எலிவால் – குறிஞ்சி மைந்தன்

Bloody scary on the window and wall with rusty bars on old grungy prison cell wall, concept of horror and Halloween

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 57 எலிவால் – குறிஞ்சி மைந்தன்

கைதிகள் தூங்கியபிறகு விடியும்வரை வெகுநேரம் பேசிக் கொண்டிருப்பான். சிலபொழுதுகள் கண்ணீர் வற்றும்வரை அழுவான்; குரல்வளை உடையும்வரை சத்தமிடுவான்.

சிலசமயம் குருதி எட்டிப்பார்க்கும் வரை தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வான். சிந்திய குருதியைக்கொண்டு சுவரில் கிறுக்கிக்கொண்டே இருப்பான் மொத்தகுருதியும் சுண்டும்வரை.

இதுதான் மதிவாணனின் அன்றாட வாழ்க்கையென பாண்டிச்சேரிப் பெரியகாலாப்பட்டு சிறைச்சாலைக்குத் தெரியாமலில்லை.

அச் சிறையிலிருக்கும் மதிவாணன் யாரிடமும் பேசுவதில்லை; பழகுவதில்லை. அவன் வெளியில் வருவதும் போவதும் ரகசியம் காப்பவரின் செயல் போலிருக்கும்.

இது இன்றல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அவன் அப்படித்தான். சில தினங்களில் அவனுக்குத் தூக்கு; அதை மட்டும் நினைவில் வைத்திருக்கிறான். அப்படியே அவன் மறந்தாலும் சுவரிலுள்ள கரிக்கோடுகள் அவனுக்கு நினைவுறுத்தும்.

அதனால்தான் மதிவாணன் இரவில் பேசுவதைத் தவிர்த்தான் என்று சில கருணை உள்ளங்கள் கண்ணீர் வடித்ததுமுண்டு. இது அவனுக்கோ, அவன் அறையிலிருக்கும் சுவரின் கரிகோடுகளுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தினந்தோறும் சிறையதிகாரியின் லத்தி சத்தத்தில்தான் கைதிகளுக்குப் பொழுதே விடியும். மதிவாணனுக்கு இன்றைய பொழுதே கடைசிபொழுதென்று தெரியாமலில்லை. இருந்தும் உறக்கத்தில் ஆழ்ந்துபோனான்.

எப்போதும்போல் இன்றும் மருத்துவர் வந்தார்; மதிவாணனைப் பரிசோதனை செய்தார். ‘ஆல்ரைட்’ என்று சொல்லிவிட்டுத் திரும்பியதும் அவனது அறையில் முடி, சவரம் செய்வதற்காக நாவிதர் நின்றிருந்தார்.

நகர்வலம்போக பல்லக்கு இல்லையென்றாலும் இன்றையபொழுது என்னை அழைத்துச் செல்வதற்கு நான்கு, ஐந்து நபர்கள் இருக்கிறார்களே என்று மனத்தில் எண்ணிக்கொண்டான்.

மதிவாணனுக்குப் புத்தாடையும் உணவும் படைக்கப்பட்டன. சிறைச்சாலை முழுக்க அவனை நடக்க வைத்தனர். இவனுக்கு முன்பு சிறைக்கு வந்தவர்களும், பின்பு வந்தவர்களும் மதிவாணனைப் பார்த்து ஒருவித அச்சமடைந்தனர்.

அவனது நடைப்பயணம் ஒரு முடிவுக்கு வந்தது தூக்குமேடையில் நின்றபோது. அங்கிருக்கும் கண்கள் மதிவாணனைச் சூழ்ந்துகொண்டன. இனி அவனைப் பார்ப்பது இதுவே கடைசியென்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும். ஆனால் மதிவாணனோ இவர்கள்தாம் எனது இறுதி ஊர்வலத்திற்கு வந்த மனிதக்கூடுகள் என்று நினைத்துப் பார்த்தான்.

பிள்ளைப்பெற்ற தாய்மார்கள் குழந்தையைத் தொட்டிலிட்டுத் தாலாட்டுவது போல் அவனுக்கு எதிரே தூக்குக்கயிறு மதிவாணனைத் தாலாட்ட காத்துக்கொண்டிருந்தது. கருப்புத்துணியால் மதிவாணனின் முகத்தை மூடும்போது ஒரு குரல் ஒலித்தது.

“மிஸ்டர் மதிவாணன்”

“உங்களுக்கு ஏதேனும் கடைசி ஆசை இருக்கா?” என்றார் நீதிபதி.

“என் அறையிலிருக்கிற பொந்தையும் எலியையும் ஒன்னும் செய்ஞ்சிடாதீங்க….”

“இதுதான் என் கடைசி ஆசை…” என்றான்.

இதுநாள்வரை யாரிடமும் பேசாமலிருந்தவன் தனது மெளனத்தை உடைத்தான். அங்கிருந்தவர்களுக்கு மதிவாணனின் ஆசை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

“நான் கள்ளச்சாராயம் வித்ததால காலேஜ் பசங்க ரெண்டுபேரு செத்துட்டாங்க”.

“அதனால அந்த பசங்களோட குடும்பம் அவமானத்தில வெஷம் குடிச்சி செத்துப்போச்சு”.

“அஞ்சு வருஷம் எனக்கு சிறைதண்டனையும் தூக்குத் தண்டனையும் கோர்ட் தீர்ப்பளிச்சது”.

“இந்த விஷயம் கேள்விபட்ட என் பொண்டாட்டியும், என் ரெண்டு பொண்ணுங்களும் வெளியில தல காட்டமுடியாம கூனிக் குருகி போயிட்டாங்க”.

“என்மேல இருக்கற வெறுப்பு அவுங்களுக்கு அடங்கலனு இந்த அஞ்சு வருஷம் என்னைய தேடி வராதபோதே நான் தெரிஞ்சிகிட்டேன்”.

என்று மதிவாணன் தன் மனத்திலிருந்த வேதனையின் கணத்தை வெளிப்படுத்தியபோதே அவனது கண்கள் குளமாகின; வார்த்தைகள் கவ்விக்கொண்டன.

அங்கிருந்த செவிகளுக்கு மதிவாணனின் துக்கத்தைக் கேட்க தயாராக இல்லை. ஆனால் அவனது ஆசையின் அர்த்தம் எப்போது வெளிப்படும் என்கிற ஏக்கம்தான் அச் செவிகளுக்கு முக்கியமாகப்பட்டன.

“இதையெல்லாத்தையும் நெனச்சி நெனச்சி நான் தெனமும் அழுதுகிட்டு இருந்தன்”. எனக்கு ஆறுதலா யாராவது பேச வந்தாலும் அவுங்ககூட பேசறதுல்ல”.

“குற்றத்த ஒத்துக்கிட்ட பிறகும் குற்றவுணர்ச்சியிலேயே செத்துக்- கொண்டிருந்தன் ஒவ்வொருநாளும்”.

“அதுல இருந்து மீள இந்த உலகத்துல யாருமே இல்லனு நெனச்சிட்டுருந்தன்”.

“அப்பதான் ஒருநாள் என் அறையிலிருக்கிற பொந்துல ஒரு வால்  தெரிந்தது”.

“எனது சோகத்த நெனைச்சு நான் அழும்போதெல்லாம் அந்த வால் துடிக்கும்”.

“ஆரம்பத்துல பாம்பா இருக்குமோ, அரணையா இருக்குமோ எனக்குப் பயம்”.

“அந்த எலிகிட்ட தெனமும் பேசுவேன்”.

“அது தெனமும் பொந்துல இருந்து வந்து நான் பேசறத கேட்டு வால் ஆட்டும்”.

“கீச்… கீச்… கீசினு… சத்தம் போடும்”.

“இப்படியே என் ஒவ்வொரு இரவும் முடியும்”.

“அதை பாக்காம என்னால இருக்க முடியாது. அந்த எலியாலயும் இருக்க முடியாது”.

“அதுகிட்ட பேசிப்பேசியே குற்றவுணர்ச்சியிலிருந்து மீண்டு இருக்கிறதா நான் நம்பறன்”.

“மனசுல இருக்கும் பாரம் போக்க மனுஷன்கிட்ட பேசலாம்”

“அவுங்க நம்ம பிரச்சனைய கேப்பாங்களான்னு தெரியாது”.

“அப்படி கேட்டா பாரம் கொறையும்னு சொல்லவும் முடியாது”.

“ஆனா அதிகரிக்கலாம்”.

“இல்லையா”.

“ஆனா நான் எந்த மனுஷன்கிட்டயும் சிறையிலிருக்கும்போதும் சிறைவிட்டு வெளிவந்தபோதும் பேசியதில்ல”.

“என் உணர்வ மதிக்கிற இந்த எலி தோழனுக்காகதான் இப்ப உங்ககிட்ட பேசறன்”.

“எனக்கு இந்த உலகத்துல யாரும் வேண்டாம் இந்த எலியே போதும்”.

“நான் போனபிறகும் என்னையபோல இருக்கறவங்களுக்கு இந்த எலியும் வாலும் வேணும்”.

“தயவுசெய்து என் ஆசைய நிறைவேத்துங்க”

என்று மதிவாணன் தன் எலிவால் கதையை முடித்தான்; முகம் மறைக்கப்பட்டது. அவனது கதையைத் தூக்குக் கயிறு முடித்தது.

* * * * * * * * * * * *

Exit mobile version