அகஸ்தியா திரையரங்கம் மூடப்படுகிறது: ரசிகர்கள் வருத்தம்

வடசென்னை பகுதியின் அடையாளமாய் விளங்கிய திரையரங்கம் 53 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை முதல் இயங்காது

கொரோனா காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக, தியேட்டர் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடந்து முடிந்த படங்களை தயாரிப்பாளர்கள், ஒடிடி தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தியேட்டர்களை தொடங்க அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் திரையரங்குகள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வட சென்னை, தண்டார்பேட்டையில் உள்ள அகஸ்தியா திரையரங்கம், நாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது. 1004 இருக்கைகள் கொண்ட சென்னையில் முதல் பெரிய தியேட்டரான இது, 1967 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதில் முதல் படமாக, கே.பாலசந்தர் இயக்கத்தில் முத்துராமன், நாகேஷ், சவுகார் ஜானகி நடித்த பாமா விஜயம் திரையிடப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர்.நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன், காவல்காரன், சிவாஜி நடித்த சிவந்த மண், சொர்க்கம் உள்பட பல படங்கள் 100 நாட்களுக்கு மேல் இங்கு ஓடியுள்ளனர். ரஜினியின் பைரவி, ப்ரியா, உள்ளிட்ட படங்களும் கமலின் அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் உள்பட பல படங்கள் வெள்ளிவிழா கண்டன. தமிழின் முன்னணி நடிகர்கள் பலரின் சினிமா படப்பிடிப்புகளும் இங்கு நடந்துள்ளது.

கடந்த 53 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த தியேட்டர், கடந்த 3 ஆண்டுகளாக வருமானம் இல்லாததால் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தது. இதையடுத்து இந்த தியேட்டர் நிர்வாகம் நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளது. வடசென்னையில் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய அகஸ்தியா தியேட்டர் மூடப்படுவது ரசிகர்களிடையை வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கு வணிக வளாகம் கட்டப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

Exit mobile version