கிடக்கு எடுத்துக்கோ.” என்று சொல்ல, அலமாரியில் தேடி வேட்டியை எடுத்தான். அவனுக்குள்ளே சந்தோசம் உருவானது. “டேய் பாஸ்கரா, இங்க ஒரு பூநூல் போட்டிருந்தேன் அது எங்கடா.”
“எனக்குத் தெரியாது.”
அறை முழுவதும் தேடினான், கிடைக்கவில்லை.
“இந்தப் பொழப்பிற்கு பட்டினி கிடந்து சாகலாம். அவங்க, அவங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கு. அதையும் நீ களங்க படுத்துற. சக மனிதர்களை நேசிப்பது தாண்டா கடவுள். நீ பண்ணுற இந்த வேலை இன்னொரு விதத்தில சாதிய அரசியல் தான்.”
“இருக்கட்டும். இப்படி அரசியலில இருந்ததால தான் போன மாசம் உனக்க வாடகை சேர்த்து நான் குடுத்திருக்கேன். அப்ப மட்டும் பேசமாட்டிங்க.”
“உண்மை தாண்டா. திரும்பத் திரும்ப நம்ம தவறு செய்றோம்.”
“உனக்கு வாழத் தெரியாது. டீ சாப்பிட வாறியா.”
“இல்லடா.” என்று சொல்ல, “இன்ணைக்கு ஸ்கிரிப்ட் எழுதிற மூடே போச்சு. நூலுவேற வாங்கணும்..”என்று சொல்லியபடி அறையிலிருந்து கணபதி கிளம்பினான்.
மறுநாள் காலையில் பத்துமணிக்கு முன்னாடி ஆட்டோ வந்து நிற்க, வீட்டுக்கு வெளியே நின்றிருந்த நாற்பது வயது மதிக்கத் தக்க பெண் “யமுனா மாமி…யமுனா மாமி…” கூப்பிட, உள்ளே இருந்து ‘இரு’ என்று சத்தம் வந்தது. அவள் அருகில் ஏழு வயது மதிக்கத் தக்க ஒரு பெண் குழந்தையுடன் நின்றிருந்தாள். ஆட்டோவிலிருந்து பாபு இறங்க, பின்னாடியே கணபதியும் இறங்கினான். அதற்குள் யமுனா மாமியுடன் சில மாமிகளும் வெளியே வந்தனர். சாயமும், திளங்கிக்கொண்டிருந்த பட்டுப் புடைவைகளுக்கு நடுவே, சிதறிக்கிடந்த நட்சத்திரங்ககளை விழுங்கிக்கொண்டு பெளர்ணமி நிலவைப் போல், அந்த அழுக்குத் துணியில் அவள் தேவதையாக நின்றாள். கணபதி தேவதையும், தேவதைக்குப் போட்டியாக நின்ற குழந்தையையும் ரசித்தான். குழந்தையைப் பார்த்து கண் அசைக்க, அவள் தலையை இரண்டுபக்கமும் சாய்த்து தயங்கி, தயங்கி நின்றாள்.
“மாமி…………….. நமஸ்காரம்.” பாபு சொல்ல,
“நமஸ்காரம். கரெக்ட் டைமுக்கு வந்திருக்கீங்க.” அருகில் நின்ற மற்ற மாமிகள் பார்த்துச் சிரித்தனர்.
“ஆமா மாமி….. டைம் நமக்கு முக்கியம்.”
“பாபு, சாதம் பரிமாறுதது எல்லாம், மாடியில தான். அங்க எல்லாம் றெடி பண்ணி வச்சிருக்கோம். ஒரு பந்தியில இருபது பேர் உட்காரலாம்”
“செரி மாமி.”
“நா ஒரு இருபது பேர மேல அனுப்புறேன்.”
“மாமி, பத்து நிமிசம் கழிஞ்சு அனுப்புங்க. இது எல்லாம் இறக்கி ரெடி பண்ணனும்.”
“செரி, சீக்கிரம் ஆகட்டும்.” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போக, மற்ற மாமிகளும் பின்னாடியே சென்றனர். பாபுவும், கணபதியும் ஒவ்வொரு பொருளாக எடுத்து மாடியில் ஏற்ற, எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இன்றி அந்தத் தேவதையும், குழந்தையும் உதவி செய்தனர். பொருட்களை எல்லாத்தையும் ஏற்றினர்.
“டேய் கணபதி, சட்டையைக் கழற்றிப் போட்டு இலை எல்லாம் போட்டு தண்ணி வை.”
“செரி அண்ணே.”
“நான் கீழ போய் பாத்திட்டு வாறேன். நாலு பேருக்குத் தெரிஞ்சா தான் வேலை கிடைக்கும்.”
“புரிஞ்சிச்சு.” சட்டையை கழற்ற, பூநூல் அவன் உடலில் திளங்கிக்கொண்டிருந்தது. சில நிமிடங்களில் எல்லா வேலையும் செய்து முடிக்க, அம்மாவும், குழந்தையும் ஓரமாக நின்று பார்த்துக்கொண்டே இருந்தனர்.
“என்ன அக்கா பங்சன்.?.”
“அது. சாமி, யமுனா மாமியோட அப்பா, அம்மாவுக்கு அறுபதாம் கலியாணம்.”
“ஓ அப்படியா.” என்று கேட்டு, கொண்டு வந்த பாத்திரங்களை, ஸ்வீட் கூட்டு, பொறியல், ஊறுகாய், குழம்பு, பாயசம், பழம் எல்லாம் வரிசையாக வைத்துக்கொண்டு, ஸ்வீட் பெட்டியிலிருந்து இரண்டு பாதுஷாவை எடுத்து “இத அக்கா சாப்பிடு.” என்று நீட்ட, அவள் தயங்கினாள். குழந்தை கையை நீட்டினாள். “பாத்தீங்களா..” என்று கேட்டு “செல்லம் உங்க, பேரு.” குழந்தை திரும்பவும் கையை நீட்டிக்கொண்டிருந்தாள். “ஏய், அங்கிள் பேரு கேட்கிறாரு இல்ல. சொல்லு.” அவள் தயங்கியவாறு ‘மீனாட்சி.” என்று சொல்ல, அவன் சிரித்துக்கொண்டு பாதுஷாவை கொடுத்தான். பிறகு அவளிடம் நீட்ட, அவள் வாங்கிக்கொண்டாள். அவன் தண்ணீர் பாட்டிலைத் ஒன்றை திறந்து ‘மட, மட.’ என தண்ணீரைக் குடித்தான்.
“அக்கா தண்ணீ.”
அவள் வேண்டாம் என்று தலையை அசைத்தாள்.
“ நீங்க அழாகா இருக்கீங்க. ஊரு சென்னையா.”
“இல்ல…… தர்மபுரி.”
“அக்கா…… அண்ணன் என்ன வேல செய்யிறாரு.”
“அண்ணன் இவ வயிற்றில இருக்கும்போது ஆக்சிடெண்டில இறந்திட்டாரு.” என்று அவள் சொல்ல, அவள் கண்கள் நிறைந்தன. பாதுஷாவை சாப்பிட முடியாமல் தவித்தாள். மீனாட்சி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் அமைதியாக் இருந்த அவள் “ஆட்டோ ஓட்டிட்டிருந்தாரு. நாங்க ரண்டு பேரும் காதலிச்சு, சென்னைக்கு ஓடி வந்து கலியாணம் பண்ணிட்டோம். இப்போ ஊருக்குப் போக முடியாது. கொன்னிடுவானுவ. அதனால யார் கண்ணிலயும் படாமல் வீட்டு வேல செஞ்சு பொழப்ப ஓட்டிட்டு இருக்கேன்.” என்று சொல்லி மீனாட்சியை உடலோடு சேர்த்து அணைத்து முத்தமிட்டவாறு “நா இப்பொழுது வாழுறது இவளுக்குத் தான்.” என்று சொல்லி, கண் கலங்கினாள். கணபதி சோகமாக நின்றான்.
மாடிப் படியேறி வந்த பாபு, பின்னாடி மாமிகளும் வர, “கணபதி… கணபதி….”
“என்ன அண்ணே?.”
“றெடியா.”
“றெடி அண்ணே.” என்று சொல்ல, அவள் மாடிக்கு வந்தனர்.
முதலில் இருபது பேர் வீதம் இரண்டு பந்தியில் எல்லோரும் சாப்பிட்டனர். சாப்பிட்ட எல்லோருக்கும் சாப்பாடு பிடிச்சிருந்தது. பாபுவுக்கு ரொம்ப சந்தோசம் ஆச்சு. ஒரு மணி நேரத்தில் எல்லோரும் சாப்பிட்டு முடித்தனர்.
“கணபதி……. சாப்பிடிறியா.”
“ஆமா அண்ணே.”
“எனக்கு வேண்டாம். அப்போ உனக்கும் அந்த அம்மாவுக்கும் சாப்பாடு போட்டு சாப்பிடு.”
“செரி அண்ணே. நீங்க போங்க பில் வாங்குங்க.”
“இப்ப போய் நின்னா தான் வேலைக்கு ஆகும்.” என்று சொல்லி கீழே இறங்கினார். கணபதி மூன்று இலைகளை எடுத்து, டேபிள் பக்கமாகச் சென்று,
“அக்கா, பாப்பாவுக்கு எல போடட்டா.”
“வேண்டாம்.”
“எனக்கு மட்டும் போதும். அவ என் கூட உட்கார்ந்து சாப்பிடுவா.”
கணபதி இரண்டு இலைகளைப் போட்டு, தேவையானதை எல்லாம் போட்டுப் பரிமாறினான். “அக்கா………. உட்காருங்க.”
அந்தப் பெண்மணியும், குழந்தையும் வந்து உட்கார்ந்தனர். கணபதி அவளுக்குத் தேவையான சாதத்தைப் போட்டான். “சாமி, எனக்கு ரசம் மட்டும் போதும்.”
“என்னக்கா, பருப்பு இருக்கு, சாம்பார் இருக்கு. டைரக்டா ரசத்துக்குப் போற.”
“ஒண்ணும் வேண்டாம் ரசம் மட்டும் போதும்.” என்றாள். கணபதி சிரித்துக்கொண்டு, ரசத்தை ஊத்த, அவள் சாதத்தைப் பிசைந்து தன் மகளுக்கு ஊட்டியவாறு “சாமி, எனக்கு சாப்பாடு போதும், நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க.”
“என்னக்கா….. போதுமா.”
“போதும் சாமி.”
“நல்லா உழைக்கிறீங்க. சாப்பிடணுமில்ல.” என்று கேட்டவாறு, தேவையான சாதம் போட்டு ரசத்தை ஊத்தினான்.
“சாமி………………… நீங்களும் ரசம்.”
“அதுவா அக்கா?. காரம் சாரமாக இருக்கிறது ரசம் மட்டும் தான்.” அவள் சிரித்தாள். அதற்குள் யமுனா மாமியும் பாபும் மேலே வந்தனர். புஷ்பாவும் கணபதியும் சாப்பிடுறதைப் பார்த்து யமுனா மாமிக்கு கோபம் வந்தது. தன் இனத்தின் உயர்வாலும், கோட்பாட்டாலும் அவள் கண்களில் மனித இரத்தம் வெவ்வேறு நிறங்களில் தெரிந்தது.
“ஏய் புஷ்பா, யார் பக்கத்தில உட்கார்ந்து சாப்பிடுற?. நீ பின்னாடி சாப்பிட்டிருக்கலாம் இல்ல.”
“இல்ல மாமி…. நான் தான் உட்கார வச்சேன்.” கணபதி சொல்ல,
“அவ என்ன கோத்திரமோ. நம்மளோடு உட்கார்ந்து சாப்பிடக் கூடாது இல்ல. எவ்வளவு வேல இருக்கு, முடிச்சிட்டு சாப்பிட்டா செத்தா போவா.” என்று சொல்ல, அணுகுண்டை விட வீரியமிக்க வார்த்தைகளில் அவள் துடித்துப் போனாள். போராட்டம் நிறைந்த தன் வாழ்க்கையில் பழிகளைச் சுமந்து கொண்டு அவள் எழுந்தாள். கணபதி அவளைப் பார்க்கும் பார்க்கும் போது கழுத்து ஒடிந்து, கலங்கியவாறு நின்றாள். சகமனிதனை நேசிக்க தெரியாதவர் இந்த பூமியில் வாழத் தகுதி இல்லாதவர் என்று நினைத்து கணபதி பூநூலை இறுக்கமாகப் பிடித்தான். தவறை உணர்ந்து தன்னைத் தானே திட்டிக்கொண்டான்.
“உட்கார்ந்த இல்ல. சாப்பிட்டுத் தொல.” சீற்றமாகச் சீற, அவள் கண்ணீரை துடைத்தவாறு குழந்தையைப் பிடித்துக்கொண்டு கைகழுவச் சென்றாள்.
“பாபு, மீதி உள்ளதை கீழ கொண்டு வாங்க.” என்று சொல்லி யமுனா மாமி கோபமாக கீழே இறங்கினாள்.
குற்றம் தன் நெஞ்சை உறுத்தியதால் கணபதியால் சாப்பிட முடியவில்லை. மூர்த்தி கணபதியைப் பார்த்தார். மனவலியோடு அவன் சோற்றைப் பிசைந்துகொண்டிருந்தான். நிறைந்த வயிறு உண்ண இடம் கொடுக்கவில்லை. கணபதி எழுந்தான்.
“டேய் சாப்பிடு.”
“முடியல, என்னண்ணே கொடுமை.”
“டேய் நீ லூசாடா. எதுக்கு பக்கத்தில உட்காந்து சாப்பிட்ட.”
“அது அண்ணே.”
“உனக்குத் தெரியாதா?. இது எல்லாம் பார்த்தா நம்ம பொழைப்பு போகும்.”
“நம்ம பொழைப்பு பொழைப்புன்னு பார்த்து இத வளத்திட்டே இருக்கோம்.”
“நீ சாப்பாடு போட்டது தப்பு இல்லடா. எதுக்கு அவங்க கூட இருந்து சாப்பிட்ட?. அது இப்போ அவங்களுக்கு பிரச்சனையா ஆச்சு. இத பற்றி பேசவேண்டாம். கை கழுவிட்டு சட்டை போடு.” கைகழுவச் சென்ற போது புஷ்பா அழுதுகொண்டிருந்தாள். “அக்கா சாறி.” அவள் எதுவும் பேசாமல், சாப்பிட்ட இலைகளை எடுத்து குப்பைக் கவரில் போட்டு, இடத்தைச் சுத்தம் செய்ய, “கணபதி, அங்க என்ன பண்ணுற? சீக்கிரம் வா எல்லாத்தையும் கீழே இறக்கு. கிளம்ப வேண்டாமா.” கணபதி கோபமாக முறைத்துக்கொண்டு “அக்கா மன்னிச்சுக்கோ.” அவள் எதுவும் பேசமால், வேலையை செய்துகொண்டிருந்தாள். தயங்கிய முகத்துடன் வர, பாபு எல்லா பாத்திரத்தையும் மூடி இறக்கத் தயாராக இருந்தார்.
“சட்டையை போடு.” என்று பாபு சொல்ல, அவன் சட்டையைப் போட்டுக்கொண்டு, பாத்திரத்தைக் கீழே இறக்கினான். மீதி சாப்பாட்டை எல்லாம் கொடுத்துவிட்டு காலிப் பாத்திரத்தை எல்லாம் எடுத்து ஆட்டோவில் ஏற்றிவிட்டு மாடியில வந்து புஷ்பாவைத் தேடினான். அவளைக் காணோம். அவன் மனம் குமுறிக்கொண்டிருந்தது. மாடியிலிருந்து கீழே வந்து தேடினான். அங்கேயும் அவள் இல்லை.
கணபதி சோகமாக ஆட்டோவோடு சேர்ந்து நிற்க, காசு வாங்கிட்டு பாபு ரொம்ப சந்தோசமாக இருந்தார். “என்ன கணபதி, ஏத்தியாச்சா?.”
“ஏத்தியாச்சு. அண்ணே. பிரண்டு ஒருத்தன் இங்க இருக்கான். அவன பாக்க போறேன்.”
“இப்ப சொல்லுற.” என்று “கணபதி, டிப்ஸ் இருநூறு குடுத்திருக்காங்க” என்று சொல்லியவாறு “சர்வீஸ் ஐந்நூறு.” என்று சொல்லி ஒரு ஐந்நூறு ரூபாயும் இரண்டு நூறு ரூபாய் தாளையும் எடுத்து நீட்ட “அண்ணே, எனக்கு வேண்டாம்.”
“என்னடா?.”
“இல்லண்ணே…… வேண்டாம்.” என்று சொல்லியவாறு நடக்க, “டேய்.. டேய்…” என்று அழைக்க “பாபு அண்ணே, இங்க வச்சு பேச வேண்டாம். ஆட்டோவில ஏறுங்க.” ஆட்டோக்காரன் சொல்ல, பாபு கணபதி போறதைப் பார்த்துக்கொண்டு, ஆட்டோவில் ஏற, ஆட்டோ நகர்ந்தது. கணபதி நடந்து சென்று கொண்டிருந்தான். அவன் அருகில் ஆட்டோவை நிறுத்தி மூர்த்தி இறங்கி. “டேய் நீ வேலை செய்த சம்பளத்த வாங்கு.”
“அண்ணே வேண்டாம்.”
“இனி வேலை கேட்காத.”
“என்ன தம்பி பிரச்சன.” ஆட்டோ டிரைவர் கேட்க,
“அது ஒண்ணுமில்ல. நீ ஆட்டோவை எடு.” என்று கோபத்தில் பாபு ஆட்டோவில் ஏற, ஆட்டோ நகர, புஷ்பா குப்பைக்கவரைத் தலையில் தூக்கிகொண்டு செல்ல, அவள் பின்னாடியே மீனாட்சி ஓடி சென்றுகொண்டிருந்தாள். குப்பைக் கவரிலிருந்து தண்ணீர் வடிய, அவள் சேலையை நனைத்தவாறு எடுத்துச் சென்றுகொண்டிருந்தாள். “வேடிக்கை மனிதர்களாக இனி எத்தனை காலம். சுயநலத்துக்காக போலி வேசம். எவ்வளவு கொடுமையானது.” என நினைத்து கணபதி வருந்தினான். “சாதியும், மதமும் ஒரு நூற்றாண்டு மனித சமூதாயத்தை எவ்வளவு கொடூரமாக பிளவுபடுத்தி வைத்திருக்கிறது. மனிதர்களை நேசிப்பது போல் இவ்வுலகில் சிறந்தது எதுவும் இல்லை.” என்று முனங்கியவாறு கோபத்தில் கழுத்தில் கட்டியிருந்த பூநூலை, விரல்களுக்குள் இறுக்கிப்பிடித்து இழுக்க, நூல் அறந்தது. வெறுப்பிலே அதைத் தூக்கி வீசீனான். தவறை நினைத்து வருந்த, அவன் கண்கள் நிறைந்தன. எண்ணங்களில் மனம் ஒன்று சேர, ஓடிச் சென்றுகொண்டிருந்த மீனாட்சி நின்று திரும்பிப் பார்த்தாள். தேவ தூதனைப் போல் அவனுக்குத் தோன்றியது. கருணை மின்மினி பூச்சி போல் ஒளிர்ந்தது. அவனும் அவளைப் பார்த்துக்கொண்டே நின்றான். அவள் மெல்ல மெல்ல சிரித்தவாறு கையை அசைக்க, அவனும் கண்ணீரோடு சிரித்தவாறு கையை அசைத்தான்.
…………………….