மாவட்டங்களை கடந்து செல்ல இ-பாஸ் முறையைக் கைவிட வேண்டும் – முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ-பாஸ் முறையைக் கைவிட வேண்டும் என்று முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

ஊரடங்கு அமலில் உள்ள இந்தக் காலகட்டத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு ஆகிய காரணங்களுக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் வழங்கப்படுகிறது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், பலரும் ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல், வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். சொந்த ஊர்களில் உள்ள வயதான, சிகிச்சை பெறும் பெற்றோரை, அவ்வப்போது சென்று கவனிக்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

இறுதிச் சடங்குகளுக்குச் செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்றால், இறப்புச் சான்று கட்டாயம் என்று உள்ளது. இதனால் பலர் துக்க நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஆவணம் இல்லாவிட்டாலும் இ-பாஸ் வழங்கப்படுகிறது.

எனவே, மாற்று வழிகளைக் கையாள வேண்டுமெனவும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கணக்கில் கொண்டு இ-பாஸ் நடைமுறையை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். பொதுமக்களிடம் தனிமனித இடைவெளியைப் பின்பற்றவும், அனைவரும் முகக் கவசம் அணியவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கைத் தளர்த்த வேண்டும்.சாதாரண ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கணக்கில் கொண்டு நிபந்தனைகளுக்குட்பட்டு படிப்படியாக பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Exit mobile version