20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரை இறுதியில் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசம் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கவீரர் பாபர் ஆசம் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். எனினும்,தொடர்ந்து சிறப்பாக விளையாடிய முகமது ரிஸ்வான் 52 பந்துகளை சந்தித்து 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய பகர் சமன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்தார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டேவிட் வார்னருடன் அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 51 ரன்கள் சேர்த்த நிலையில் மார்ஷ் 28 ரன்னில் அவுட்டானார். ஸ்மித் 5 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 7 ரன்னுடனும் பெவிலியன் திரும்பினர். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய வார்னர் 49 ரன்னில் வெளியேறினார். ஆஸ்திரேலியா 96 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து இறங்கிய ஸ்டோய்னிஸ் பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடினார். வேட் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 50 ரன்களை விரைவாக கடந்தது. இறுதியில் ஆஸ்திரேலியா அணி 19 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்து அதிரடி வெற்றி பெற்றது.
ஸ்டோய்னிஸ் 40 ரன்னும், வேட் 17பந்தில் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷதப் கான் 4 விக்கெட்டுகளும், ஷகின் அப்ரிதி 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.