ஊரடங்கில் ஊர் சுற்றிய நடிகர்கள் கார் பறிமுதல்

தடையை மீறியும், இ பாஸ் இன்றியும் நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் கொடைக்கானல் சென்றுவந்த விவகாரத்தில் அவர்களுக்கு உதவிய உள்ளூர் பிரமுகரின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறியும், இ பாஸ் இன்றியும் கொடைக்கானல் சென்றுவந்த நடிகர்கள் விமல், சூரி மீது கொடைக்கானல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

முன்னதாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரிக்கு சென்று மீன்பிடித்ததாக வனத்துறையினர் இருவருக்கும் தலா ரூ.2000 அபராதம் விதித்தனர்.

முதற்கட்டமாக போலீஸாரின் விசாரணையில் கொடைக்கானலுக்கு வந்த நடிகர்களுக்கு உதவியவர்கள் கண்டறியப்பட்டனர். இதில் கொடைக்கானலைச் சேர்ந்த காதர்பாட்சா என்பவர் நடிகர்களுக்கு கார்களை கொடுத்தும், தங்க விடுதி ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து நடிகர்கள் பயன்படுத்திய இரண்டு வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

நடிகர்களுக்கு உதவியாக கொடைக்கானலைச் சேர்ந்த காதர்பாட்சா என்பவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். நடிகர்கள் விமல், சூரியிடமும் போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர்.

Exit mobile version