முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை… மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்கும் அப்பல்லோ

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய மனு மீதான விசாரணையில் அப்பல்லோ நிர்வாகம் சார்பில் மீண்டும் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

டெல்லி, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து தங்கள் தரப்புக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதேபோல ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய தமிழக அரசின் இடைக்கால மனு தனியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஜூலை 26ஆம் தேதி இந்த இரண்டு மனுக்களும் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். அதன் பிறகு இரண்டு முறை இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பல்வேறு காரணங்களால் விசாரணை நடைபெறாமல் வெறுமென ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அப்பல்லோ நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் அப்போது ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆணையத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணையால் இறுதிகட்ட பணிகள் முடிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் அப்போலோ நிர்வாகம் இந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்றே முயற்சிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இருப்பினும் இன்றைய தினம் இந்த வழக்கை நீதிபதிகள் கட்டாயம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உறுதியளித்து ஒத்தி வைத்து இருந்தனர்.இதற்கிடையில் அப்பல்லோ நிர்வாகத்தின் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், வழக்கின் விசாரணையை அக்டோபர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கடிதம் வழங்கினார்.

இதனை ஏற்றுக்கொண்டு வழக்கின் விசாரணை அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version