சுற்றுச்சூழலை பாதிக்காத 400 ஆண்டுகள் பழமையான பட்டாசு முறை… குஜராத்தில் விற்பனைக்கு வந்தது!!

சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத 400 ஆண்டுகள் பழமையான பட்டாசு முறை; குஜராத் மாநிலத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

டெல்லி, நாளை மறுதினம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு தீபாவளி பண்டிகையும் சிறியவர் முதல் பெரியவர் வரை நீண்ட எதிர்பார்ப்பே!! அதற்கு காரணம் புத்தாடைகள், இனிப்புவகைகள், அதைவிட அதிக இன்பம் தரக்கூடிய பட்டாசுகள் என தீபாவளி மகிழ்ச்சி தரக்கூடிய பண்டிகையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் அமையும். ஆனால், கடந்த சில வருடங்களாகவே இந்தியாவைப் பொருத்தவரை பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த ஆண்டு டெல்லி, ஓடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு முழுமையான தடையும் பிற மாநிலங்களில் பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும், அதிலும் குறிப்பிட்ட சில மணி நேரங்களில் மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தீபாவளி பண்டிகைக்கு புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய விதமாக குஜராத் மாநிலத்தில் 400 ஆண்டுகளுக்கு பழமையான களிமண்ணால் செய்யப்படக்கூடிய பட்டாசுகளை மீண்டும் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இவ்வகை பட்டாசுகள் சூடு களிமண்ணை கொண்டு குயவர்களால் செய்யப்பட்டு அதற்கு பிறகு காகிதம்,மூங்கில் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இதனால், சுற்றுப்புற சூழலுக்கு எந்த தீங்கும் இருக்காது. மேலும் குறைந்த அளவிலான சத்தம், பாதுகாப்பு, வெடித்த பின்பு களிமண் கரைந்து விடக் கூடிய சூழ்நிலை இப்படி இயற்கைக்கு உகந்த முறையில் இந்த பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பட்டாசு தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பண்டைய காலங்களில் இந்த பட்டாசு முறை அரச குடும்பத்தினரின் வெற்றி விழாவுக்கும், தீபாவளி போன்ற நன்னாளில் மக்கள் பெரிய அளவில் பயன்படுத்தியதாகவும் ஒரு கட்டத்திற்குப் பிறகு பல்வேறு பட்டாசுகளின் புது ராகங்கள் நாட்டில் புழக்கத்தில் வந்ததால் பண்டைய கால பட்டாசு முறைகள் ஒழிந்துவிட்டது.

குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் சீன பட்டாசுகளின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரித்தது. இதன் காரணமாக பண்டையகால களிமன் பட்டாசுகளின் உற்பத்தி என்பது முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சில தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாக பண்டையகால பட்டாசுகளை மீட்டெடுக்கும் விதத்தில் குஜராத் மாநிலத்தின்
வதோதரா மாவட்டத்தின் ஃபதேபூரில் உள்ள கும்ஹர்வாடாவில் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த பட்டாசுகளை தயாரித்த ராமன் பிரஜாபதி என்பவர், பிரமுக் பரிவார் அறக்கட்டளை எங்களுடைய பண்டையகால பட்டாசுகளை தயாரிக்கும்படி எங்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அதன்படி நாங்கள் இந்த தீபாவளிக்கு சில பட்டாசுகளை தயாரித்து கொடுத்துள்ளேம் எனவும் இதன் மூலம் சில லட்சங்களை சம்பாதித்து உள்ளேன் என்கிறார்.

மக்கள் கொண்டாடக்கூடிய ஒவ்வொரு பண்டிகையும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ! அதே அளவிற்கு பண்டிகையின்போது கடைபிடிக்கப்படும் சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் அதிக முக்கியத்துவம் பெறும்! ஆனால், தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளில் உள்ள நச்சு துகள்களால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கிறார்கள்.

இதை விட அதிகமாக சுற்றுச்சூழல் மிகப்பெரிய அளவில் மாசடைகிறது. உலக அளவில் காலநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள நிலையில் காற்று மாசு என்பது அவற்றுக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் அமைந்துவிடும். ஆகவே, இது போன்ற பண்டிகைகளின் போது பண்டையகால முறைகளை கடைபிடித்தால் பண்டிகைகளும் சுற்றுப்புற சூழலும் பாதுகாப்பாக இருக்கும் என்கின்றனர் பிரமுக் பரிவார் அறக்கட்டளை நிர்வாகிகள்.

Exit mobile version