வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள் – ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில்,  

‘மத்திய அரசு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கி ஆணையிட்டவுடன், இயதியாவிலேயே முதல் மாநிலமாக, தமிழ்நாட்டிலும் ஊதியக்குழுவை அமைத்து, அதன் பரிந்துரைகளை உரிய காலத்திலேயே பெற்று, ஒரே மாதத்தில் அதனை பரிசீலித்து, மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வையும் வழங்கி ஆணையிட்டது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு என்றுமே புறந்தள்ளியது இல்லை. மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியை அவ்வப்போது சந்தித்து வந்த போதிலும், மக்களுக்கான பணியை அரசு ஊழியர்கள் ஊக்கமுடன் செய்ய வேண்டுமென கருதிதான், அவ்வப்போது ஊதிய உயர்வு, அகவிலைப்படி போன்றவற்றை உடனுக்குடன் வழங்கி வருகிறது. கரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் கூட சில மாநில அரசுகள் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்தது / நிறுத்தி வைத்தது. ஆனால், தமிழ்நாடு அரசு அந்த கடுமையான நிதி நெருக்கடியிலும் எந்த அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்தையோ, அகவிலைப்படியையோ குறைக்கவில்லை. 

எந்த தாமதமும் இன்றி வழங்கியது. இயத முந்ற்சிகள் எல்லாம், அரசு ஊழியர்கள் கட்டுப்பாட்டோடு செயல்படுவது மக்களின் நலனுக்கு அவசியம் என்பதாலும், அத்தகைய அரசு ஊழியர்கள் தங்கள் பணியை ஊக்கமுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதால்தான். இந்நிலையில், அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவது போன்றவை நிர்வாக கட்டுப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பதுடன், மக்கள் பணிக்கும் பாதகம் ஏற்படுத்தும் என்பதை நன்கு உணர்ந்துதான், இத்தகைய போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அரசு கோரி வருகிறது.

போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, மறப்போம், மன்னிப்போம் என்ற உயரிய கருத்தை மனதில் கொண்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் அரசு கைவிடுகிறது. 

அரசு எடுத்துள்ள இந்த நல்ல முடிவை ஏற்று, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், மேலும் ஊக்கமுடனும், ஆக்கமுடனும் சிறப்பாக மக்கள் பணி மற்றும் கல்விப்பணியை தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version