கதைச்சொல்லிகள்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 40 கதைச்சொல்லிகள்

எந்த இடத்துக்குப் போகணும். விழுப்புரம் பக்கத்துல்ல மையிலத்துக்கு போகணும்யா. இது ‘தானி’ங்க. சென்னைக்குள்ள மட்டும்தான் ஓடும். அது தெரியும்ங்கய்யா. தனது பக்கத்தில் இருந்த மனைவி செண்பகத்தைக் காட்டிய ஏழுமலை நானும் இவளும் தான் பேருந்துக்குப் பயணப்பட்டோம். வர்ற வழியில்ல பையில்ல இருந்த பணத்தைக் களவாடிட்டாங்க. அதான் எப்படி வூட்டுக்குப் போறதுண்ணுத் தவிக்கிறோம். என்னங்கய்யா. இந்த காலத்துல்ல இப்படி இருக்கீங்களே. எதுக்காக வந்தீங்க, யாரப்பாக்க வந்தீங்க, உங்க சொந்தபந்தம் யாராவது இருக்காங்களா என கேள்விக் கேட்டப்படி தனது ‘தானி’யை விட்டு இறங்கிய பாலகிருஷ்ணன் நிறைய கேட்டான். ஆனால், அவர்களின் பதில் ஒற்றைவரியில் மட்டுமே இருந்தது. ஊருக்குப் போகணும்.

            கையில் இருந்த நூற்றிமுப்பது ரூபாயைக் காட்டி மிச்சம் முந்நூறுரூவா இருந்தா போயிருவோம். ஊருல்லப் புள்ளைங்க சோறுப் போடாம விரட்டி விட்டுட்டாங்க. பொழப்புத் தேடி வந்து பத்து நாளாச்சு. எல்லாமே எங்க வயசக் காரணம் காட்டி திருப்பி அனுப்பிறாங்க. ஏழுமலைக்கு எழுபதும் செண்பகத்துக்கு அறுபத்தி ஐந்தும் இருக்கும். அவளுக்கு காதுக் கொஞ்சம் மந்தம். அதான் நீங்க கேட்டதுக்குப் பதில் சொல்லல. பாலுவுக்கு அவர் சொன்ன கதை மனதைப் பிசைந்தது. இந்த சமூகத்தையும் சனங்களையும் நினைத்து கோபம் அதிகமாக நெஞ்சில் கொப்பளித்தது.

            உங்களுக்குத் தெரியுமா. தாய் தந்தைக்கு சோறுப் போடாதப் புள்ளைங்க இந்த தேசத்தின் குற்றவாளிகள். உடனே வண்டியில்ல ஏறுங்க. காவல் நிலையத்துல்ல மனுக்குடுத்து விசாரிக்க வச்சுருவோம். வேணாம்பா என செண்பகம் கண்கலங்க வாழ்க்கை முழுவதும் சுமந்தாச்சு. வலிக்குதுய்யா. விட்டுருலாம். ஆமாம்பா. அவரு கொத்தனாரு. நானு சித்தாளு. கருப்பு அடைந்த கண்கள், பூலோக ரேகை போல முகம் முழுவதும் முதுமையின் சுருக்கங்கள். இந்தியப் பெற்றோர்களின் இயலாமை மொத்தத்தையும் அவர்களிடம் தான் பாலுவுக்குப் பார்க்கத் தோன்றியது. இந்த சென்னை எத்தனை பேர் வாழ்க்கையை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. நம்ப வைத்து கழுத்தறுப்பதில் தலைநகருக்கு இணையான நகரம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இங்கே பசித்தவன் பயங்கரமானவன், பணம் வைத்திருப்பவன் தேசப்பக்தன். பொதுச் சொத்துக்களை ஆக்கிரமிப்பதில் வல்லவர்கள். அரசு திரும்ப கேட்டால் திரும்பத்தர மறுத்து ஆர்ப்பாட்டம் செய்யும் நல்லவர்கள். சென்னை ஒரு சிலருக்கு மட்டும் தான் அன்னை. மற்றவர்களுக்கு வார்த்தையால் சொல்லமுடியாது.

            அய்யா. அம்மா. வாங்க. வண்டியில்ல ஏறுங்க. இருவரும் ஒருமித்தக் குரலில் ‘எங்கப்பா’ என்று கேட்டனர். கோயம்பேடுக்குத் தான். காலையில்ல இருந்து வண்டி ஓட்டுனதுல்ல நானூறுபா இருக்கு. வாங்க. நானே உங்கள பேருந்துல்ல ஏத்திவிட்டுறேன் என்றதும் இருவரும் கையெடுத்துக் கும்பிட்டு நீங்க நல்லாயிருக்கணும் தம்பி என ஏறிக் கொள்ள, வண்டி அவர்கள் நின்றிருந்த கேசவர்த்தினி நிறுத்தத்தில் இருந்து திரும்பி விருகம்பாக்கம் சந்தை வழியாக கோயம்பேடு வளைவில் சென்று நின்றது. அவர்களின் அந்த அரைமணி நேரம் பயணத்துக்குள் பட்டணத்தின் பாடுகளையும் தன் குடும்பத்தின் சூழ்நிலைகளையும் பாலு பகிர்ந்து கொண்டான். அவர்கள் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட அவலங்களைச் சிறுகதையாகவே சொல்லியிருந்தனர்.

            பேருந்துக்காகக் காத்திருக்க, அதற்குள் இருவருக்கும் இரண்டுப் பொட்டலம் உணவுகளையும் தண்ணீர் குப்பி ஒன்றையும் வாங்கி வந்தான் பாலு. அவர்கள் இருவரும் அவன் கையைப் பிடித்து எப்படி நன்றி சொல்றதுண்ணு தெரியலைப்பா. பொழைக்க வந்த எங்களுக்குப் போக்கிடம் தெரியாம தவிச்சுக்கிட்டு இருந்தோம். கடவுள் மாதிரி வந்து என பேசிய செண்பகத்தைப் பார்த்து பெரிய வார்த்தை சொல்லாதீங்க. ஊருக்கு போயீ காவல் நிலையத்துல்ல உங்க பசங்களப் பத்தின புகார் கொடுங்க என்று கூறி தனது பையில் இருந்த நானூறு பணத்தை பெரியவரின் பையில் வைத்து திருச்சி செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்ட பாலு, நடத்துனரைப் பார்த்து இவுங்கள விழுப்புரத்துல்ல பாதுகாப்பா இறக்கிவிட்டுருங்க. செண்பகத்திடம் உணவைக் கொடுத்து அவர்களை இருக்கையில் உட்கார வைத்துவிட்டு பாலு கீழே இறங்கினான். இருவரும் கையெடுத்துக் கும்பிட, பாலு கையசைத்தான்.

            சிறிது நேரம் பாலுவுக்கு எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான். பத்துரூவா காணாமப் போச்சுதுன்னா பதட்டமாயிர நம்ம மக்கள் எப்படி பெத்தவங்கள துரத்தி விட்டுட்டு மகிழ்ச்சியா இருக்காங்களோ தெரியலையே என யோசித்தபடி தனது ‘தானி’யை எடுத்தவன் காலையில்ல விடிஞ்சு மாலையில்ல முடிஞ்சு போற இந்த சென்னை வாழ்க்கையில்ல எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை விதமான ஏமாற்றங்கள், எத்தனை விதமான சோகங்கள். இறைவா! எல்லாருக்கும் இல்லாமை என்ற நிலையைக் கொடு என்று தன் தானியில் வைத்திருந்த ‘சாய்பாபா’ புகைப்படத்தைப் பார்த்து வேண்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான். வளைவு வந்து விரும்பாக்கம், இளங்கோநகர் வர்றீங்களா என சப்தமிட்டபடி நகர்ந்தான்.

            பேருந்துநிலையப் பாதையில் தனது ‘தானி’யை இயக்கிய பாலு மீண்டும் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினான். அவன் செய்த உதவியை நினைத்து தானும் கர்ணன் என நினைத்துக் கொண்டான். அப்போது தான் அவனுக்கு அந்த அதிர்ச்சி ஏற்பட்டது. தான் ஏற்றிவிட்ட ஏழுமலை, செண்பகம் இருவரும் பேருந்தில் இருந்து இறங்கி நடந்து வந்தனர். என்னமோ ஏதோ என்று பதட்டப்பட்ட பாலு மீண்டும் அவர்களை நோக்கி வண்டியை திருப்பிச் சென்றான்.

            ஏன் இறங்கிட்டீங்க! என்னாச்சு? சற்றும் கலங்காத செண்பகம் ஒண்ணுமில்லப்பா. பதட்டப்படாத. அய்யாவுக்கு வயித்த வலிக்குதாம். அதான் அடுத்த வண்டிக்கு போலாமுண்ணு. எங்கப் போவீங்க. வண்டியில்ல உட்காருங்க. தம்பீ! சீக்கிரமா போப்பா என வயிற்றைப் பிடித்துக் கொண்டு துடிக்க, ராத்திரி என்ன சாப்பிட்டீங்க? மூணு நாளாச்சுப்பா. நீ கொடுத்த இட்லியத்தான் புட்டு வச்சாரு. அதுக்குள்ள வலி வந்துருச்சு. பாலு வேகமாக எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் இருக்கும் பொது கழிப்பறைக்கு அழைத்துச் சென்றான். கால்மணி நேரத்தில் ஏழுமலை முகத்தில் வலி மறைந்திருந்தது. செண்பகம் அய்யா! எந்த பேருந்துல்ல ஏறணும்ணு காட்டி விட்டுருப்பா. நாங்க பத்திரமா போயிரும். அப்புறம் உன் கைப்பேசி எண்ணைக் குடு. ஊருக்குப் போயீ கூப்புடுறோம். சாமி! உன்கிட்ட மறுபடியும் பேசறதுக்குத் தான் அவருக்கு வலிய்யக் கொடுத்திருபாரோ. நல்ல வேளை போன அவசரத்துல்ல உங்க கைபேசி எண்ண வாங்காம போயிட்டோம். நாங்க ஊருக்குப் போனதும் உன் பணத்தத் திருப்பி அனுப்பிறம்பா என நடந்தபடி பேசி வந்தவர்களுக்கு மதுரை பேருந்துக் காத்திருந்தது. இருவரும் ஏறி அமர்ந்து கொள்ள, பாலு கையசைத்து விட்டு தனக்கான வருமானத்தைத் தேடி ‘தானி’யை இயக்கினான். ஒருவேளை அவர்கள் நம்மளோட உறவாக இருக்குமோ. விட்டக்குறை தொட்டக்குறை நம்மைச் சுத்தியே வர்றாங்களோ எனப் பயணித்தான்.

            பேருந்து மதுரவாயில் பாலத்தை நெருங்க, ஏழுமலை பணத்தை நீட்டி இரண்டு திருப்பதி குடுங்க. என்னது திருப்பதிய்யா என ஊதலை பலமாக அடித்தபடி பெரிசு. இது மதுரை போறது. சீக்கிரமா இறங்கி அந்தப் பக்கம் போங்க. திருப்பதி பேருந்து வரும். மொட்டைப் போட போறீங்களா. தட்டுதடுமாறி இருவரும் இறங்க, வயசான காலத்துல்ல பெத்தவங்கள இப்படி தவிக்கவிட்டு இந்த பன்னாடைப் பசங்க என்ன தான் பண்ணுறாங்களோ என ஓட்டுநரிடம் வேதனைப்பட்ட நடத்துனர் மெதுவாக இறங்கச் சொல்லி அவர்கள் கைகளை பிடித்து கீழிறங்கச் செய்தார். பிறகு போலாம் போலாம் என கதவைச் சாத்தினார்.

            உச்சிவெயில் மண்டையைப் பிளக்க இருவரும் மேம்பாலத்தின் கீழே கிடைத்த நிழலில் வந்து சற்று இளைப்பாறவும் செய்தியுடன் கைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது. நிறம் மாறிய, எண்கள் அழிந்த தன்னோட கைப்பேசியை எடுத்து பொத்தானை அழுத்த எங்க இருக்கீங்க, எவ்வளவு கிடைச்சது. வியர்வையைத் துடைத்தப்படி இருநூறு ரூபா கிடைச்சிருக்கும்மா. ஏண்டா! காலையில்ல இருந்து இவ்வளவு தான் முடிஞ்சதா. த்தூ! மறுமுனையில் நாற்பது வயது மதிக்கத்தக்கப் பெண், டேய்! ஈனப்பயலே. நல்லாச் கெஞ்சிக் கேக்கணும்டா. முட்டாப்பயலே. உன் பொண்டாட்டிக்கிட்ட கொடு. ஏண்டி! நாரச்சிரிக்கி. இன்னுமா ஐநூறு ரூபா சம்பாதிக்க முடியல்ல. ஒத்தபைசா குறைஞ்சாலும் வீட்டுப்பக்கம் வந்துறாதீங்க. புதுசு புதுசா ஏதாவது கதைய்ய எடுத்துவிட வேண்டியது தானே. அதுவரை மௌனமாக இருந்த செண்பகம் நீ சொல்லிக் குடுத்த எல்லாக் கதையும் சொல்லிக்கிட்டு தான் இருக்கிறோம். எல்லாரும் பத்து, அஞ்சுக்கு மேல்ல கொடுக்க மாட்டேங்கிறாங்க. நீ தான் நீலிக்கண்ணீர் வடிப்பீய்யே, அழுது புரண்டாவது காசுப் புடுங்கப்பாரு. ஒரு இடத்துல்ல நிக்காதீங்க. நம்புற மாதிரி நடிடி மூலிச்சிரிக்கி. தினமும் உங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டியதிருக்கு. எளவு எடுக்கலாம்னுப் பார்த்தா சாகவும் மாட்டிக்கிறீங்க. நாங்க செத்தா உனக்கு தினமும் ஐந்நூறு கிடைக்குதாம்மா என கைப்பேசியை அணைத்தாள் செண்பகம்.

            அடுத்த நொடி மீண்டும் அழைப்புமணி கேட்க, பொத்தானை அமுக்கிய செண்பகத்திடம், என்ன எவ்வளவுச் சேர்ந்துச்சு. இருநூறு சேர்ந்திருக்கு. கைகால் நல்லா இருந்தா எவன் பிச்சைப் போடுவான். மறுமுனையில் அம்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் பேசிக் கொண்டிருந்தான். உனக்கு வலதுகால்லயும் உன் புருசனுக்கு இடது கையில்லயும் புத்தூர் மாவுக் கட்டுப் போட்டு ரத்த சாயத்தப் பூசி விட்டாதான் பாவம் பார்த்து பையில்லருந்து காசு எடுப்பானுங்க இந்த பரதேசி பசங்க. தினமும் கொடுக்கிற ஐநூறு இல்லாம வீட்டு வாசல்ல மிதிச்சுறாதீங்க. உன் புருசன்கிட்ட கொடு. கைப்பேசி கண்ணீரோடு கை மாற, ஏண்டா எருமைமாடு. திரைப்படத்துல்லக் கூட இப்படி கதைச் சொல்லிருக்க மாட்டாணுங்க. அத்தனையும் சொல்லியுமா பிச்சைப்போட மாட்டேன்றாங்க. கிடைக்கிறதுல்ல புருசனும் பொஞ்சாதியும் பொறுக்கித் திங்கிறீங்களா. என்னைக்காவது ஏமாத்துன்னது தெரிஞ்சுச்சு. இரண்டுப் பேத்துக்கும் சோத்துல்ல விஷத்த வச்சுருவேன். ஒழுங்குமயிறா நல்லா ஒப்பாரி வைக்கக் கத்துக்கோ. நல்லா அழுதுக் கேளு. அப்பதான் காசுப் போடுவானுங்க. கண்ட சாதிக்குப் பொறந்தவனுங்க, இல்லப்பா என பதில் சொல்ல ஏழுமலை முயற்சி செய்ய, பேசாதடா. போய் அம்மா, தாயீன்னு சத்தம் போட்டுக் கேளு எனக் கூறி கைப்பேசி அணைந்து விட, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

            அந்த கண்கள் நான்கும் ஒரு கோடி வேதனைகளை ஒரு நொடியில் பகிர்ந்துக் கொண்டு கூலிக்குப் பிச்சையெடுத்தா கூனிக்குறுகி போலாம். வாங்குனக் கடனுக்கு பணத்தத் திருப்பிப் கொடுக்க வதைந்து போலாம். இங்க பெத்தக் கடனுக்குப் புள்ளங்க வட்டிக்கேட்டா வயசானக் காலத்துல்ல பிச்சைதான் எடுக்க வேண்டிருக்கும். கைப்பேசியில் காரித்துப்பிய தனது பிள்ளைகளின் வார்த்தைகளை சுமந்தபடி இருவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.

            அடுத்த பேருந்து நிறுத்தத்தில் தர்மம் கேட்க, புதுக்கதையைச் சொல்ல யோசித்தபடி நடந்த ஏழுமலையைப் பார்த்த செண்பகம், ஏங்க. இப்படி பொய் சொல்லி பிச்சை எடுக்குறதுக்குப் பதிலா தூக்குப்போட்டோ, விஷம் குடிச்சோ செத்துருலாமுல்ல. நிதானமாக ஏழுமலை இந்த இரண்டு வருடம் கேக்காதவ இப்ப ஏன் கேக்குற. பெத்தப் புள்ளங்க நம்மள வீட்டைவிட்டு விரட்டறதுக்கு முடிவு பண்ணுனப்ப, நீ தானே சொன்னவ. பேரப்புள்ளங்கள பார்க்காம என்னால்ல உசிரோட இருக்க முடியாதுன்னு. நீயும் செத்துட்டா எனக்கு யாரு இருக்கா. நம்ம புள்ளைங்களுக்கு தேவை பணம் தான். நமக்கு தேவை பாசம் தான். எனக்கு மட்டும் ஊரோடு சேர்ந்து வாழ்றனோ, உறவோடு சேர்ந்து வாழ்றனோ தெரியாது. ஆனா. உன்னோட சேர்ந்து வாழ்ந்துட்டு சாகணும். என்னை நம்பி வந்த உன்னோட முகத்துல்ல எப்பவும் சந்தோஷத்த தான் நான் பார்க்கணும். அதுக்காக எத்தனை பொய்ய்ய வேணாலும் சொல்லுவேன் என தனது மனைவியின் கையைப் பிடித்தவர், பணம் சம்பாதிச்சு கொடுக்கிறவரைக்கும் நம்ம புள்ளைங்க நம்மள விரட்ட மாட்டாங்க. அதுவரைக்கும் நீ பேரப் புள்ளைங்கள கொஞ்சலாம். அய்யா! ஊருக்கு போகணும். பணம் பத்தல்ல என அடுத்த பயணியிடம் கேட்க, எந்த ஊரு போகணும்ணு சொன்னீங்க. திருவண்ணாமலைப் பக்கத்துல்ல ‘செங்கம்’ போகணும். கையில்ல நூத்திமுப்பது ரூபா இருக்கு. ஏதாவது கொடுத்தீங்கன்னா, ஊரு போய் சேருவோம் என மனதில் கதறியபடி ஏழுமலை கதைச் சொல்லிக் கொண்டிருந்தார். குழந்தை பிச்சைக்காரர்களை படைத்த இந்த சமூகம் பெற்றவர்களை மட்டும் விட்டு வைக்குமா என்ன? வாழ்க தர்மம்!

Exit mobile version