குஜராத்திலுள்ள கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து : 8 பேர் பலி

குஜராத், ஆமதாபாத்தில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் நவரங்க்பூர் பகுதியில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைக்காக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், இன்று அதிகாலையில், மருத்துவமனையின் நான்காவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில், கொரோனா சிகிச்சையில் இருந்த 8 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீவிர முயற்சிக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.மேலும், விபத்தின் காரணமாக அம்மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 35 க்கும் மேற்பட்ட நோயாளிகள், வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், ஆமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தம் அளிக்கிறது. துயரத்தில் உள்ளக் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். முதல்வர் விஜயரூபானி மற்றும் மேயர் பிஜால் படேலிடம் மீட்பு பணிகள் குறித்து பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version