மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் அக்டோபர் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக, பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஊரடங்குக் காலத்திலும் பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வகுப்பைக் காரணம் காட்டி, மாணவர்களிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
எனவே, தவணை முறையில் கல்விக்கட்டணத்தை வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் முழு கல்விக்கட்டணத்தையும் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்துவதாகவும், குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணம் செலுத்தாதவர்களின் பெயர் கல்லூரியில் இருந்து நீக்கப்படும் என எச்சரிப்பதாகவும், மாணவர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரி மாணவர்களுக்கும், கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் அக்டோபர் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.