துபாய், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு 3 விமானங்களில் கடத்திவரப்பட்ட, ரூ. 2. 4 கோடி மதிப்புடைய 4. 7 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, மலேசிய பெண் பயணி உட்பட 3 பேரை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு கடத்த முயன்ற ரூபாய் 8. 1 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து கடத்தல் ஆசாமியை கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சுங்க சோதனைகளில், ரூ. 2.5 கோடி மதிப்புடைய 4.7 கிலோ தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு, மலேசிய பெண் பயணி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை இட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரையும் அவரது உடமைகளையும் முழுமையாக சோதனை இட்டனர். அவருடைய கைப்பையில் மறைத்து வைத்திருந்த 23 தங்கக் கட்டிகள், 6 மோதிரங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். அதோடு அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்கப் பசையையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து மொத்தம், ரூ. 98 லட்சம் மதிப்புடைய 1.9 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து பயணியையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது,துபாயிலிருந்து இலங்கைக்கு மற்றொரு பயணி கடத்தி வந்த, அந்த கடத்தல் தங்கத்தை இந்த சென்னை பயணியிடம் கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது. இதை அடுத்து துபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தி வந்த அந்த மற்றொரு பயணி யார்? என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை இட்டபோது, சென்னை சேர்ந்த ஒரு ஆண் பயணி அவர் அணிந்திருந்த ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த, 4 பார்சல்களை கைப்பற்றி சோதித்தனர். அதில் 1.59 கிலோ தங்கப் பசை இருந்தது கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர்.அதன் சர்வதேச மதிப்பு ரூ. 81. 31 லட்சம். இதை அடுத்து அந்தப் பயணியையும் கைது செய்தனர்.
இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் மலேசிய நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண், சுற்றுலா பயணி விசாவில் சென்னைக்கு வந்தார். அவர் மீது சந்தேகப்பட்டு, அவரையும் நிறுத்தி சோதனை இட்டனர். அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த பார்சல்களில் தங்கப் பசை இருந்தது. 1.2 கிலோ எடையுடைய 60.4 லட்சம் மதிப்புடைய தங்கப் பசையை பறிமுதல் செய்து, மலேசியப் பெண் பயணியை கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் அடுத்தடுத்து நடத்திய சோதனையில், 3 விமானங்களில் வந்த மலேசிய நாட்டுப் பெண் பயணி உட்பட, 3 பயணிகளிடம் இருந்து ரூ.2.4 கோடி மதிப்புடைய 4 .7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கு இடையே சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பேங்க்காக் செல்லும், ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி சுற்றுலா விசாவில், தாய்லாந்து செல்ல வந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது அவரை தனி அறைக்கு கொண்டு சென்று சோதனை நடத்திய போது, அவருடைய ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த அமெரிக்க டாலர் கரன்சி ரூ.8 லட்சம் மதிப்புடையதை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து பயணியையும் கைது செய்தனர்.