SeithiAlai

அவசரப்பட்டு லைப்-அ தொலைச்சிட்டியேப்பா… அறிமுகப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே திமிர் பேச்சு பேசிய அஸ்வின்

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இந்தப் படத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் அவந்திகா, தேஜு அஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கிருஷ்ணவேணி தியேட்டரில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினர்.

இந்த நிகழ்வில் படத்தின் நாயகனான அஸ்வின் குமார் பேசினார்.

அஸ்வின் குமார் பேசும்போது, ”ரசிகர்களின் அன்பால்தான் இங்கு நிற்கிறேன். நீங்கள் தரும் அன்புதான் என்னை வளர்த்துள்ளது. நான் கனவு கண்டிருக்கிறேன். ஆனால், இந்த இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை.

‘என்ன சொல்ல போகிறாய்’ படத்திற்கு முன், பின் என என் வாழ்க்கையைப் பிரிக்கலாம். விஜய் தொலைக்காட்சி என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பம் தந்திருக்கிறது. ஒரு காமெடி ஷோ இவ்வளவு பெரிய பிரபலம் தரும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. உங்கள் அன்புக்கு ஏற்ற சரியான படம் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இப்போது இந்தப் படத்தின் மூலம் உங்களிடம் வந்திருக்கிறேன்.

என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. நான் கதை கேட்கும்போது அந்தக் கதை எனக்குப் பிடிக்கவில்லை என்றால் சட்டென்று தூங்கிவிடுவேன். இதுவரை 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை இந்த ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் கதை மட்டும்தான் என்றார்.

தொடர்ந்து இயக்குநர் ஹரிஹரன் அவ்வளவு சிறப்பாகச் செய்திருக்கிறார். என்ன சொல்ல போகிறாய்’ படத்தை நீங்கள் பார்த்துக் கொண்டாடுவதைக் காண ஆவலாக இருக்கிறேன். இந்தப் படம் பல பேரின் கனவு. கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்புகிறேன்…” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் பொதுவாகவே சினிமா ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் எரிச்சலடைந்தனர்.

“ஒரு படம் நடிச்சு அதுவும் வெளியாவதற்குள்ளாகவே நல்ல கதை, மோசமான கதை என்று பிரித்துப் பார்க்கும் அளவுக்கு இந்த அஸ்வின் புத்திசாலியா.. அறிவாளியா.. “கதை கேட்கும்போது தூங்கிவிடுவேன்” என்று சொல்வதெல்லாம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களை அவமானப்படுத்துவது போல் இல்லையா.. இது பற்றிக் கிஞ்சித்தும் ஒரு குற்றவுணர்ச்சிகூட இல்லாமல் சின்னப் பையனைப் போல பேசிவிட்டுப் போயிருக்கிறாரே..” என்று கடுமையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வலுத்து வருகின்றன.

Exit mobile version