அமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன், மீண்டும் கடலுக்கு உள்ளேயே திருப்பி விடப்பட்டதாக அமெரிக்க மீன்வளம் மற்றும் வனவிலங்குகள் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மீன்வளம் மற்றும் வனவிலங்கு சேவை நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், டெட்ராய்ட் ஆற்றில், 100 வயதுக்கு மேற்பட்ட 240 பவுண்டுகள் ( 108.8 கிலோகிராம்) கொண்ட ஸ்டர்ஜன் மீன் பிடிபட்டு உள்ளது.
ரியல் லைவ் ரிவர் மான்ஸ்டர் என்று அழைக்கப்படும் இந்த மீன் 7 அடி நீளம் கொண்டது. இந்த மீனின் போட்டோ, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை ஷேர் செய்யப்பட்டு உள்ளது.
அதன் சுற்றளவு மற்றும் அளவின் அடிப்படையில், இது பெண் மீன் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது 100 ஆண்டுகளுக்கும் மேலானது என்றும் அறியப்பட்டு உள்ளது. அதன் நீளம், அகலம் மற்றும் எடை கணக்கிடப்பட்ட பின்னர், அது மீண்டும் கடலுக்குள் விடப்பட்டு உள்ளதாக அமெரிக்க மீன்வளம் மற்றும் வனவிலங்கு சேவை நிறுவன பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த குறிப்பிட்ட மீன் இனங்களில் ஆண் மீன்கள் அதிகபட்சமாக 55 வயது வரையும், பெண் மீன்கள் 70 முதல் 100 ஆண்டுகள் வரையும் வாழக் கூடும் என்று மிக்சிகன் இயற்கை வளங்கள் அமைப்பு தெரிவித்து உள்ளது.