தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி தேவை-ஆர்.பி.உதயகுமார்

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பிற நோய்கள் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு மருத்துவ முகாமை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த மருத்துவ முகாம் மூலம் சுமார் 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது என்றார்.

கொரோனா பேரிடர் நிவாரண சிறப்பு நிதியாக ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வழங்க மத்திய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஆண்டுதோறும் தேசிய பேரிடர் நிவாரணமாக வழங்கப்படும் நிதியில் இருந்து 510 கோடி ரூபாய் மட்டுமே முதற்கட்டமாக வந்துள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது போன்று, பல்வேறு நிவாரண பணிகளுக்கு தமிழகத்திற்கு சிறுக, சிறுக நிதி வழங்கப்பட்டு வருவது உண்மை தான் எனவும், இருப்பினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு வழங்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை எனவும், கூடுதலாக நிதி வழங்கவேண்டும் எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

மறைந்த திமுக நிர்வாகி பலராமன் படத்திறப்பு நிகழ்வின் போது, முகக்கவசம் அணியாமல் ஸ்டாலின் பங்கேற்றிருந்ததாகவும், அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முன் அவர் முன்னுதாரணமாக பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும் ஆர்.பி.உதயகுமார் சாடினார்.

Exit mobile version