விசாகப்பட்டினம் ரசாயனத் தொழிற்சாலையில் தீ விபத்து

பாரவாடாவில் உள்ள பிரபல மருந்து நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே பாரவாடாவில் ஜே.என் பார்மா சிட்டி என்ற மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் கஜுவாகாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருந்து நிறுவனத்தின் ராம்கி சால்வெண்ட் பகுதியில் முதலில் வெடி சத்தம் கேட்டது. தொடர்ந்து 11 முறை வெடிச்சத்தம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து மிகப்பெரிய அளவில் தீப்பற்றிக் கொண்டது.

கடலோர கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது தீப்பற்றியுள்ளது. இதுபற்றி காவல்துறை துணை ஆணையர் சுரேஷ் பாபு கூறுகையில், இரவு 10.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

9 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினம் தீவிபத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மாநில தொழிற்துறை அமைச்சர் எம்.கவுதம் ரெட்டி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

நிறுவனத்தில் இருந்து அனைத்து ஊழியர்களையும் வெளியேற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் தீயணைப்பு வீரர்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்தில் செயல்படும் எல்ஜி பாலிமர் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு சம்பவத்தில் 12 பேர் மரணமடைந்தனர். அதனைத்தொடர்ந்து வேறு ஒரு தொழிற்சாலையிலும் விஷவாயு கசிவு ஏற்பட்டது.

இந்த நிலையில் இது விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மூன்றாவது பெரிய விபத்து ஆகும். இதுபோன்ற சம்பவங்கள் விசாகப்பட்டினத்தில் தொழிற்சாலையில் நிறைந்திருக்கும் பகுதிகளில் அடிக்கடி நடைபெறுவதால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.தொழில்சாலையில் நேற்று இரவு பணியில் இருந்த மேலும் சிலரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

Exit mobile version