எகிப்து நாட்டை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட 18 ராஜாக்கள் மற்றும் 4 ராணிக்களின் பதப்படுத்தப்பட்ட உடல்களான ‘மம்மிகள்’ கெய்ரோ வீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
பிரமிடுகளின் நாடு எகிப்து. பழங்கால எகிப்தின் சக்கரவர்த்திகளான பாரோக்களின் சவங்களையும், மற்ற ராஜாக்களின் சவங்களையும் பதப்படுத்தி, பிரமிடுகளில் பாதுகாத்து வைத்தனர். அவை தான் ‘மம்மிகள்’. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரமிடுகளில் அடக்கம் செய்யப்பட்ட மம்மிகள் இப்போதும் கெட்டுப்போகாமல் இருக்கின்றன. ‘ஆஸ்பல்ட்’. ‘ப்ளாஸம்’ போன்ற பொருட்களை பயன்படுத்தி, அவர்கள் உடல்களை பதப்படுத்தினர். எகிப்தின் காவல் தெய்வமான ஒஸீரஸின் முகமூடியை சவத்தின் முகத்தில் அணிவிக்கப்படும். இவ்வாறு பக்குவப்படுத்தப்பட்ட மம்மிக்களை மரப்பெட்டியில் வைத்து, பிரமிடுக்குள் வைத்து பத்திரமாக அடக்கம் செய்வார்கள்.
இவ்வாறு அடக்கம் செய்யப்பட்ட பண்டைய எகிப்தின் ராஜாக்களான இரண்டாவது செகெனென்ரே தாவோ , இரண்டாம் ராம்சே , மூன்றாம் ராம்சே, நான்காம் ராம்சே, இரண்டாம் அமென்ஹோதெப், உள்ளிட்ட 18 ராஜாக்கள் மற்றும் 4 ராணிகள் என மொத்தம் 22 பேரின் மம்மிகள், கெய்ரோவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
கெய்ரோவில் உள்ள அல்புஸ்டாட் நகரில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு, தனித்தனி வாகனங்களில் அவை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. ஊரவல பாதைகள் முழுவதும், எகிப்தின் கலாசார உடை அணிந்த ஆண்களும், பெண்களும், மம்மிக்களை வரவேற்றனர். இது அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பும் செய்யப்பட்டது. ராஜாக்களின் உடல்களுக்கே இவ்வளவு மரியாதை கிடைக்கிறது என்றால், ராஜாக்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தில் எவ்வளவு ராஜ உபசரிப்பை பெற்றிருப்பார்கள் என பார்த்தவர்கள் தங்கள் கண்கள் விரிய ஆச்சரியம் அடைந்தனர்.