அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக்கோரி தமிழக ஆளுநரை அமைச்சர்கள் சந்தித்து வலியுறுத்தினர்.
மருத்துவ படிப்பு
மருத்துவ படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில் கடுமையான சிரமம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் விதமாக, தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு தீர்மானித்தது.
இதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்றி ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில திருத்தங்கள் கோரி ஆளுநர் அதை திருப்பி அனுப்பினார்.
7.5 சதவீத ஒதுக்கீடு
பின்னர் அந்தத் திருத்தங்களுடன் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விதமாக ஒரு சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த இட ஒதுக்கீட்டு முறையினை நீட் தகுதியின் அடிப்படையில் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் விரிவாக்கம் செய்யவும், மேலும், மேற்படி இட ஒதுக்கீட்டு முறையினை அனைத்து மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி உள்ளடக்கிய அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும், சுயநிதிக் கல்லூரிகளுக்கும் அரசால் ஒதுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு இடங்களுக்கும் இச்சட்ட முன்வடிவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
ஆளுநர் தாமதம்
தமிழக அரசின் உள்ஒதுக்கீடு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நடப்பாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுமார் 300 இடங்கள் கிடைக்கும்.
இந்த சூழலில், கடந்த 16-ந் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனால், தமிழக ஆளுநர் இதுவரை தமிழக அரசின் சட்டமசோதாவிற்கு ஒப்புதல் வழங்கவில்லை. இதையடுத்து, ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அமைச்சர்கள் சந்திப்பு
ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுப்பதாலும், இதனால் கலந்தாய்வு தடைப்படுவதாலும் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க தமிழக அரசின் சார்பில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். அவர்கள் ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் இந்த சட்டமசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தினர்.
