விஜய் சேதுபதியின் மீது விழும் ஒவ்வொரு எத்துக்கும் 1001 ரூபாய் சன்மானம்: அர்ஜுன் சம்பத்தின் அறிவிப்பின் பின்னணி என்ன?

அர்ஜுன் சம்பத் தலைவராக இருக்கும் இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் கூறப்பட்டிருக்கும் கருத்து தற்போது பேசு பொருளாகியுள்ளது.

அதில், தேவர் ஐயாவை அவமதித்த விஜய் சேதுபதியை எத்துபவருக்கு சன்மானம் கொடுக்கப்படும். ஒரு எத்துக்கு ரூ. 1,001 சன்மானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி பற்றி நான் அறிவிப்பு வெளியிட்டது உண்மை தான் என அர்ஜுன் சம்பத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது, விஜய் சேதுபதியை எத்த முயன்ற மகா காந்தியுடன் பேசினேன். தேசிய விருது பெற்றதற்காக விஜய் சேதுபதியை வாழ்த்த மகா காந்தி விரும்பியிருக்கிறார். ஆனால் விஜய் சேதுபதி நக்கலாக பேசி, இதெல்லாம் நாடே இல்லை என்றிருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் பதிலை கேட்டு மகா காந்தி அதிர்ச்சி அடைந்திருக்கிறார். நீங்கள் தென் மாவட்டத்தை சேர்ந்தவர் தானே, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயாவின் பூஜையில் கலந்து கொள்ளுங்கள் என்று விஜய் சேதுபதியிடம் கூறியிருக்கிறார். அதற்கு அவரோ, இந்த உலகில் ஒரே தேவன்(கடவுள்) ஏசு தான் என்றார். இதனால் தான் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது என்கிறார் அர்ஜுன் சம்பத்.

விஜய் சேதுபதி இந்த நாட்டையும், பசும்பொன்னையும் அவமதித்துவிட்டார். நான் மகா காந்தியிடம் இந்த சம்பவம் குறித்து பேசிய பிறகே சன்மானத்தை அறிவித்தேன். மகா காந்தி சொல்வது போன்று விஜய் சேதுபதி அப்படி எதுவும் கூறவில்லை என்றால் அந்த குற்றச்சாட்டை அவர் ஏன் மறுக்கவில்லை என்று அர்ஜுன் சம்பத் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version