அம்மாவின் மீது பூத்த சரக்கொன்றை-சாய்வைஷ்ணவி

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 33 அம்மாவின் மீது பூத்த சரக்கொன்றை சாய்வைஷ்ணவி

தாய் இறந்த வலியைக் காட்டிலும் உறவினர்களின் கடுஞ்சொற்கள் நித்யாவின் மனதில் அதிக பாரத்தை தந்தது. அந்த இடம் சூரியனை விட அதிக உஷ்ணமாக இருப்பதாக அவள் உணர்ந்தாள். பிணக்கூறாய்வு அறையின் வாயிலில் காவலர் அழைப்பது கேட்டு அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு மிக கவனமாக சிமெண்ட் பலகையிலிருந்து எழுந்து நடந்தாள். இரண்டு வருடங்களுக்கு பிறகு வயிற்றில் தங்கியிருந்த கரு. ஒரு வாரம் முன்புதான் உறுதியானது. ஊரிலிருந்து மாமியார் நாளை வருவதாக இருந்தது. நேற்று இரவு நடை முடித்து வீடு திரும்பியதும் என்ன நடந்தது என யூகிக்கும் முன்பே அம்மா மின்விசிறிக்கு கழுத்தை நீட்டியிருந்தாள். அதிலிருந்து  நித்யா கொலைப்பட்டினி. பசி மயக்கம் தந்தாலும் வாயில் உணவு செல்லவில்லை. மகிழன் அவ்வப்போது பழச்சாறு வாங்கி தந்தான். குடிக்க குடிக்க உமட்டிக் கொண்டு வந்தது. “ஃபார்மால்டீஸ் முடிச்சிட்டா நீங்க பாடிய வாங்கிகிட்டு போகலாம். டெத்ல எதுவும் சந்தேகம் இல்லாததால பிரச்சினை ஒன்னும் இல்ல”. டூ தவுசன்ட் ஃபைவ் ஹன்ட்ரட் முன்னாடி ஆபிஸ் ல கட்டிட்டு வெயிட் பண்ணுங்க என்றார் அந்த காவலர்.  நித்யாவுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. சற்று முன்னர் தான் சுமதியின் அண்ணன் பெருமாள் மாமா மகிழனிடம் சந்தேகம் இருப்பதாக விசாரித்துக் கொண்டிருந்ததைக் கேட்டாள். காலை வரை அவளது அறை முழுவதும் தேடியும் எந்த ஒரு துருப்புச்சீட்டும் கிடைக்கவில்லை.  அம்மா ஜாக்கெட்டுக்குள் பர்சை வைக்கும் பழக்கம் கொண்டவள். அதுபோல ஏதாவது மரணகுறிப்பை எழுதி வைத்திருந்தால் அதை போஸ்ட் மார்ட்டம் செய்யும் போது கண்டு பிடித்து விடுவார்கள் என்று நித்யா பயந்தாள். இப்போது ஆசுவாசமாக இருந்தது. மீண்டும் அதே இடத்தில் அமர்ந்துக்கொண்டாள். தூரத்தில் மகிழன் தன் தாயுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். 

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை எல்லாம் சாதாரணமாகவே இருந்தது. தந்தை இறந்து இரண்டு வருடங்களானதால் அம்மா சற்றே கவலை மறந்திருந்தாள். கோவில் குளங்களுக்கு போவதும் அவள் வயது பெண்களுடன் உறையாடுவதுமே அவளுக்கு முழுநேரப் பொழுதுபோக்காக இருந்தது. நித்யாவும் மகிழனும் வேலைக்கு செல்வதால் மொத்த வீட்டு வேலையும் அவளே செய்யும்படி ஆயிற்று. ஆனால் அம்மா மகிழ்வாக இருப்பதாகவே நித்யா நினைத்திருந்தாள். சில மாதங்களில் அம்மா  இதற்காக வீட்டில் சண்டை போட ஆரம்பித்தாள். அதிலிருந்து நித்யாவே வீட்டு வேலை பார்த்து விட்டு அலுவலகம் சென்று வந்தாள். நித்யாவின் தந்தை மணி ஊதாரியாக வாழ்ந்ததால் எந்தவொரு சொத்தோ நகைகளோ இருவரிடமும் இல்லை. நித்யாவுக்கு உடன் பிறந்தவர்கள் என எவரும் இல்லை. தந்தைக்கு பின் தன் தாயை தன்னிடமே வைத்து பராமரிக்க நினைத்தாள் நித்யா. மகிழனின் தாய்க்கும் நித்யாவின் தாய்க்கும் ஜென்மப் பகை. ஒரே வீட்டில் இருவரையும் ஒரு மணி நேரம் கூட வைக்க முடியாது. எல்லா எதிர்ப்புகளையும் மீறி மகிழன் தான் தன் மாமியாரை வீட்டில் தக்க வைத்துக்கொண்டான்.

வேற்று சாதியை சேர்ந்த மணியை காதல் திருமணம் செய்து கொண்டதால் சுமதியுடன் உறவையே முறித்துப்போனவர்கள் தான் இன்று அவளுக்காக நியாயம் பேசிக்கொண்டிருந்தார்கள். எங்களைப் பொறுத்தவரை அவள் எப்போதோ இறந்துவிட்டாள் என்று கீதா சித்தி மொத்த வன்மத்தையும் பிணத்தின் மீது கக்கிவிட்டு போனாள். அந்த கட்டிடத்தின் முன்பு கிட்டத்தட்ட ஐம்பது அறுபது மனிதர்கள் எப்போதும் நடமாடிக்கொண்டே இருந்தார்கள். உடலைக் கொண்டு வருவதும் வாங்கிப் போவதுமாக அது ஒரு பிணச் சந்தை போல தோன்றியது. மனிதர்கள் ஏதாவது ஒரு வகையில் தினமும் இறந்துக்கொண்டே இருக்கவேண்டும் அல்லவா? இல்லையேல் உலகின் சமநிலை பற்றிய கூற்றுக்கு என்ன அர்த்தம் இருக்கும்? 

கூறாய்வு முடித்து வந்த எல்லா பிணங்களின் முன்பும் ஒருவர் இருவரேனும் அழுது புரளும் காட்சி நித்யாவின் கண் முன் விரிந்தது. நித்யாவிற்கு அழ தோன்றவில்லை. தேவைக்கு அதிகமாகவே நேற்றிரவு அம்மாவை தூக்கில் பார்த்தவுடன் கதறி அழுதுவிட்டாள்.  இதற்கு மேலும் கத்தினாள் கருவிற்கு ஏதாவது ஆகிவிடும் என்று மகிழன் பயந்து அவளை அமைதிப்படுத்தினான். மருத்துவமனையில் மரணம் உறுதி செய்யப்பட்டதும் சுமதியின் அக்கா, அண்ணன், தம்பி, தங்கை , அம்மா என்று ஒவ்வொருவரின் எண்ணையும் வாங்கி விஷயத்தை சொல்லும் போது நித்யாவுக்கு அது வெறும் செய்தியாகவே இருந்தது. கேட்பவர்களுக்கும் அப்படியே தோன்றியது. சுமதியின் அக்கா லட்சுமி நித்யாவை பாரத்துக் கொண்டே இருந்தாள். இவள் அழவில்லை என்றால் சுமதி தூக்கிட்டு கொண்டதற்கு நித்யாதான் காரணம் என்று சொல்லி விடுவாள் போலத் தோன்றியது. அழவேண்டிய நிர்பந்தம் வாய்க்கும் போதெல்லாம் நித்யா கழிவறை சென்று வந்தாள்.

அந்த மரம் இடத்திற்கு சற்றும் பொருந்தாமல் இருந்தது. அதில் சரக்கொன்றை பூக்கள் பூத்துக்குலுங்கின. பிணக்கூறு முடித்து வெளிவரும் பிணங்களின் மீது ஓரிரு பூக்களை தூவி அது விளையாடிக்கொண்டிருந்தது. ஏதோ மஞ்சள் தேவதை ஒன்று ஆசிர்வாதம் செய்து இறந்த உடல்களை வழியனுப்புவதுப் போல அது இருந்தது. நித்யாவுக்கு அந்த பூக்களை கையில் அள்ளிக்கொள்ள வேண்டும் போல் தோன்றியது. மகிழன் அவள் அருகில் வந்து அணைப்பாக அமர்ந்தான். அப்படியே அவன் தோளில் ஒருமுறை சாய்ந்து விட்டு எழுந்து அமர்ந்துக்கொண்டாள். அவன் மட்டும் நித்யாவின் வாழக்கைக்குள் வராமல் இருந்திருந்தால் அவளது பிணமும் வேறெங்கோ ஒரு பிணக்கூறாய்வு அறையில் இருந்திருக்கும் என்று நினைத்து அவளுக்கு அவளாகவே பரிதாபப்பட்டு கொண்டாள். இப்போதைக்கு மகிழன் மட்டுமே அவள் உலகம் என்று தோன்றியது. ” நித்யா , அம்மா ரொம்ப கோவமா இருக்காங்க. உங்க சின்ன மாமா ஏதோ சொல்லிட்டாங்களாம் என்று மகிழன் அவள் காதருகில் வந்து சொன்னான். எதிர்பார்த்ததுதான் என மனதிற்குள் நொந்துக்கொண்டாள். அதற்குள் மகிழனுக்கு அழைப்பு வந்தது. மாமியார் தான் அழைக்கிறாள். மகிழன் வேகமாக எழுந்து சென்றான். 

வாசலில் ஏதோ சத்தம் கேட்கவே நித்யா எழுந்தாள். அதற்குள் மகிழன் அவசரமாக அவளிடம் வந்தான்.” நித்யா உங்க மாமாங்க பயங்கர பிரச்சினை பண்றாங்க. அத்தையோட பாடிய நேரா சுடுகாட்டுக்கு எடுத்துட்டு போகக்கூடாதாம். வீட்டுக்கு எடுத்துட்டு போய் ஏதோ சடங்கு எல்லாம் செய்யணுமாம். “சரி மகிழ் பண்ணலாமே. அதனால என்ன?” என்றாள் நித்யா. “இல்ல நித்யா. எங்க அம்மா அதுக்கு ஒத்துக்கமாட்றாங்க. அறுத்த பிணத்த திரும்ப வீட்டுக்கு எடுத்துட்டு போகக்கூடாதுங்கறாங்க”. அவளுக்கு மகிழன் மீதுதான் கோபம் வந்தது. தேவைப்படாத இடங்களில் எல்லாம்தான் அம்மா பிள்ளையாக  அவன் நடந்துக்கொள்வதாக நினைத்தாள். நித்யாவுக்கு கவலையாக இருந்தது. எந்த சூழ்நிலையிலும் மனிதர்கள் ஏன் மனிதர்களாகவே இருப்பதில்லை? பணத்தையும், கௌரத்தையும், சாதியையும் பெரிதாக நினைக்கும் மனிதர்களுக்கு நியாய அநியாயங்களை பேசிட என்ன தகுதி இருக்கிறது? அம்மா உயிரோடு இருந்தபோது ஒருவரும் அவளை மதித்ததில்லை. உறவுக்காக ஏங்கி பாட்டி வீட்டிலும் மாமா வீட்டிலும் பல நாட்கள் அசிங்கப்பட்டு திரும்பி வந்திருக்கிறாள். சம்மந்தி ஒரு தனித்திருக்கும் பெண் என்ற கரிசனம் துளிக்கூட இல்லாத மாமியார் எத்தனை நாட்கள் அவளோடு மல்லு கட்டியிருக்கிறாள். அம்மாவுக்கு தனிமையும் நிம்மதியும் வாயத்ததேயில்லை. நித்யா வாசலுக்கு சென்றவுடன் மாமாவும், மாமியாரும் மாறி மாறி இவளிடம் முறையிட்டு வாதாடினார்கள். நித்யாவுக்கு இப்போது நிஜமாகவே அழுகை வரும்போல இருந்தது.

“உங்க அம்மா மாப்பிள்ளை வூட்டுல போயி தொங்கி தொலைச்சிருக்கு. இதுல போஸ்ட் மார்ட்டம் பண்ண பொணத்த வீட்டுக்கு கொண்டு போன வூடு நாசமா போயிடும்” என்று மாமியார் கத்த கத்த நித்யாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது. ஒரு பக்கம் பெரிய மாமாவும் சின்ன மாமாவும் பெரியம்மாவோடு கடுமையாக அவளது மாமியாரைப் பற்றி விமர்சனம் செய்துக்கொண்டு இருந்தார்கள். மகிழன் யார் பக்கம் எதைப்பேசுவது என்று புரியாமல் விழித்தான். அதற்குள் காவலர் அவனை அழைக்கவே அனைவரும் அங்கிருந்து நகர்ந்தனர். அறையிலிருந்து அம்மாவின் பிணத்தை வெளிக்கொண்டு வந்தார்கள். எப்போதோ ஆம்புலன்ஸ் வந்திருந்தது. யாருடைய முகத்திலும் உணர்ச்சி இல்லை. ஒரு உயிர் பிரிந்த உடலுக்கு கூட கௌரவம் எத்தனை தொல்லையாக இருக்கிறது? இங்கு அவரவர் ஈகோதான் முன்னிற்கிறது. தேவையற்றுப் போன ஒரு உயிர் இருந்த காலங்களிலும் மதிக்கப்படவில்லை. இறந்தபின்னும் மதிக்கப்படுவதில்லை. 

நித்யா தனியாகவே நின்றுக்கொண்டாள். ஊரிலிருந்து தூரத்து உறவு அக்காவும் சித்தியும் வந்திருந்தார்கள். அம்மா உயிரோடு இருந்தப்போது அடிக்கடி இவர்கள் இருவரின் வீட்டுக்குத்தான் போய் வருவாள். ஒருவேளை அவள் இறப்பது பற்றி எதையாவது இவர்களிடம் பேசி இருப்பாளா என்று நித்யா எண்ணினாள். பிணத்தை ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். அக்காவும் சித்தியும் கத்தி அழுதார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். ஆம்புலன்ஸ் கிளம்ப தயாரானது. நித்யாவும் உடன் ஏறிக்கொண்டாள். சரக்கொன்றை மரம் அவளுக்கு டாடா காட்டுவது போல இருந்தது. அம்மாவின் தலைமாட்டில் அமர்ந்தாள். அம்மா ஒருமுறை எழுந்து உங்கள் விருப்பம் எதுவென சொல்லுங்கள் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவளது தலையை தடவினாள். நேற்றிரவு இந்த வருடல் கிடைத்திருந்தால் ஒருவேளை அம்மா இறந்திருக்கமாட்டாள் என்று ஒருகணம் தோன்றியது. 

எங்கே போய்கொண்டிருக்கிறோம் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆம்புலன்ஸின் முன்னும் பின்னுமாக யாரோ பூக்களை எறிந்துக்கொண்டே வந்தார்கள். நித்யா வெளியில் பார்த்தாள். சாலையில் நடக்கும் மனிதர்கள் ஆம்புலன்ஸை நின்று வேடிக்கை பார்த்தார்கள். நித்யாக்கூட இதுபோல ஆம்புலன்ஸோ, அமரர் ஊர்தியோ போகும் போதெல்லாம் நின்று பார்த்து விட்டுப் போவாள். அந்த நிமிடத்தில் அவளுக்கு பயமாக இருக்கும். தனக்கு வேண்டியவர்கள் யாருக்கும் இதுபோல ஆம்புலன்ஸில் போகும் நிலை வந்துவிடக்கூடாது என்று நினைப்பாள். “அம்மா நன்றாக உறங்குவது போல இருந்தது. அம்மா எந்திருச்சு காபி போட்டுக்குடுங்க ..ரொம்ப தலை வலிக்குது” . தொணி மாறாமல் தினமும் அவள் அம்மாவுடன் பேசும் வசனம் இது. இனிமேல் தலைவலி வரவேக்கூடாது என்று நினைத்தாள். 

மகிழனிடமிருந்து அழைப்பு வந்தது. அவன் எங்கே என்று தேடினாள். மகிழன் முன்னால் செல்லும் காரில் போய்கொண்டிருந்தான். அவன் நிலையில் இருந்து பார்த்தாலும் பாவமாக தான் இருந்தது. இருந்தாலும் இக்கட்டான சூழலில் கூட அம்மாவிடம் பயந்து பேசும் அவன் குணம் அவளுக்கு அயற்ச்சியை கொடுத்தது. “ம்ம் சொல்லு” என்றாள். இப்படி தான் காதலிக்கும் நாட்களில்  கோபமாக இருக்கும் போது தொடங்குவாள். ஒவ்வொரு முறையும் அவளை சமாதானம் செய்து பேச வேண்டியது மகிழனின் வேலை. ஆனால் அவளை சமாதானம் செய்வது அத்தனை கடினமாக இருக்காது.” நித்யா.. நாம நேரா பரியல் கிரவுண்ட் தான் போறோம். உங்க மாமாகிட்ட பேசிட்டேன். அவங்க சரினு சொல்லிட்டாங்க. நீ கர்ப்பமா இருக்கறதால நான் எதுவும் செய்யக்கூடாதாம். அதனால உங்க சின்ன மாமாதான் எல்லாம் செய்ய போறாங்க என்றான்”. நித்யாவுக்கு ஒரே நேரத்தில் வியப்பாகவும் வெறுப்பாகவும் இருந்தது. அம்மாவின் முகத்தை பார்த்தாள். அவளும் அதே போலத்தான் முகத்தை வைத்திருந்தாள். 

ஆம்புலன்ஸிலிருந்து இறங்கியவுடன் பிணத்தை ஸ்ட்ரக்ச்சரோடு இறக்கி கீழே வைத்தார்கள். இரண்டு மூன்று பெரிய பெரிய கட்டிடங்கள் அங்கு இருந்தன. ஒவ்வொன்றின் மேற்கூரையிலிருந்தும் கரும்புகை வெளியேறிக்கொண்டிருந்தது. நித்யாவுக்கு பசியோடு தூக்கமும் வந்தது. இப்படியே அம்மாவை எழுப்பி வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் போலத் தோன்றியது. அம்மா சிரிப்பது போல இருந்தாள். அவள்  வாய் விட்டு சிரித்து நிறைய ஆண்டுகள் ஆகியிருக்கும் அல்லவா? என்று நித்யா நினைத்துக்கொண்டு இருக்கும் போது யாரோ இருவர் ஏற்கனவே தயார் செய்திருந்த ஓலைப் பாடையை எடுத்து வந்தார்கள். “சார் நேரம் முடியறதுக்குள்ள வேகமா வேலைய முடிங்க. அடுத்தடுத்த பிணங்கள் வந்துட்டே இருக்கு” என்று சத்தமாக பேசினான் அதில் ஒருவன். அவனைப் பொறுத்தவரை இது ஒரு வேலை. அவனுக்கு அடுத்தடுத்து பிணங்களை பார்ப்பதில் மகிழ்ச்சியாய் கூட இருக்கலாம். பிணங்களின் உடன் வரும் உயிருள்ள மனிதர்களைப் பற்றி அவன் நினைக்கக்கூட நேரமில்லாமல் தோன்றினான். முடிந்தால் நீங்களும் படுத்துக்கொள்ளுங்கள். குறைந்த பணத்தில் சிறப்பாக எரித்துவிடுவோம் என்று சொல்லாமல் அவன் சொல்வதுப்போல இருந்தது அவன் நடத்தை.

அம்மாவின் பிணம் அவசர அவசரமாக பாடையேறியது.  அங்கிருந்து கட்டிடத்தினுள் இருந்த மேடைக்கு கொண்டு சென்று கீழே கிடத்தினார்கள். அதை சுற்றி சுற்றி வந்து ஒருவர் ஏதேதோ சொல்லிக்கொண்டே சாங்கியங்களைச் செய்தார். அம்மாவிற்கு கோடி புடவை போர்த்தினார் பெரியப்பா. நித்யா ஒரு சில அடி இடைவெளியில் நின்று இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். மாமியார் தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லாதவள் போல தூரமாக நின்றிருந்தாள். மகிழன் இங்குமங்கும் ஓடியாடி எதையோ செய்துக்கொண்டிருந்தான். வந்திருந்த அம்மாவின் உறவினர்கள் பாதி பேரை நித்யாவுக்கு தெரியவில்லை. அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு நித்யாவை பரிதாபமாக பார்த்தார்கள். அதில் ஓரிருவர் மெதுவாக சிரித்தார்கள். நித்யாவுக்கு இப்போது அதிகமாக உறக்கம் வந்தது.

“நித்யா! நித்யா ! “அம்மா அழைப்பது போலிருந்தது.” நித்யா இந்தா காபி கேட்டியே” . அம்மாவின் குரலுக்கு கண் விழிக்க முடியாமல் கையை மட்டும் நீட்டி கோப்பையை வாங்கினாள். அம்மா வழக்கத்திற்கு மாறாக புன்னகைத்தாள். காபி வெதுவெதுப்பா இருந்தது. ஆனால் நல்ல மனம். அவள் வாயருகே காபியை கொண்டு போகும்போது அம்மா அதை நித்யாவின் முகத்தில் தட்டிவிட்டு ஓடினாள் . இப்போது காபி சில்லென்று இருந்தது. ” அம்மா ஏன் இப்படி செய்கிறாள் ? கோபமாக இருக்கிறாளோ?அம்மா!..அம்மா!.. கூப்பிட நினைத்த அவள் குரலை யாரோ அழுத்திப்பிடித்திருந்தார்கள்.

” நித்யா! எழுந்திரு மா”,  மகிழன் அவள் கன்னத்தில் தட்டினான். காபி கோப்பையை கையில் பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்து அமர்ந்தாள். அம்மா தூரத்தில் படுத்திருந்ததைப் பார்த்தாள். அவள் மேல் நிறைய பூக்களும் மாலைகளும் கிடந்தன. நித்யா காபி கோப்பையை தேடினாள். அது அவள் கையில் இல்லை. முகத்தில் சிந்தியதை துடைத்துக்கொண்டாள். அருகில் மகிழன் அமர்ந்திருந்தான். பின்க் நிற தண்ணீர் பாட்டில் அவள் அருகில் இருந்தது. இதை ஏன் அம்மா கொண்டு வந்தாள்? எதையெதையோ நினைத்து நித்யாவின் இதயம் படபடத்தது. 

“நித்யா ! இந்தா இந்த ஜூஸை குடி” என்று ஒரு பாலித்தீன் டப்ளரை அவள் வாயருகே கொண்டு வந்தான்  மகிழன். நித்யா வாயைத் திறந்து அதை மடமடவென்று முழுங்கினாள். அம்மா!.. அம்மாவை சுத்தியும் அறையில் தேடினாள். அது அவளது அறை இல்லை. அம்மா ஏன் எங்கேயோ படுத்திருக்கிறாள்?. நித்யா பதறி எழுந்தாள். அம்மாவின் அருகில் ஓடினாள். அவளைப் பார்த்ததும் வெறிப்பிடித்தவள் போல கத்தினாள். கதறி அழுதாள். அங்கிருந்த அனைவரின் பார்வையும் நித்யாவின் மீதே இருந்தது. வயிற்றிலும் நெஞ்சிலும் அடித்துக்கொண்டு அழுதாள். மகிழன் அவளருகில் ஓடி வந்து அவள் கைகளை இறுக்கி பிடித்துக்கொண்டான். மகிழ் அம்மா ..அம்மா.. என்று மூச்சை பலமாக இழுத்து இழுத்து அழுதாள். மீண்டும் மயக்க நிலைக்கு போகும் முன்பு அவளை எழுப்பி தூரமாக அழைத்துப்போனான் மகிழன். அம்மாவின் பிணம் எரிவதற்கு தயாராக இருந்தது. அம்மா இப்போதும் சிரித்துக்கொண்டே இருந்தாள். 

Exit mobile version