போதைப் பொருள் வைத்திருந்த 7  நபர்கள் கைது

நுங்கம்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த 7  நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை பெருநகர காவல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (ANIU) தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ANIU தனிப்படையினர் மற்றும் F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, நேற்று (17.07.2025) காலை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், வாட்டர் டேங்க் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 நபர்களை விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்களை சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பாக,  F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, போதைப்பொருள் வைத்திருந்த 

1.சூர்யபாரதி, வ/28, த/பெ.கண்ணன், திருநெல்வேலி மாவட்டம்

2.கண்ணன், வ/35, சாலிகிராமம், சென்னை 

3.ராம்குமார், வ/40, செம்மஞ்சேரி, சென்னை 

ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். விசாரணையில் எதிரிகள் அளித்த தகவலின்பேரில் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 

4.பிரதீப், வ/36,  விருகம்பாக்கம், சென்னை 

5.சரவணகுமார், வ/27, கோடம்பாக்கம், சென்னை 

6.கௌதம்ராஜ், வ/29, புழுதிவாக்கம், சென்னை 

7.ரவீந்திரன், வ/28, சென்னை ஆகியோரையும் கைது செய்தனர். 

அவர்களிடமிருந்து  22 கிராம் மெத்தம்பெட்டமைன், 4 கிராம் OG கஞ்சா, பணம் ரூ.5,300/-, 9 செல்போன்கள் மற்றும் 2 லேப்டாப்  பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரிகள் சூர்யபாரதி, கண்ணன், கௌதம் ராஜ் மற்றும் ரவீந்திரன் ஆகிய 4 நபர்களும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், ராம்குமார், பிரதீப் ஆகிய இருவரும் தொழில் செய்து வருவதும் மற்றும் சரவணகுமார் ஓட்டுநர் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 7 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (17.07.2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Exit mobile version