இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது, நமது ஊரில் பலர் சொல்ல நாம் கேட்டுள்ள வார்த்தை ஆகும். பனாமா நாட்டு பூனையோ, போதை மருந்துகளை கடத்தவே உதவி செய்கிறதாம்…. வாருங்கள் மேற்கொண்டு தெரிந்து கொள்வோம்….
பனாமா நாட்டின் கரீபியன் மாகாணத்தின் கோலன் நகரில் உள்ள பிரமாண்ட சிறைப்பகுதியில், விநோதமான உடையுடன் திரிந்த பூனையை, சிறை அதிகாரிகள் சோதனை செய்தபோது,
அதன் உடலில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த போதை மருந்து பொட்டலங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போதை மருந்து கோகைன் மற்றும் மாரிஜூவானா வகையை சேர்ந்தது என்று சிறை அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர். போதை மருந்துகளுடன் கைப்பற்ற பூனையை பிடித்த போலீசார்,
அதன் உடலில் இருந்த போதை மருந்துகளை அகற்றிய பின்னர், அப்பூனையை, பிராணிகள் வளர்ப்பு அமைப்பிடம் வழங்கிவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விலங்குகள் மூலம் போதை பொருட்களை கடத்தும் நிகழ்வு, இங்கு ஒன்றும் புதிதான ஒன்று அல்ல என்றும், ஆனால், இது வழக்கமான நடைமுறை இல்லை என்று சிறை அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர்.
2020 ஆம் ஆண்டில், இலங்கை நாட்டில் உள்ள சிறையில் விநோதமாக தென்பட்ட பூனையின் உடலில் இருந்து போதை மருந்துகள், ஒரு மொபைல் போன் மற்றும் 2 சிம் கார்டுகள் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.