புளீச் புளீச் கறையை பளிச்சென ஆக்க ஆண்டுக்கு 1200 கோடி செலவு – இந்திய ரயில்வே நிர்வாகம்!

புகையிலை எச்சில் கறையை நீக்க ஆண்டுக்கு 1200 கோடி செலவு செய்து வருவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய ரயில் நிலையங்களில் மூலை முடுக்குகள் என பல இடங்களில் புகையிலை மற்றும் வெற்றிலை எச்சில் கறையை நாம் வழக்கமாகவே காண முடியும். இது பல காலங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இது தவறு என தெரிந்தே சிலர் இதை தொடர்ச்சியாக செய்து கொண்டுதான் இருக்கின்றனர். குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் எச்சிலால் நோய்த் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

இந்நிலையில் இந்த எச்சில் கறையை அகற்றுவதற்காக ஆண்டிற்கு 1,200 கோடி ரூபாயை இந்திய ரயில்வே துறை செலவழிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது மட்டுமல்லாமல் பாக்கு மற்றும் எச்சில் கறையை சுத்தமாக்க பல கோடி லிட்டர் தண்ணீரும் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக கையில் பயன்படுத்தக்கூடிய பிரத்தியேகமான காகித பை ரயில் நிலையங்களில் விற்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது எளிதில் மக்கி விடும் பொருள் என்பதால், வெற்றிலை அல்லது புகையிலை எச்சில் துப்பும் பழக்கம் இருப்பவர்கள் இதை வாங்கி பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடலாம். இதனால் சுற்றுச்சூழலுக்கும் சரி, ரயில்வே நிலையங்களில் உள்ள சுவருக்கும் சரி எந்த பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version