டீசல் விலை உயர்வால் திடீரென உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம்: பண்டிகை சமயத்தில் மக்கள் தவிப்பு

மகாராஷ்டிராவில் ஏற்கெனவே விண்ணை முட்டும் பெட்ரோல் டீசல் விலைகளினால் ஏற்படும் அத்தியாவசிய விலை உயர்வினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பஸ் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது சாமானிய மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநில போக்குவரத்து கழகத்திற்கு தினந்தோறும் டீசலுக்கு மட்டும் ரூ.8.8 கோடி செலவாகிறது. இது மொத்த செலவான ரூ.21 கோடியில் 38 சதவீதம் ஆகும். அதே நேரத்தில் அக்டோபரில் தினசரி சராசரி வருவாய் ரூ.12.9 கோடி தான். தற்போது தினந்தோறும் 27 லட்சம் பேர் அரசு பேருந்துகளை பயன்படுத்தி பயணம் செய்கின்றனர். இது கொரோனா முன்பு இருந்த பயணிகள் எண்ணிக்கையில் 41 சதவீதம் தான் என்கிறார் போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர்.

16,000 பஸ்சில் தற்போது 12 ஆயிரத்து 500 பஸ்கள் தான் இயக்கப்படுகின்றன. கொரோனா காலத்தில் பயணிகள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துவிட்டது. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தீபாவளி சமயத்தில் மும்பை- புனே மற்றும் மும்பையில் இருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படும் பஸ்சில் கூட்டம் அலைமோதும். இந்த நேரத்தில் மாநிலத்தில் ஏ.சி. உள்பட அனைத்து வகையான அரசு பஸ்களில் கட்டண உயர்வு அமலுக்கு வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில சாலை போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 16 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 95 ஆயிரம் பேர் போக்குவரத்து கழகத்தில் வேலை செய்கின்றனர்.

இந்த பஸ்கள் மும்பையில் இருந்து புனே உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு நகங்களுக்கு இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் எம்.எஸ்.ஆர்.டி.சி.யின் அனைத்து வகை பஸ்களின் கட்டணத்தையும் அரசு நேற்று திடீரென உயர்த்தியது.

இதுகுறித்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் சேகர் சன்னே கூறும் போது, “கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து கழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே கட்டணம் உயர்த்தப்படுவதால் ரூ.50 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். டீசல் விலை உயர்வு காரணமாக டிக்கெட் கட்டணத்தை 17.17 சதவீதம் உயர்த்த முடிவு செய்து உள்ளோம். கட்டண உயர்வு 26 முதல் அமலுக்கு வந்தது. 3 ஆண்டுகளுக்கு பிறகு மாநில போக்குவரத்து கழகம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. கட்டண உயர்வுக்கு மாநில போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் வழங்கி உள்ளது.” என்றார். இந்த போக்குவர்த்துக் கட்டண உயர்வால் மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.

Exit mobile version