தங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீடு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழகம் உள்ளிட் மாநில அரசுகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டிற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 17,000 கோடி ரூபாயை மத்திய அரசு தற்போது விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு 1,188 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 2022-2023ம் நிதியாண்டில் இதுவரை 1,15,662 கோடி ரூபாய் அளவிற்கு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி வரிவருவாய் இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக வசூலிக்கப்படும் செஸ் வரி கடந்த அக்டோபர் வரை 72,147 கோடி ரூபாய்தான் வசூலிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ள நிதியமைச்சகம், எனினும் எஞ்சிய தொகையான 43,515 கோடி ரூபாயை மத்திய அரசு தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.