சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை பெய்து வரும் நிலையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இரண்டாவது நாளாக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இன்று (நவம்பர் 8) ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று காலை முதல் ஆய்வு செய்தார். முதல்வரின் தொகுதியான கொளத்தூர், செல்வி நகர், சீனிவாசா நகர், பெரம்பூர், பெருமாள் பேட்டை, வல்லம் பங்காரு தெரு, புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாலையில் சைதாப்பேட்டை வேளச்சேரி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர் இரவு மழை பாதிப்பு குறித்து ரிப்பன் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் 2ஆவது நாளாக இன்றும் கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார் முதல்வர் மு. க ஸ்டாலின்.
துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்யாண புரம் பின்புறம் அமைந்துள்ள பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அந்தப் பகுதியில் தண்ணீர் எவ்வாறு செல்கிறது ஏதேனும் அடைப்பு உள்ளதா, ஆகாயத்தாமரைகள் முறையாக அகற்றப்படுகிறதா என அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய முதல்வர் அடைப்பு ஏதேனும் இருந்தால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை பார்வையிட்ட முதல்வர் நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.
துறைமுகம் பகுதியைத் தொடர்ந்து ராயபுரம் பகுதிக்குச் சென்ற முதல்வர் பாரத் திரையரங்கம் ரவுண்டானா அருகே மழை நீர் தேங்கிய பகுதிகளில் ஆய்வு செய்தார். பின்னர் அங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, ஆர்கே நகர் சட்டமன்றத் தொகுதியில் பொது மக்களுக்கு உணவு மற்றும் அரிசி, பாய், பிரெட் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
இதையடுத்து பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முல்லைநகர் மேம்பாலத்திற்குச் சென்ற அவர் அங்குள்ள கால்வாயில் தண்ணீர் செல்வது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து எம்கேபி நகர் பகுதியில் உள்ள நிவாரண முகாமிற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.