அரசு அருங்காட்சியகத்தில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரி உள்பட மூவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை எழும்பூரில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இதில், கணக்காளராக ஜஹாருல்லா, மேற்பார்வையாளர்களாக ஜவஹர், ஜெயராஜ் மற்றும் உதவி இயக்குனராக தேவதாஸ் ஆகியோர் பணிபுரிந்தனர். இவர்கள் பணியில் இருந்த காலத்தில், அருங்காட்சியகப் பணத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்து, விசாரித்தது. அதில், கடந்த 2003ம் ஆண்டு நவ.11 முதல் 2007ம் ஆண்டு ஜூன்.30 வரை, அருங்காட்சியக நுழைவு கட்டணம், காட்சி அரங்கு வைப்பு தொகை, புத்தகங்கள் விற்பனை என, பல்வேறு வகைகளில் மொத்தம் 5 லட்சத்து 44 ஆயிரத்து 85 ரூபாய் வரை, பணம் கையாடல் செய்தது தெரியவந்தது.
பின், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், பல்வேறு பிரிவுகளில், நான்கு அரசு ஊழியர்களுக்கு எதிராக, தனித்தனியாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின், அனைவரும் பணி ஓய்வு பெற்றனர். இவர்கள் மீதான வழக்குகள் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள லஞ்ச வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ப்ரியா முன் நடந்தது. லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஜஹாருல்லா, ஜவஹர், ஜெயராஜ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஜஹாருல்லா, ஜவஹர், ஜெயராஜ் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதமாக மொத்தம் 15.5 லட்சம் ரூபாய் விதித்து தீர்ப்பளித்தார்.
இதேபோல, ஜஹாருல்லா மீதான மற்ற மூன்று வழக்குகளில் தலா 5 ஆண்டும், ஜவஹர் மீதான மற்ற இரு வழக்குகளில் தலா 5 ஆண்டும், ஜெயராஜ் மீதான மற்றொரு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தேவதாஸ், வழக்கு விசாரணையின் போது இறந்ததால், அவர் மீதான வழக்கை கைவிடுவதாக, நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.