ஸ்பெயினில் நடந்த தடகளப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் உகாண்டா வீரர் மற்றும் இதே போன்று மகளிர்ப் பிரிவு 5 ஆயிரம் மீட்டர் தடகளப் போட்டியில் எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஆகியோர் உலகச் சாதனை படைத்துள்ளனர்.
தடகளப் போட்டியின் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த தடகள வீரர் ஜோசுவா செப்டெகி (வயது 24) கலந்து கொண்டு 26 நிமிடங்கள் 11.02 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த தடகள வீரர் கெனெனிசா பெகெலே 26 நிமிடங்கள் 17.53 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்திருந்தது உலக சாதனையாக இருந்தது. இதனை ஜோசுவா முறியடித்துள்ளார்.
அவர் கடந்த ஆண்டு தோஹாவில் நடந்த உலக சாம்பியன்சிப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார். கடந்த ஆகஸ்டில் மொனாக்கோ நகரில் நடந்த டையமண்ட் லீக் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் பிரிவில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
இதே போன்று மகளிர்ப் பிரிவு 5 ஆயிரம் மீட்டர் தடகளப் போட்டியில் எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை லெடிசென்பெட் கிடி (வயது 22) பந்தயத் தொலைவை 14 நிமிடங்கள் 6.62 வினாடிகளில் கடந்து உலகச் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு, அவரது நாட்டைச் சேர்ந்த மற்றொரு தடகள வீராங்கனையான திருனேஷ் திபாபா கடந்த 2008ம் ஆண்டு ஓஸ்லோவில் நடந்த போட்டியில் 14 நிமிடங்கள் 11.15 வினாடிகளில் பந்தய இலக்கை அடைந்திருந்தது உலக சாதனையாக இருந்தது. இதனை கிடி முறியடித்து உள்ளார்.