மடை – கீர்த்தி

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 26 மடை – கீர்த்தி

‘கோடி மலையில் கொடுக்கும்மலை எந்த மலை, கொங்குமணி நாட்டினிலே உயர்ந்த மலை எந்தமலை’ என்று மதுரை சோமுவின் குரல் ஒலிக்கத் தொடங்கியதுமே அம்மா உள்ளே போய்விட்டாள்.

கண்ணை மூடியபடியே பெரிய மாமா காபியை உறிஞ்சிக்கொண்டிருந்தார். நானும் தம்பி சுதாகரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டோம்.

‘மருதமலை மாமணியே முருகய்யா’ என்று பாடிக் கொண்டிருந்தபோது கண்ணை மூடி அமர்ந்திருந்தார் மாமா. ‘பனியது மழையது நதியது கடலது’ என்று சோமு பாடிக்கொண்டிருக்கையில் மாமாவின் உடல் அதிர்ந்து குலுங்கியது. அடுத்த சில வினாடிகளில் பாடல் முடியவும், மாமா தேம்பித் தேம்பி அழுதார். சற்று நேரத்தில் அவரே அவரை ஆசுவாசப்படுத்திக் கொண்டதுபோல தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டிருக்கும்போது, அம்மா கூடத்திற்கு வந்தாள்.

“சாரதா, நான் அப்ப கிளம்புறேன்” என்றபடி மாமா எழுந்து செருப்பை மாட்டிக் கொண்டார்.

பெரிய மாமா என்று நாங்கள் அழைக்கும் முத்துசாமி மாமாவின் இந்தப் பாட்டைக் கேட்டு இப்படி அழுவது ஒன்றும் புதிதல்ல. ஆரம்பத்தில் எனக்கும் சுதாகருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இந்தப் பாடலைக் கேட்டு அழும்படி அப்படி என்ன இருக்கிறது? மாமா தீவிர முருக பக்தரா? அப்படியும் சொல்ல முடியாது. எல்லாக் கோயில்களுக்கும் போகிறவர்தான்.

அப்போது நான் ஏழாம் வகுப்பிலும் சுதாகர் ஐந்தாம் வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தோம். நண்பர் ஒருவர் தன் பழைய டேப் ரிகார்டரை விற்கப் போவதாகச் சொல்ல, அப்பா அந்த நேஷனல் பானசனிக் டேப் ரிகார்டரை அறுநூறு ரூபாய்க்கு வாங்கி வந்தார். வீட்டில் கேஸட் எதுவும் கிடையாது. கேஸட் கடைக்குப் போய் ஒரு சில பக்திப் பாடல்கள் கேஸட்டுகளை வாங்கினார். இரண்டு டிடிகே ப்ளைன் கேஸட் வாங்கி சில சினிமாப் பாட்டுக்களைப் பதிவு செய்து கொண்டு வந்தார்.

ஒருநாள் காலையில் பக்திப் பாடல் கேஸட்டில் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும்போது பெரியமாமா வீட்டிற்கு ஏறி வந்தார். அவர் வந்த நேரத்தில் கேசட்டில் ‘மருதமலை மாமணியே’ பாடல் ஒலிக்க மாமா அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து கண்ணை மூடிக் கொண்டார். பாடல் முடியும் நேரத்தில் தேம்பித் தேம்பி அழுதார். அப்பா அதைக் கவனித்தாரோ தெரியவில்லை. நாங்கள் கவனித்தோம். வளர்ந்த ஒரு ஆண் அப்படி அழுவதை முதன் முதலில் பார்த்தேன்.

அதன் பிறகு வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்களாவது மாமா எங்கள் வீட்டிற்கு வந்து இந்தப் பாட்டைக் கேட்டு அழுதுவிட்டுத்தான் போவார். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அதைப் பார்த்துப் பார்த்து எங்களுக்கும் பழகிவிட்டது.

“ஏம்மா மாமா இந்தப் பாட்டைக் கேட்டு அழுறார்?” என்று நாங்கள் அம்மாவிடம் கேட்டால், “அண்ணன் அப்படித்தான்” என்பாள்.

அம்மாவின் மூத்த அண்ணன் முத்துசாமிதான் குடும்பத்தில் பெரியவர். அதன் பிறகு அம்மா. அதற்கடுத்து விஜயா சித்தியும், வேணு மாமாவும். சித்தி கோவில்பட்டியில் இருக்கிறாள். வேணுமாமா பரோடாவில் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை வேலை என்பதால் குடும்பத்தோடு அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

எங்கள் தாத்தா, அதாவது அம்மாவின் அப்பா தொடங்கிய முத்தூஸ் காபி கடையை மாமாதான் நடத்திவருகிறார். மாமாவிற்கு மூன்று வயதிருக்கும்போது பாலமோர் ரோட்டில் மாமாவின் பெயரில் தாத்தா தொடங்கிய கடை அது. அறுபது வருடங்களாக கடை நடந்துகொண்டிருக்கிறது.

அந்தக் காலக்கட்டத்தில் எத்தனையோ காபித்தூள் கம்பெனிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும், தாத்தாவின் காபித்தூள் கடகடவென்று மக்களை ஈர்க்கத் தொடங்கிவிட்டது. கர்நாடகாவிலிருந்து காப்பிக்கொட்டைகளை நேரடியாக வாங்கி, வறுத்துப் பொடித்து பாக்கெட் போட்டார்.

காப்பிக்கொட்டையை வறுப்பதென்பது ஒரு தனி கலை. வறுபடாமலும் போய்விடக்கூடாது, கருகியும் போய்விடக்கூடாது. அந்தப் பக்குவத்தை தாத்தாவிடமிருந்து மாமா சீக்கிரமே கற்றுக் கொண்டார். மாமா இருபது வயதிலேயே கடையைக் கவனிக்க வந்துவிட்டாராம்.

கடையிலேயே காப்பிக்கொட்டை அரைக்கும் மிஷின் ஒன்று இருந்தது. சிலர் காப்பிக்கொட்டைகளை வறுத்துக் கொண்டு வருவார்கள். அவர்களுக்கு அரைத்துக் கொடுப்பார் மாமா. ஒரு கிலோ காப்பிக்கொட்டைக்கு நூறு கிராம் சிக்கரி சேர்த்துக் கலந்து கொடுப்பார்.

கல்லூரி இல்லாத நாட்களில் நான் மாமாவின் கடைக்குப் போவேன். வியாபாரத்தையும் கவனிப்பதுண்டு. காப்பித்தூள் வாசனை எனக்கு ரெம்பவே பிடிக்கும். அதுவும் மழைக்காலம் என்றால் அது மனதை ஊடுருவி நம்மை எங்கோ அழைத்துச் செல்லும். மாமாவிடம் காப்பித்தூள் வாங்கி ஃபில்டர் காபிபோடும் பக்கத்து ஓட்டலில் மாமா காப்பி வாங்கித் தருவார். நான் ருசித்துக் குடிக்கும்போது மாமாவின் முகத்தில் பெருமிதம் தெரியும்.

அப்படியொரு மழைக்காலத்தில் மாமாவின் கடையில்தான் நான் டெய்சியை முதன் முதலில் பார்த்தேன். அப்போது கடையில் நான் மட்டும்தான் இருந்தேன்.

திடீரென்று கடைக்குள் ஏறி வந்தவள் ஐநூறு ரூபாய்க்குச் சில்லறை கேட்டாள். சிவந்த நிறமும் சுருண்ட முடியும் மைதீட்டிய அகலக் கண்களுமாய் இருந்தவளுக்கு எப்படி சில்லறை கொடுக்காமல் இருக்க முடியும்? அழகான பெண்ணுக்கு உதவி செய்யத்தானே கடவுள் இளைஞர்களைப் படைத்திருக்கிறான். பார்த்தவுடனே கிறிஸ்தவப் பெண் என்று தெரிந்தது. கழுத்தில் கிடந்த மெல்லிய தங்கச்சங்கிலியில் ஒரு சிலுவை… அவள் தொண்டைக்குழிக்கு மேல எழும்பி அடங்கிக் கொண்டிருந்தது.

பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் மின்சாரக் கனவு, காதலுக்கு மரியாதை போன்ற சினிமாக்களைப் பார்த்த பிறகு  கிறிஸ்தவ இளம்பெண்களின் மீது எனக்கு தனி கிறக்கம் உண்டாகியிருந்தது.

தலைநிறைய பூவைத்து, கொலுசு ஒலிக்க நடந்து வரும் இந்துப் பெண்களை என் நண்பர்கள் வர்ணித்துக் கொண்டிருந்த நேரத்தில், கழுத்தில் மெல்லிய தங்கச் சிலுவை தொங்கும் கிறிஸ்தவப் பெண்கள் என் கனவில் வந்து போனார்கள். அவர்கள் மேகங்களிடையேயிருந்து பூமிக்கு இறங்கிவந்த தேவதைகள் என்றே என் மனசு அடிக்கடி சொல்லிக் கொண்டது. கூடவே சமீபத்தில் பார்த்திருந்த சச்சின் படத்தில் வரும் ஜெனிலியாவை ஞாபகப்படுத்தினாள் டெய்சி. முகசாயல் கொஞ்சம் அப்படித்தான் இருந்தது.

நான் கல்லாவிலிருந்த அத்தனை ரூபாய்களையும் நாணயங்களையும் எடுத்து எண்ணி அவளிடம் கொடுத்துவிட்டேன். தாங்க்ஸ் என்றபடி ஒரு புன்னகையையும் பதிலுக்குக் கொடுத்துவிட்டுப் போனாள். மழையில் நனைந்தபடி ஒரு வண்ணத்துப்பூச்சி என்னைக் கடந்து பறந்து போனது.

பிறகு மாமா வந்து கல்லாவைப் பார்த்துவிட்டு என்னிடம் சத்தம் போட்டார். “நான் கமிஷன் கொடுத்து சில்லறை வாங்கி வெச்சிருக்கேன். நீ இப்படி தூக்கிக் கொடுத்துட்டியே” என்றார். 

“வயசான பாட்டி மாமா. பாவமா இருந்தது. அதான் கொடுத்துட்டேன்” என்று முதல் பொய்யைச் சொன்னேன்.

டெய்சி மாலை ஆறிலிருந்து ஏழு வரைக்கும் ட்யூஷன் என்று தெரிந்தது. தினமும் அவளைப் பார்க்க ஆசை இருந்தாலும் மாமா கண்டுபிடித்துவிடுவாரே என்று ஒருநாள் விட்டு ஒருநாள் ஆறு மணிக்கு மாமாவின் கடைக்கு நான் போக ஆரம்பித்தேன். சரியாக ஏழு ஐந்திற்கு டெய்சி வருவாள். இரண்டாம் நாள் கடையைக் கடக்கும்போது உள்ளே  இருந்த என்னைப் பார்த்து புன்னகைத்தாள். ஊரில் பெய்யாத மழை எனக்கு மட்டும் பெய்தது.

அடுத்தவாரம் நான் சற்றும் எதிர்பாராத நிகழ்வு. ஒரு சனிக்கிழமை மாலைப்பொழுதில் நான் சென் ஜோசப் கான்வென்ட் வழியாக வந்தபோது, அடுத்திருந்த கத்தோலிக்க சர்ச்சுக்கு டெய்சி வந்தாள். இருவரும் சிறிய நடைபாதையில் எதிரெதிரே சந்தித்துக் கொண்டோம்.

“இங்கே எங்கே?” என்று அவளே சிரித்துவிட்டுக் கேட்டாள்.

“ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போய்ட்டு வர்றேன். நீங்க.. நீ.. எங்கே இங்கே?” தடுமாறிக் கேட்டேன்.

“சர்ச்சக்கு. மாஸ் இருக்கு” என்ற அவளது பதிலுக்குப் பிறகு கிடைத்த ஒரு நிமிடத்தில்தான் அவள் பெயர் டெய்சி என்றும், ஹோலி க்ராஸ் காலேஜில் பிஎஸ்ஸி கணிதம் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள் என்றும் தெரிந்து கொண்டேன். அடுத்தடுத்த நாட்களில் டியூஷனுக்கு வந்த டெய்சி இன்னும் மனதில் நெருங்கி வந்திருந்தாள். ஒருநாள் ஃபோன் நம்பரைக் கேட்டேன். மறுப்பில்லாமல் அவள் தந்தபோதுதான், அவள் மனதிலும் ஏதோ இருக்கிறது என்று புரிந்தது. என் செல்ஃபோன் நம்பரையும் அவளுக்குக் கொடுத்தேன்.

என்னிடம் பட்டன் ஃபோன்தான் இருந்தது. அவள் கையிலிருந்த ஸ்மார்ட் ஃபோன் அவளது குடும்பச் செழிப்பைச் சொன்னது.

ஹாய் என்று ஒருநாள் எஸ்எம்எஸ் அனுப்பினாள் டெய்சி. ஆயிரம் மின்னல்கள் செல்ஃபோனுக்குள் மின்னி மறைந்தன. “ஃபோன் பண்ணலாமா?” என்று அடுத்த மெசேஜ். ஃபோனைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வெளியே ஓடி வந்து “ஓகே” என்றேன்.

ஃபோன் பண்ணினாள். ஃபோனில் டெய்சியின் குரல் இன்னும் அழகாக இருந்தது. என் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் ஒரு பெரிய புக் ஸ்டாலைச் சொல்லி, ஒரு மேத்ஸ் டிக்ஷனரி வாங்க வரத் தர முடியுமா? என்று கேட்டாள்.  சாயங்காலம் ட்யூஷன் வரும்போது மாமாவின் கடையில் புக்கை வாங்கிக்கிட்டு பணத்தைத் தருவதாகவும் சொன்னாள்.

அப்பாவிடம் நூறு ரூபாய் அவசரத் தேவை என்று வாங்கிக் கொண்டு டெய்சி சொன்ன புக்கை வாங்கிவிட்டேன். இதைவிட என் காதலை அவளிடம் சொல்வதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்பதால், சிறியதாக ஒரு காதல் கடிதத்தை கவிதை நடையில் எழுதி அந்தப் புத்தகத்திற்குள் வைத்தேன். வழக்கத்தைவிட சீக்கிரமே மாமாவின் கடைக்கு வந்து, மாமா வெளியே சென்றபோது டெய்சிக்கு ஃபோன் பண்ணினேன்.

‘தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே’ ரிங் டோன் ஒலித்தது.

‘இது எந்த சினிமால வர்ற பாட்டு?’ யோசித்துப் பார்த்தேன். ஞாபகத்துக்கு வரவில்லை. ஆனாலும் அந்தப் பாடல் என்னை என்னவோ செய்தது. டெய்சி ஃபோனை எடுத்துப் பேசினாள். புக் வாங்கிவிட்ட விஷயத்தைச் சொன்னேன்.

டெய்சி வந்தாள். புத்தகத்தைக் கொடுக்கும்போது நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. “ரெம்ப தாங்க்ஸ்” என்றபடி பணத்தைத் தந்துவிட்டு, புத்தகத்தை வாங்கிக் கொண்டாள். அன்று வீட்டிற்கு வந்த பிறகும் எனக்குப் படபடப்பு குறையவேயில்லை.

இரவு பத்துமணி அளவில் டெய்சியிடமிருந்து ஒரு மெசேஜ். கடவுளை வேண்டிக் கொண்டே இன்பாக்ஸைத் திறந்து பார்த்தேன். ஒரு ஸ்மைலி மட்டுமே இருந்தது. பார்த்ததும் அப்பாடா என்றிருந்தது. என் காதல் கடிதத்தைப் பார்த்து கோபப்படவில்லை. ஆனாலும் என் காதலுக்கு இதுதானா பதில்? யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அடுத்த மெசேஜ் வந்தது… ‘உங்களைப் பிடிச்சிருக்கு’ என்று தங்கிலீஷில் பதில் அனுப்பியிருந்தாள். 

இதயம் எங்கோ எழுந்து பறப்பது போலிருந்தது. அய்யோ இன்று எப்படி இரவு உறங்கப்போகிறாய்? மனம் என்னிடமே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது. உண்மைதான். அன்று உறங்கவேயில்லை. இரவு முழுதும் டெய்சியுடன் ஏதோவொரு  நீண்ட புல்வெளியில் நடந்து கொண்டிருந்தேன்.

மறுநாளிலிருந்து எங்கள் காதல் துளிர்விட்டு வளர ஆரம்பித்தது. ஒருமுறை என்னை சர்ச்சுக்குக் கூட்டிப் போனாள். அதுவரை சர்ச்சுக்குள்ளேயே போகாத நான் டெய்சி செய்வதைப் பார்த்து முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தேன்.

“உங்க கோயிலுக்குள்ளே நான் இதுவரைக்கும் போனதேயில்லை, கூட்டிட்டுப் போறியா?” டெய்சி என்னிடம் கேட்டாள். வடிவீஸ்வரம் மாதவப் பெருமாள் கோயிலுக்குக் கூட்டிச் சென்றேன். பெருமாள் கோயில் சந்தனத்தை நெற்றியில் சின்னதாகத் தீற்றிக் கொண்டாள். அழகின் கடலில் அலைகள் எழும்பி அடங்கின. பிறகு நான் செய்ததைப் பார்த்து பட்டர் முன்னே போய் தலைகுனிந்தாள். சடாரியை பட்டர் டெய்சியின் தலையில் வைத்ததும் குனிந்தபடியே புன்னகைத்தாள். பெருமாளும் இயேசுவும் கைலுக்கிக் கொண்டார்கள்.

ஏதேனும் ஒரு பிறவியில்தான் ஒரு ஆணுக்கு தேவலோகப் பெண் ஒருத்தி மனைவியாக வாய்ப்பாளாம். அது இந்தப் பிறவிதான் என்று எனக்குத் தோன்றியது. 

“டெய்சி, நான் கிறிஸ்டியனா மதம் மாறட்டுமா? மதம் நம்ம காதலைப் பிரிச்சுடக்கூடாதுல்ல, அதுக்காகத்தான்” டெய்சியை இந்தப் பிறவியில் எக்காரணம் கொண்டும் தவறவிட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் கேட்டு விட்டேன்.

“ஓ, அப்ப நான் இந்துவா மாறிடுறேன்” சொல்லிவிட்டு, க்ளுக் என்று சிரித்தாள்.

சந்தோஷமாக இருக்கும் பொழுதுகள் வேகமாக ஓடிவிடுகின்றன. அல்லது அப்படி தோன்றுகிறது. டெய்சியுடனான காதல் வந்த இரண்டு வருடங்கள் அப்படித்தான் ஓடிப் போயின. நான் எம்காம் முடித்துவிட்டிருந்தேன். டெய்சி எம்எஸ்ஸி சேர்ந்திருந்தாள். என் வீடு வடசேரியில் இருக்கிறது என்று டெய்சியிடம் சொல்லியிருந்தேன். ராமன்புதூரில் டெய்சியின் வீடு இருக்கிறது என்றும், டெய்சியின் அப்பா ரப்பர் ஷீட் மொத்த வியாபாரம் செய்கிறார் என்றும் நான் அறிந்து வைத்திருந்தேன்.

ஒருநாள் அசட்டுத் துணிச்சலில் நானும் என் கல்லூரி நண்பன் ஹரிஹரனும் சைக்கிளில் டெய்சியின் வீட்டைத் தேடி போனோம். அது பெரிய பங்களா. வீட்டின் உள்ளே ஹோண்டா சிட்டி கார் நின்றிருந்தது. நாய்கள் ஜாக்கிரதை என்ற போர்டை மட்டும் தள்ளிநின்று பார்த்துவிட்டு திரும்பிவிட்டோம்.

வழக்கமாக ஏழு மணிக்குள் வீடு திரும்பும் என் அப்பா எட்டு மணி ஆகியும் வரவில்லை. எட்டரை மணிவாக்கில் அப்பா வேலைபார்க்கும் மில்லில் இருந்து ஒருவர் சைக்கிளில் எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்பாவுக்கு கையையும் காலையையும் அசைக்க முடியாமல் விழுந்துவிட்டதாகச் சொன்னார்.

அம்மாவும் நானும் தம்பியும் பதறிப்போனோம். உடனே ஒரு ஆட்டோ பிடித்து மில்லுக்குப் போனோம். மில்லின் வெளி வராண்டாவில் அப்பாவை உட்கார வைத்திருந்தார்கள். தூணோடு சாய்ந்தபடி அமர்ந்திருந்த அப்பாவின் வாய் வலதுபுறம் கோணலாக இருந்தது. வலது கையும் காலும் தொங்கிக் கொண்டிருந்தது.

அம்மா வாய்விட்டு அலறிவிட்டாள். எனக்கும் தம்பிக்கும் அழுகை வந்தது. உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். ஸ்கேன் செய்து பார்த்ததில் மூளையில் வலப்புறமாக ரத்தம் உறைந்து இரண்டு கட்டிகள் இருப்பதாகச் சொன்னார்கள்.  ஊசியும் மாத்திரைகளும் தந்து கட்டிகளைக் கரைத்துவிடலாம் என்று டாக்டர் சொன்னார். 

ரத்தக் கட்டிகள்க் கரைய எப்படியும் ஆறுமாதமேனும் ஆகும். ஆனால் அதற்குப் பிறகும் முழுமையாக எழுந்து நடமாடுவாரா? என்பது சந்தேகம்தான். வேறு சில மருந்துகளும் சாப்பிட்டாக வேண்டும், பிஸியோதெரபி செய்ய வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள்.

இரண்டு வார சிகிச்சைக்குப் பிறகு ஆஸ்பத்திரியிலிருந்து அப்பாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்குக் கொண்டு வந்தோம். அப்பாவின் இயற்கை உபாதைகள் எல்லாம் படுக்கையிலே கழிய ஆரம்பித்தது. அம்மா அக்கறையாகவே கவனித்துக் கொண்டாள்.

தனியார் மில்லில் வேலைக்குப் போகாமல் எத்தனை மாதங்கள் சம்பளம் தருவார்கள்? அப்பாவின் வருமானமும் நின்றுபோய், செலவும் அதிகமாகியிருந்தது. குறைந்த சம்பளம் என்பதால் சேமிப்பு எதுவும் இல்லை.  பெரிய மாமாதான் அவ்வப்போது செலவுக்குப பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒருநாள் காலையில் வீட்டிற்கு வந்த பெரிய மாமா சொன்னார்..

“இனியும் நம்ம மனோகர் இப்படி இருக்கக்கூடாது. வருமானம் இல்லாம எப்படி குடும்பம் நடக்கும். என் சிநேகிதன் ஒருத்தன் திருப்பூர்ல பனியன் கம்பெனியில மேனேஜரா இருக்கான். அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட் வேலை ஒண்ணு காலியா இருக்காம். நம்ம மனோகர் அந்த வேலைக்குப் போறது எனக்கு நல்லதுன்னு படுது” என்றார்.

எனக்கு உள்ளுக்குள் அதிர்ந்தது. வீட்டில் எனக்கிருந்த பொறுப்பையும் மீறி டெய்சி கண்கள் முழுக்க வந்து போனாள். திருப்பூர் போய்விட்டால் டெய்சியைப் பார்ப்பதெல்லாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. வெறுமனே ஃபோனில் மட்டுமே பேசிக் கொள்வதற்குத்தானா இப்படி காதலித்தது?

அப்பாவுக்கான மருத்துவச் செலவை நினைத்துப் பார்த்து, நான் திருப்பூருக்குப் புறப்பட்டேன்.

திருப்பூரில் மாமாவின் சிபாரிசின் பேரில் வேலை கிடைத்தது மட்டுமல்ல, ஆரம்பத்திலேயே ஓரளவு நல்ல சம்பளமாகத்தான் கொடுத்தார்கள். மேனேஜரே தனக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டு மாடியில் அறை பிடித்துத் தந்தார்.

வேலைக்குச் சேர்ந்த மூன்று மாதங்கள் கழித்து ஊருக்கு வந்தேன். டெய்சியை ஒருமுறை சந்தித்தேன். என்னைப் பார்த்ததும், என் குடும்பத்தின் நிலையை நினைத்து ரெம்பவே வருத்தப்பட்டாள். சட்டென்று அவளைக் கட்டியணைத்துக் கொண்டேன். எத்தனை வருடங்கள் ஆனாலும் எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னாள்.

அடுத்த நாளே திருப்பூர் திரும்பிவிட்டேன். ஆறு மாதங்களில் மாதங்களிலேயே அப்பாவின் தலையிலிருந்த ரத்தக் கட்டி முழுவதும் கரைந்துவிட்டதாக அம்மா சொன்னாள். ஓரளவு கைகால்களை அசைக்கிறார் என்றும் சொன்னாள். ஆனால் முன்பு போல நடப்பது, வேலை செய்வதைப் பற்றியெல்லாம் டாக்டர் எதுவும் சொல்லவில்லை என்று தெரிந்தது.

நடுவில் நான்கு முறை டெய்சியிடம் ஃபோனில் பேசினேன். திடீரென்று ஒருநாள் டெய்சியின் ஃபோன் நம்பர் உபயோகத்தில் இல்லை என்று ஃபோன் தகவல் சொன்னது. எனக்குப் பைத்தியம் பிடித்ததுபோல இருந்தது. ஒருமுறை ஊருக்குப் போய் வரலாம் என்று நினைத்து லீவு கேட்டேன். இன்னும் ஒரு மாதத்திற்கு லீவு தர வாய்ப்பில்லை என்று கம்பெனியில் சொன்னார்கள்.

அடுத்த மாதம் வெறும் இரண்டு நாட்கள் விடுப்பில் ஊருக்கு வந்தேன். டெய்சியுடனான என் காதலைப் பற்றி அறிந்த ஒரே நண்பன் ஹரிஹரன் இரவில் என்னைத் தேடி வந்தான். டெய்சிக்குக் கல்யாணம் ஆகிவிட்டதென்றும், அவள் கணவனோடு ஜெர்மனிக்குப் போய்விட்டாள் என்றும் தலையில் இடியை இறக்குகிற செய்தியைச் சொன்னான்.

முன்பு ஓரிருமுறை டெய்சியோடு போய் பிரார்த்தனை செய்த அதே சர்ச்சுக்குப் போகத் தோன்றியது. நேராக கால்கள் சர்ச்சை நோக்கி நடந்தன. சர்ச் மூடியிருந்தது. வெளியே ரோட்டில் நின்று பார்த்தேன். உள்ளிருந்த பெரிய மரக்கதவின் மேல் சிறு பச்சைநிற விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது.

வீட்டிற்கு வரும்வரை துக்கத்தை அடக்கி வைத்திருந்தேன். மீண்டும் திருப்பூர் புறப்படுவதற்கு முன்பு அப்பாவிடம் விடைபெறப் போனவன், ஓவென்று அழுதேன். மனம் முழுவதும் டெய்சி இருந்தாள்.

என் அழுகை சத்தம் கேட்டு அம்மா பதறி ஓடி வந்தாள்.

“மனோ, இன்னும் ஆறு மாசத்துல அப்பாவுக்குச் சரியாகிடும்னு டாக்டர் சொல்லியிருக்கார்டா” என்றபடி அம்மாவும் லேசாக அழுதாள்.

இரண்டொரு தினங்கள் விடுமுறை கிடைத்தும்கூட ஊருக்குப் போகத் தோன்றவில்லை எனக்கு. விடுமுறைகளில் மருதமலை, சென்னிமலை என்று கோயில்களுக்குப் போய்விட்டு, திருப்பூருக்கே திரும்பினேன்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு அம்மா ஃபோன் செய்திருந்தாள். அப்பா எழுந்து மெல்ல மெல்ல நடக்கிறார் என்றும், ஊருக்கு வா என்றும் சொன்னாள். தொடர்ந்து அம்மா வற்புறுத்த ஊருக்குக் கிளம்பிப் போனேன். அப்பாவுக்கு வலது காலும் கையும் இன்னும் சரிவர இயங்கவில்லை என்று தெரிந்தது. அது சரியாக இரண்டு வருடங்கள், மூன்று வருடங்கள்கூட ஆகலாம் என்று என் உள்மனம் சொன்னது. அடர்ந்த வெறுமை என்னைச் சுற்றி நின்றிருந்தது.

மறுநாள் காலையில் பெரியமாமா வந்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகக் கேட்காதவர்.. அம்மாவிடம், “சாரதா, அந்தப் பாட்டைப் போடு” என்றார்.

‘கோடி மலையில் கொடுக்கும்மலை எந்த மலை..’ என்று தொடங்கியது மதுரை சோமுவின் குரல். பாடல் முடியும் நேரத்தில் மாமா தேம்பித் தேம்பி அழுதார். ஏனோ அதைப் பார்த்து எனக்கு மட்டுமல்ல, சுதாகருக்கும் இப்போது சிரிப்பு வரவில்லை. கனத்த மௌனமாக இருந்தது வீடு.

மாமா கிளம்பிப் போனார்.

“ஏன்மா மாமா இந்தப் பாட்டுக்கு மட்டும் இப்படி அழுறார்?” சுதாகர் எதையோ புரிந்து கொண்டதைப் போல அம்மாவிடம் கேட்டான்.

கேள்வி கேட்ட சுதாகரை விட்டுவிட்டு, அம்மா என்னை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள்.

“அண்ணனுக்கு இருவது வயசு இருக்கும்போது ஒரு பொண்ணை சிநேகிச்சான். அந்தப் பொண்ணுக்கும் அண்ணன்மேல ரெம்ப சிநேகம்தான். அவ வீட்டுல ஒத்துக்கல. ஒருநாளு குமாரகோயில் குளத்துல போய் விழுந்து செத்துப்போனா. அண்ணனுக்கு முருகன் பிடிச்ச தெய்வம்தான். அந்த முருகன் அவளைக் காப்பாத்தாம விட்டுட்டானேன்னு முருகன் மேல கோவம். தெய்வத்து மேல கோவப்பட்டா யாருக்கு இழப்பு? கோவம் வருத்தமா மாறி எதுவும் செய்ய முடியாமப் போச்சேன்னு அழுகையா வருது. ஏற்கனவே ஈசன் எல்லார் தலையிலயும் எழுதித்தானேடா விட்டுருப்பான்…”  -சொன்ன அம்மா, என்னை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்துப் பெருமூச்சுவிட்டபடி உள்ளே போய்விட்டாள்.  

யாரோ நண்பனைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி சுதாகர் வெளியே கிளம்பினான்.

என் ஸ்மார்ட் ஃபோனில் சேமித்து வைத்திருந்த, அந்தப் பாடலைத் தேடி மெதுவாக ஒலிக்கவிட்டேன். “தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே…” பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

——————–

Exit mobile version