போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கார் லோன் வாங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார் பந்தய வீரர் பால விஜய் உட்பட 3 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கார் லோன் வாங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார் பந்தய வீரர் பால விஜய் உட்பட 3 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். வேளச்சேரி பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் தில்லை கோவிந்தன் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தங்களது வங்கியில் ரூ.3.86 கோடிக்கு கார் லோன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரை சேர்ந்த முகமது முசாமில், அதே பகுதியை சேர்ந்த அய்யாத்துரை (32), கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தை சேர்ந்த பால விஜய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார்.
அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.50 கோடி மதிப்புள்ள சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள பால விஜய் பிரபல கார் பந்தய வீரர் என்று விசாரணையில் தெரியவந்தது. இவர், கடந்த 2010 மற்றும் 2014ம் ஆண்டு இந்திய அளவில் நடந்த கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் ‘மோட்டோ ரேவ்’ என்ற கார் பந்தயங்களுக்கான லீக் அணியை உருவாக்கி அதன் உரிமையாளராகவும் உள்ளார்.
கார் பந்தய வீரர் என்பதால் வங்கிகளும் லோனை வாரி வழங்கி உள்ளது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பால விஜய் தனது நண்பர்களான முகமது முசாமில், அய்யாத்துரை ஆகியோருடன் சேர்ந்து பல வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாயை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், கார் பந்தய வீரர் பால விஜய் உட்பட 3 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்து. அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.