அரியலூர் அருகே, டாக்டருக்கு இந்தி தெரியாததால் கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர் திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் வட மாநிலத்தை சேர்ந்த விஷால் நாராயண் காம்ளே என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார்.
அந்த வங்கியில் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த மருத்துவரான பாலசுப்பிரமணியன் (வயது 72) கணக்கு வைத்து வரவு-செலவு செய்து வருகிறார்.
இந்நிலையில் பாலசுப்பிரமணியன் தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு, கடன் பெறுவதற்காக அந்த வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கிளை மேலாளர் விஷால் நாராயண் காம்ளேவை சந்தித்து, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காட்டி கடன் வழங்குமாறு கேட்டுள்ளார்.
அப்போது கிளை மேலாளர் இந்தியில் பேசியதோடு, பாலசுப்பிரமணியனுக்கு இந்தி தெரியுமா? என்று ஆங்கிலத்தில் கேட்டதாக தெரிகிறது. அதற்கு பாலசுப்பிரமணியன் தனக்கு இந்தி தெரியாது என கூறி உள்ளார். உடனே வங்கி மேலாளர் தனக்கு தமிழ் தெரியாது என்று கூறி கடன் வழங்க மறுத்ததாகவும் கூறப்படுகின்றது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான டாக்டர் பாலசுப்பிரமணியன், மான நஷ்டஈடு கேட்டு வங்கி கிளை மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயண் காம்ளேவை திருச்சிக்கு இடமாற்றம் செய்து திருச்சி மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே ஜெயங்கொண்டத்தில் டாக்டர் பாலசுப்பிரமணியன் நடத்தி வரும் கிளினிக்கிற்கு, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு , அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தன்னை ஒரு முதியவர் என்றும் பாராமல், அமரவும் சொல்லாமல் அலட்சியமாக வங்கி கிளை மேலாளர் செயல்பட்டார் என்றும் அந்த பகுதியில் படிக்காத விவசாயிகள் உள்ளிட்ட பலர் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். என்னை போன்று அவர்களை கிளை மேலாளர் அலட்சியப்படுத்தக்கூடாது என்பதே எனது நோக்கம் எனக்கூறினார்.
அவரை பணியிட மாற்றம் செய்ததில் எனக்கு உடன்பாடு கிடையாது, என்று தெரிவித்துள்ளார்.