மாமியார் எடுத்த அந்த முடிவு… மருமகன் எஸ்கேப்! இனிமேலாவது திருந்துங்க…

அரிவாள் மனையால் வெட்டிய மருமகனை மாமியார் மன்னித்ததால் கீழ் நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி கடனை திருப்பி செலுத்துவது தொடர்பாக மனைவியுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கோபத்தில் அருகில் இருந்த மாமியாரை அரிவாள் மனையால் சிவசுப்பிரமணியன் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கில் சிவசுப்பிரமணியனுக்கு சேலம் மகளிர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில்  “தனது மகள் மருமகனுடன் வாழ வேண்டும். 3 குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதனால் என்னை வெட்டிய மருமகனை மன்னித்துவிட்டேன். எங்களுக்குள் சமாதானம் ஆகிவிட்டது. எனவே, அவரை (சிவசுப்பிரமணியனை) விடுதலை செய்யுங்கள்” என மாமியார் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அரியானவை சேர்ந்த ஜோஷி என்பவர் தொடர்ந்த வழக்கை (முன்னுதாரணம் காட்டி) விசாரித்த உச்சநீதிமன்றம், கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனையில் சமரசம் ஏற்பட்டால், அதை ஏற்று குற்றவியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 482-ன் கீழ் வழக்கை ரத்து செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்கின் அடிப்படையில், இந்த நீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சிவசுப்பிரமணியனுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்கிறது என தீர்ப்பளித்தார்.

Exit mobile version