கேன்டீனில் சுந்தரியோடு சேர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ரமேஷைப் பார்த்ததும்,
அழுதுகொண்டே கம்பெனி வாசலை விட்டு வெளியேறினாள், செல்வி.
செல்வி அழுது கொண்டு போவதைப் பார்த்த அகிலன், அவளின் பின்னே ஓடி வந்தான்.
அகிலனுக்கு கொஞ்ச காலமாகவே செல்வி மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால், செல்விக்கு ரமேஷைத்தான் பிடித்திருந்தது. அகிலன் தன் காதலை, தன் மனத்தில் இருக்கும் ஆசையை எப்படியாவது அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால், அதிலும் ஒரு சிக்கல். ஒருவேளை அவள் “நான் உன்னை நண்பனா நெனச்சுத்தான் பழகிட்டு இருக்கேன்” என்று சொல்லிவிட்டால் இனி நட்பாகவும் பேச முடியாமல் போய் விடுமோ என்கிற பயத்தால் இரண்டு வருடங்களாகச் சொல்லாமலே இருந்தான்.
“செல்வி! செல்வி! நில்லு.
ஏன் இவ்ளோ வேகமா போற?
உன்கிட்ட ஒரு விஷயம்
சொல்லணும்” என்றபடி மூச்சிரைக்க ஓடி வந்தான், அகிலன். அவளின் கன்னம் தொட்ட கண்ணீரைத் தன் கையால் துடைத்தான்.
“ஏன் யாருக்குமே என்ன பிடிக்க மாட்டேங்குது?”
“அப்டிலாம் சொல்லாத செல்வி, உன்னை எல்லோருக்கும் பிடிக்கும்.
நீ எதுக்கும் கவலப்படாத, நீ வேணா பாரு ஒருநாள் அவனாவே உன்ன தேடி வருவான்” என்று அவளை ஆசுவாசப் படுத்தினான்.
ஆறுதல் வார்த்தைகளுக்கு இடையே அவளது விரல்களை மெதுவாகப் பிடித்துக் கொண்டான், அகிலன். அவளும் எதைப் பற்றியும் யோசிக்காமலும் உதறி விட மனமில்லாமலும்
தன் உள்ளங்கை வியர்வையை அவனது உள்ளங்கையில் படரவிட்டாள்.
மௌனம் பேசிக்கொண்டு
இருவரும் விரல்களைக் கோத்தபடியே கம்பெனி பேருந்தில் ஏறினார்கள். வற்றிய கண்ணீரோடு அவன் தோளின் மேல் சாய்ந்து கிடந்தாள். பேருந்து சென்று கொண்டே இருந்தது.
திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய்
“ஆமா நீ ஏதோ ஒரு விஷயம் சொல்லணும்னு சொன்னியே , என்னனு சொல்லு” என்றாள், செல்வி.
ஆ… அது வந்து…
“ஒரு கவிதை எழுதி இருக்கேன் படிச்சு பார்த்து, எப்படி இருக்குன்னு சொல்லு” என்று பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த பேப்பரை அவளிடம் நீட்டினான்..
அதில்
“எல்லோருக்கும் காதல் பிடித்திருக்கிறது
ஆனால், காதலுக்கு ஒரு சிலரை மட்டுமே பிடித்திருக்கிறது இப்போதைக்கு நீயும் நானும்” என்று எழுதியிருந்தது.
அந்தக் காகிதத்தின் ஓரத்தில் “ஐ லவ் யூ” என்றும் எழுதப்பட்டிருந்தது.
படித்து முடித்த அவள் ஒன்றுமே சொல்லவில்லை. மௌனமாகவும் பதட்டமாகவும் இருந்தாள். எதுவும் பேசாமல் இருவரும் பேருந்தை விட்டு இறங்கி அவரவர் அறைக்குச் சென்றார்கள்.
அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். ஏதேதோ தனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தான்.
வெட்கம் ஒரு பக்கம், அவள் என்ன சொல்வாளோ என்கிற பயம் ஒரு பக்கம் அகிலனை உருட்டிக் கொண்டிருந்தன.
ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில்
அவளின் பதிலுக்காக வாட்ஸ் அப்பை திறந்து வைத்தபடி தூங்காமல் காத்திருந்தான். சரியாக மணி 2:30 இருக்கும். ஒரு நோட்டிபிகேஷன் சத்தம் காதில் விழுந்தது. கண்களைக் கசக்கிக் கொண்டே தூக்கக் கிறக்கத்தில் வாட்ஸ்அப் மெசேஜைப் பார்த்தான் அகிலன்.
அதில்
“எல்லோருக்கும் காதல் பிடித்திருக்கிறது
ஆனால், காதலுக்கு ஒரு சிலரை மட்டுமே பிடித்திருக்கிறது இப்போதைக்கு நீயும் நானும்”
பாவம் அகிலன்… சந்தோசம் வெகு நேரம் நீடிக்கவில்லை.
மகிழ்ச்சியின் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த அகிலனின் கனவில் நீர் வாரி இறைத்து விட்டது செல்போன் அலாரம்.
கனவைக் கலைத்த செல்போனைத் திட்டிக்கொண்டே அவசர அவசரமாய் கம்பெனிக்குக் கிளம்பினான்.
கேன்டீனில் டீ ஆர்டர் செய்துவிட்டு எதார்த்தமாகத் திரும்பிப் பார்த்தான். கனவுக்கு மாறாகச் செல்வியும் ரமேஷும் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. “டீ”யைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு,
கடைசி டேபிளில் சோகமாய் அமர்ந்திருந்த சுந்தரியிடம் கடிதத்தை நீட்டினான்.
அவளுக்கும் அகிலன் மீது கொஞ்சம் காதல் இருந்தது. இப்பொழுது காதலை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டாள், சுந்தரி. ஆனாலும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாள்.
இதைத் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான், சுந்தரியை ஒருதலையாகக் காதலிக்கும் கார்த்திக்.
ஒரு நொடியில் காலம் கார்த்திக்கையும் அகிலனையும் பகைவர்களாக மாற்றிவிட்டது. அகிலனை வேலையை விட்டு அனுப்புவதற்குத் திட்டம் போட்டான், கார்த்திக்.
மேனேஜரிடம் அகிலனை எப்படியெல்லாம் மாட்டிவிட முடியுமோ, அப்படியெல்லாம் மாட்டிவிட்டான். மறுநாள் கம்பெனி நஷ்டத்தில் செல்வதாகவும் அதனால் ஆள் குறைப்பு நடத்த இருப்பதாகவும் எல்லோரிடமும் அறிவித்தார் மேனேஜர். அதனால் தனது துறையில் இருந்து மூன்று பேர்களை வெளியே அனுப்ப இருப்பதாக தெரிவித்தார். அந்த மூன்று பேர்களில் கடைசி ஆளாக வரிசையில் சேர்ந்தான் அகிலன்.
மேனேஜரிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான், அகிலன். அவர் மனம் இளகவே இல்லை.
அடுத்த பத்தாவது நாளில் அகிலனை வேலையை விட்டு அனுப்பினார்கள்.
நடந்தது எதுவுமே தெரியாமல் அப்பாவியாக அலைந்து கொண்டிருந்த அகிலனிடம் எல்லாவற்றையும் எடுத்துக்கூறினான், சுரேஷ்.
ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது என்று எல்லோரையும் போல் இறைவனிடம் அவனும் கேள்வி கேட்டான். எப்போதும் போல் இறைவனும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இறைவனைத் திட்டிவிட்டு எப்போதும் வரும் சாலையில் அழுது கொண்டே வந்தான், அகிலன்.
அன்று மழை பெய்து கொண்டிருந்தது.
அப்பொழுது சாலையைக் கடக்க முடியாமல்
மழையில் நனைந்து குளிரில் நடுங்கிய நாய்க்குட்டியைப் பார்த்த அகிலன், தன் வேலை போனது பற்றிக் கூட கவலைப்படாமல், அதைத் தூக்கிக் கொண்டு வந்து ஓர் இதமான இடத்தில் கிடத்தினான்.
பக்கத்து டீக்கடையில் பால் வாங்கி வந்து கீழே கிடந்த தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி வைத்தான்.
அது சூட்டையும் பொருட்படுத்தாமல் “லபக் லபக்” என்று குடித்தது. அதன் ஏறி இறங்கிய வயிற்றைப் பார்த்து இதுதானோ வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டான். வெளியே தெரிந்த நெஞ்செலும்புகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறையத் தொடங்கின.மனசு நிறைந்ததும் அங்கிருந்து தன் அறைக்குக் கிளம்பினான்.
அவனுக்குத் தெரிந்த ஒரே உணவான நூடுல்ஸை சமைக்கத் தயாரானான்.
நூடுல்ஸைக் கிண்டி இறக்கி வைக்கவும் சுவிட்ச் போடாமல் சார்ஜில் போட்டிருந்த
செல்போனில் மணி அடித்தது.
ஹலோ…ஹலோ…
“டேய்! அகிலா… கேட்குதா..
மாரடைப்பு வந்து அம்மா இறந்துட்டாங்கடா,
சீக்கிரமா ஊருக்கு வாடா”
சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள், அகிலனின் அத்தை.
சிறுவயதிலேயே அப்பாவை இழந்த அகிலன், இப்பொழுது அம்மாவையும் இழந்த துக்கத்தில் அனாதையாய் நின்று கொண்டிருந்தான். அப்பா இறந்த பிறகு அம்மா தான் அகிலனை சித்தாள் வேலைக்குச் சென்று படிக்க வைத்தாள்.
கல்லும் மண்ணும் சிமிண்ட் மூட்டையையும் தூக்கித் தூக்கி உடல் மெலிந்து தான் போயிருந்தாள், அகிலனின் அம்மா. ஏற்கெனவே இதற்கு முன் ஒரு முறை அட்டாக் வந்திருக்கிறது. ஆனால், அவள் இதை அகிலனிடமிருந்து மறைத்து விட்டாள். சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற தன் அம்மாவின் கனவை நிறைவேற்றத்தான் சென்னை வந்திருந்தான், அகிலன்.
இப்பொழுது ஊருக்குச் செல்ல கூட அகிலனிடம் காசு இல்லை. எத்தனை முறை போனடித்தும் நெருங்கிய நண்பர்கள் யாரும் எடுக்கவே இல்லை. கம்பெனியில் தன்னுடன் வேலை பார்க்கும் சுரேஷிடம் பணம் கேட்டான்.
“கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தான்டா அப்பாவோட அக்கவுண்டுக்கு அனுப்பிவிட்டேன், சாரிடா” என்றான், சுரேஷ்.
செல்வியி்டம் சென்று கேட்டுப் பார்த்தான். அவளும் இல்லை என்று ஏதேதோ காரணம் சொன்னாள்.
தன் அறை நண்பனிடம் எப்படியும் பணம் இருக்காது என்று அவனுக்குத் தெரியும்.
கடைசியாகச் சுந்தரியிடம் நடந்ததை எல்லாம் கூறி பணத்தை வாங்கிக்கொண்டு சரியான நேரத்தில் ஊருக்குச் சென்றான்.
பச்சைத் தென்னை ஓலையில் அம்மாவைக் கிடத்தியிருந்தார்கள்.
நனைத்து வைத்திருந்த பச்சரிசியை இடது கையால் அம்மாவின் வாயில் போடச் சொன்னார்கள். சந்தனம் கொண்டு அம்மாவின் கண்களை மூடியிருந்தார்கள். அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது என்று நினைத்து அழுதான்.. அழுதான்.. அழுது கொண்டே இருந்தான்.. உப்பு போடாத சுண்டலை அவன் கையில் யாரோ கொடுத்தார்கள்.. இருந்த பசியில் அதைச் சாப்பிட்டான்.
பதினாறாம் நாள் விசேஷம் முடிந்து, மீண்டும் வேலை தேடி சென்னைக்கே கிளம்பினான். சோகங்களுக்கிடையே நடந்த இண்டர்வியூவில் தட்டுத் தடுமாறி வெற்றி பெற்றான். இந்தச் செய்தியை சுந்தரியிடம் தெரிவிக்க ஆவலாகச் சென்றான்.
ஆனால், அவளோ இவனைக் கண்டுகொள்ளாமல் கார்த்திக்கோடு பைக்கில் சென்று கொண்டிருந்தாள். பத்து தடவைக்கு மேல் போன் அடித்தும் அவள் எடுக்கவே இல்லை. இனிமேல் என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை.
வாழ்க்கையை ஒரு முறை திரும்பிப் பார்த்தான். கண்களை மூடினான். நடந்ததெல்லாம் கண்முன்னே ஓடிக் கொண்டிருந்தன. கிராமத்தில் அவன் முன்பு வசித்த அதே பழைய ஓலைக் குடிசையில் அம்மாவின் மடியில் படுத்துக் கிடந்த காட்சி கண் முன் விரிந்தது. குடிசையிலிருந்து சொட்டு சொட்டாக மழைநீர் உள்ளேயும் வெளியேயும் வடிந்து கொண்டிருந்தது.. கீழ் வைத்திருந்த பாத்திரத்தில் விழும் ஒவ்வொரு சொட்டுக்கும் “டக் டக்” சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வி மூளையை அரித்துக் கொண்டிருந்தது.
அவசர அவசரமாக வீட்டுக்கு வந்தவன், அறைக்குச் சென்று தாழ்ப்பாள் போட்டான். கடைசியாகத் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் அழுதான். அழும்போது வந்த மூக்குச் சளியைத் தன் சட்டையிலே தடவிக் கொண்டான். நிம்மதியாக சிரிக்கத்தான் முடியவில்லை. சரி, நிம்மதியாக அழவாவது நினைத்தால் அப்போதும் இடையூறாக மூக்குச்சளி வந்து விடுகிறது.
திடீரென யாரோ கதவு தட்டும் சத்தம். அழுகையை நிறுத்தினான். கண்ணீரைத் துடைத்துவிட்டு கதவைத் திறந்தான்.
தம்பி! என்ன நெனச்சுட்டு இருக்கீங்க. தேதி பதினஞ்சு ஆகுது இன்னும் வாடகை பணம் வந்து சேரல. இன்னும் ரெண்டு நாள்ல பணம் வந்து சேரணும். இல்லன்னா குடுத்த அட்வான்ஸ்ல இருந்து பணத்த கழிச்சுட்டு வீட்ட சீக்கிரமா காலி பண்ணுங்க என்றார், ஹவுஸ் ஓனர்.
அவர் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டி விட்டு மீண்டும் கதவைச் சாத்திக் கொண்டான். அறையில் சீலிங் பேன் சுற்றிக் கொண்டே இருந்தது. அதைக் கவனித்துக் கொண்டே இருந்தான்.
அறையில் கயிறு எதுவுமே இல்லை. இரண்டு லுங்கிகளை முடிச்சுப் போட்டு ஒன்றாக்கினான். பின்பு நம்மால் நம் நண்பனுக்கு எதுவும் பிரச்சனை வந்து விடக் கூடாது என்று இந்த முடிவைக் கைவிட்டான். வெகு நேரம் யோசித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான்.
வாழ்க்கை வெறுத்துப் போய்
தற்கொலை செய்து கொள்ளலாமென சாலையோரம் நின்றான்.
மூன்றாவதாக வந்து கொண்டிருந்த பெரிய லாரியில் விழலாம் என்று பயத்தோடு ஓரடி முன்னே எடுத்து வைத்தான்.
தனக்கென யாருமே இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கையில், பின்னால் இருந்து கால்களை நக்கியபடி வாலாட்டிக் கொண்டிருந்தது
அதே நாய்க்குட்டி …
****முற்றும்****