தேர்வு எழுதுவதற்காக 106 கி.மீ. மகனை சைக்கிளில் அழைத்துச் சென்ற தந்தைக்கு ஆனந்த் மஹிந்திரா உதவி!!

மத்திய பிரதேசத்தில், 10-ஆம் வகுப்புத் துணைத் தேர்வு எழுத வேண்டிய தனது மகனை, தந்தை ஒருவர் 106 கி.மீ. சைக்கிளிலேயே அழைத்துச்  சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுக்குறித்து அறிந்த ஆனந்த் மஹிந்திரா, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு, மத்திய பிரதேசம் தார் மாவட்டம் மனவார்தேசில் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஷோபிராம், தனது மகனை 106 கி.மீ. தொலைவில் உள்ள தேர்வு மையத்திற்கு, சைக்கிளிலேயே அழைத்துச்  சென்றார். கொரோனா காலத்தில் பொதுப் போக்குவரத்து இல்லாததால், இவர்கள் மிதிவண்டியில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவரது மகனும் 10-ஆம் வகுப்புத் துணை தேர்வை எழுதி முடித்துள்ளார்.

இதுப்பற்றி ஷோபிராம் கூறும்போது, “தனது மகன் தேர்வை எழுத முடியாதக் காரணத்தால், ஒரு வருடம் முழுவதும் வீணாகி விடக்கூடாது என்பதால் தான், 3 நாள் பிரயாணம் செய்து, எனது மகனை தேர்வு மையத்திற்கு சைக்கிளில் அழைத்துச்  சென்றேன். மேலும் என்னிடத்தில் வேறு எந்த வாகனமும் இல்லை. எனவே தான் சைக்கிளில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது” என அவர் தெரிவித்து உள்ளார்.

பலரும் இவரை பாராட்டி வந்த நிலையில், தற்போது ஆனந்த் மஹிந்திராவும், பாசமிகு ஏழை தந்தையைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், அவருக்கு உதவிக்கரமும் நீட்டியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஒரு வீரமான பெற்றோர், தனது குழந்தைகளைக் குறித்து பெரியதாக கனவு காண்பவர். இதுப்போன்ற செயல்கள், ஒரு நாட்டின் முன்னேற்றத்தைத் தூண்டக்கூடியவை. ஆஷீஷின் அடுத்தக்கட்ட கல்விக்கு எங்கள் அறக்கட்டளை உதவும்” என அவர் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version