தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…

அக்டோபர் முதல் வாரத்திற்குள் இறுதிப்பருவத் தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவிட வேண்டும்
தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை, செப். 27-
அக்டோபர் முதல் வாரத்திற்குள் இறுதிப்பருவத் தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வெளிநாட்டுக் கல்வி
உலக புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் மழைக்கால பருவப் படிப்புகளில் சேர தமிழகத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
அக்டோபர் பிற்பகுதியில் வகுப்புகள் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு ஒரு வாரம் முன்னதாக அவர்கள் இறுதிப் பருவத் தேர்வுகளில் வெற்றி பெற்று, தற்காலிகப் பட்டச் சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும்.
இறுதிப்பருவத் தேர்வு
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இறுதிப் பருவத் தேர்வுகள் தொடங்கிவிட்டன. அக்டோபர் மாதம் 5-ம் தேதிக்குள் இறுதிப் பருவத் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்டு, தற்காலிகப் பட்டச் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கினால் மட்டும்தான் அவர்களின் வெளிநாட்டு உயர்கல்வி கனவு சாத்தியம்.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு பெற்ற மாணவர்கள் நடப்புப் பருவத்தில் சேரத் தவறினால் ஓராண்டு படிப்பை இழக்க நேரிடும். இடம் கிடைத்த மாணவர்கள் குறித்த காலத்திற்குள் சேரவில்லை என்றால் அவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திரும்பப் பெற முடியாமல் போய்விடும்.
முடிவுகள்
எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அக்டோபர் முதல் வாரத்திற்குள் இறுதிப் பருவத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்; தற்காலிகப் பட்டச் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version