தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்றின் பாதிப்பால் கடந்த 6 மாத காலமாக பொதுப்போக்குவரத்து சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அரசு சில தளர்வுகளை மக்களுக்காக அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் பொதுப்போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. தற்போது 450 பேருந்துகள் மட்டுமே அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி சனிக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. வருடந்தோறும் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவது வழக்கம். அது போல் இந்த வருடமும் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளிக்காக, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, சொகுசு மற்றும் ஏ.சி. பேருந்துகள் சேர்த்து, 700 சிறப்பு பேருந்துகளை கூடுதலாக இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நெல்லை, திருச்சி, நாகர்கோவில் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் தீபாவளிக்கு ஒருமாதம் இருக்கும் நிலையில், தற்போதே முன்பதிவு தொடங்க ஆரம்பித்துவிட்டது. மேலும், தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதள முகவரியை அணுக வேண்டும் என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.