மின்னஞ்சல் – போஸ் சதீஷ்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 56 மின்னஞ்சல் – போஸ் சதீஷ்

அழகாய் வரைந்திருந்த அந்த ரவிவர்மன் ஒவியத்தை வாங்கி ஆசையாய் வீட்டில் மாட்டி அழகாய் ரசித்தார்கள் பாரியும், பொற்சுவையும் அந்த ஒவியத்தை வைத்த  கண் வாங்காமல்  பார்த்துக்கொண்டிருந்தனர்.. அவர்களது பதிமூன்று வயது மகன் இளமாறன் அந்த ஓவியத்தை உற்று நோக்கி ஆராய்ந்து கொண்டிருந்தான்.. 

     ஆம் பாரி ஒரு வங்கியின் மேலதிகாரி அவ்வப்போது வெளியூர்களுக்கு செல்லும்போது பிடித்த பொருட்களை வாங்கி மனைவி பொற்சுவைக்கும், மகன் இளமாறனுக்கும் கொடுப்பதில் மகிழ்ச்சி அடையும் நடுத்தர வர்கத்து குடும்ப தலைவன் பொற்சுவை தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுபவள் அன்பாகவும், பணிவுடனும் பழககூடியவள் குடும்பத்திலும், அலுவலகத்திலும் அவளை எல்லோருக்கும் பிடிக்கும் விதம் நடந்து கொள்வாள்..

                  ஒருநாள் தன் வழக்கமான அலுவலக பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பும்பொழுது அவளது மேசை கணினியில் புதிதாய் ஓரு மின்னஞ்சல் எட்டி பார்த்தது, அதை திறந்து பார்த்த பொற்சுவைக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தாலும் கண்டுகொள்ளாமல் வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.. மீண்டும் மறுநாளும் அதே போலொரு மின்னஞ்சல் வர சற்றெ நிம்மதி இழந்தாள்., அந்த மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. சற்றே அழுகையும் வந்தது,  வீட்டிற்கு சென்றதும் கணவனின் முகத்தை பார்க்க மாட்டாமல் எதுவும் பேசாமல் அமைதியாய் சென்றாள். இவளின் இந்த திடீர் நடவடிக்கை மாற்றத்தால் குழம்பி போனான் பாரி..மறுநாள் அலுவலகம் சென்ற பாரிக்கும் அதே போலொரு அதிர்ச்சியும் காத்திருந்தது அவனது மின்னஞ்சலிலும் அப்படியான ஒரு அஞ்சல் வந்திருந்தது மனதில் குழப்பமும், சந்தேகமும் தொற்றிக்கொண்டது.. அலுவல்களில் மனம் செல்லவில்லை. 

வீட்டிற்கு சென்ற பாரி குழப்பமான மனநிலையால் பொற்சுவையுடன் சரியாக பேசமல் இருந்தான். இதே போலொரு மனநிலையிலேயே பொற்சுவையும் இருந்ததால் வீட்டில் நடக்கும்  சின்னச்சின்ன விஷயங்கள் கூட பெரிய அளவில் மனக்கசப்பை தந்தன இருவர்க்குள்ளும்.. இளமாறன் முன்பு போல் வீடு உற்சாகமில்லாமல் இருந்ததை கவனித்தான், ஆனால் கண்டுகொள்ளவில்லை… 

    நாட்கள் நகர்ந்தன மின்னஞ்சல் வழியே தொடர்ந்து தொல்லைகள் வந்து கொண்டிருந்தன இருவருக்கும்.. ஒரு தூக்கம் தொலைத்த பின்னிரவில் பாரி இருக்கமாட்டாமல் அவனுக்கு வந்த மின்னஞ்சலை பொற்சுவையிடமே காட்டி  அழுதான் அதை பார்த்த பொற்சுவை திகைத்து போனாள்! அந்த மின்னஞ்சல்களில் அவளை பற்றிய தவறான பதிவுகள் அவதூறாக எழுதப்பட்டிருந்தன… ஏறத்தாழ அதே போல் அவளுக்கு வந்த மின்னஞ்களையும் அவனிடம் காட்டினாள் பாரி பற்றிய தவறான  அவதூறுகளை அந்த மின்னஞ்சல்கள் கொண்டிருந்தன… 

          கணவன் மனைவிக்கு இடையே இருந்த சந்தேகமும், குழப்பமும் தீர்ந்து ஒருவித பயம் தொற்றிக்கொண்டது. யாரோ ஒரு விஷமி., அந்த குடும்பத்தை பிரிப்பதற்காக செய்யும் சதி என்பது மட்டும் அவர்களுக்கு தெளிவாயிற்று…

       மறுநாள் காலை பாரி தனக்கு தெரிந்த காவல்துறை நண்பன் நரேந்திரனிடம் இதைப்பற்றி கூறி உதவி கேட்டான். அந்த மின்னஞ்சல் முகவரியை கொடுத்து, யார் அந்த விஷமி என விசாரிக்க சொல்லியிருந்தான். இரண்டு நாட்களில் கண்டுபிடித்து சொல்வதாக உறுதியளித்தான் நரேந்திரன்…சற்றே பிரச்சனை தீர்ந்தபடியால் ஓரளவு அமைதி நிலவியது கணவன் மனைவிக்குள்… 

    ஒரு காலைப்பொழுதில் இளமாறனை பள்ளிக்கு தயார்படுத்திக்கொண்டிருந்தாள் பொற்சுவை அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி ஓசை கேட்க கதவை திறந்தாள்.,அங்கே நரேந்திரன் நின்றுகொண்டிருந்தான்…

  அந்த நேரத்தில் பள்ளி பேருந்து வர இளமாறன் பேருந்திருக்கு ஓடி ஏறிக்கொண்டான்.. உள்ளே வந்த நரேந்திரன் மௌனமாகவே நின்றிருந்ததான், அறையிலிருந்து வெளியே வந்த பாரி அவன் மௌனத்தை கலைத்தான்… 

 நரேந்திரன் சொன்ன செய்தி இருவருக்கும் இடியென இறங்கியது.! அதே நேரத்தில் ஆச்சர்யத்தையும் கூடவே குழப்பத்தையும் உண்டு பண்ணியது… துளியும் நம்ப முடியவில்லை..

    ஆம் அவர்களுக்கு வந்த அந்த மின்னஞ்சல் முகவரி போலியானது என்று புலனாய்வில் உறுதியானது. மேலும் அந்த மின்னஞ்சலை உருவாக்கியது அவர்களின் மகன் இளமாறன் என்பதும் தெரியவந்தது… இதைக்கேட்டவுடன் பொற்சுவை வாய்விட்டே அழுதுவிட்டாள்.. பாரி சொல்ல முடியா குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டான்… 

    எந்த சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்படாமலும்,  நிதானத்தை கடைபிடிப்பவனுமான நரேந்திரன் மட்டும் தெளிவாக யோசித்தான்.. ஏன் இளமாறன் இப்படியொரு காரியத்தை செய்ய வேண்டும் அதுவும் இந்த வயதில்.!  விளையாட்டாக செய்திருப்பானோ அல்லது அவனை வைத்து வேறெதும் சதிவேலை நடக்கிறதா  என பலமுறை முறை யோசித்தான் ஒன்றும் பிடிபடவில்லை… அவனிடம் இதை நேரடியாக விசாரித்தால் நிச்சயம் மிரண்டு விடுவான் எனவே இளமாறனை நல்ல குழந்தைகள் மனநல மருத்துவரிடம் சென்று காட்டி அவன் எண்ணங்களை அறிய முற்பட்டான்… இடியென உடைந்து போயிருந்த பாரியையும், பொற்சுவையையும் ஆறுதல் சொல்லி தேற்றினான்… 

        மறுநாள் இளமாறனை அழைத்து கொண்டு மூவரும் தெரிந்த ஒரு குழந்தைகள் நல மருத்துவரை சந்தித்தனர்… இளமாறனிடம் தனியே பேசியபடியே அவனின் எண்ணங்களை அறிந்தார் மருத்துவர்.. 

             இளமாறனுக்கு பள்ளியில் முகில் என்ற நண்பன் இருக்கின்றான், முகிலின் பெற்றோர் விவாகரத்து ஆனவர்கள் முகில் பள்ளியின் விடுதியிலேயே தங்கி படிக்கின்றான்.. ஆனால் அவனின் பெற்றோர் முகிலை காண பள்ளிக்கு வரும்பொழுதெல்லாம் அதிகமாக பணம் கொடுத்திருக்கின்றனர் முகிலின் அம்மாவும் அப்பாவும் தனித்தனியே அவனை காண வருவதால் ஒருவர் கொடுக்கும் பணம் இன்னொருவருக்கு தெரிவதில்லை அதனால் வயதுக்கு மீறிய பணமும் தேவையற்ற செலவும் அவனிடம் இருந்தது… ஆனால் இளமாறனின் பெற்றோரோ அவனுக்கு அளவான காசுகளையே கொடுத்தனர்,  அதற்கு கணக்கும் கேட்டனர்… முகிலின் பெற்றோர் போல் தம் பெற்றோரும் பிரிந்திருக்கும் பட்சத்தில் தமக்கும் இப்படி நிறைய பணம் கிடைக்கும் என்ற விஷம  எண்ணம் இளமாறனை இத்தகைய செயலை செய்திருக்கிறான்….

*******************

Exit mobile version