சென்னையில் கொரோனா – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு

சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நான்கு மண்டலங்களில் அதற்கான காரணம் குறித்து தெரு வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு அறிவித்த 1000 ரூபாய் கொரோனா நிவாரணத் தொகையை வழங்கிய பின் செய்தியாளர்களைசந்தித்தார். அப்போது பேசிய அவர்,தொற்று கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளை தீவிரமான முறையில் கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

இதுவரை 12,709 பயணிகள் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்தடைந்துள்ளதாகவும், இதில் 11,406 நபர்கள் தனிமைபடுத்துதல் காலம் முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் இதில்
381 நபர்கள் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதேபோல் வெளிமாநிலத்தில் இருந்து வரக்கூடிய பயணிகளை அரசு செலவில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் அறிவித்தபடி 38,000 சாலையோர வியாபாரிகளில் 14,600 வியாபாரிகளுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 59,679 மாற்று திறனாளிகளுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை வழங்கும் பணி தொடங்கி உள்ளதாகவும், குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை நிவாரணம் பெரும் மாற்றுத்திறனாளிகள் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த தொகை ஒரு வார காலத்தில் அனைவருக்கும் வழங்கப்படும் என கூறிய அவர் சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரின் விவரங்களும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் மாநகராட்சி சார்பில் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

ஞாயிற்றுகிழமைகளில் தளர்வில்லா பொது முடக்கத்தை அமல்படுத்துவதன் மூலம் தொற்று பரவலின் வேகத்தை கட்டுபடுத்த முடியும் என கூறிய அவர், இறைச்சி கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் எனவும் மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சுய கட்டுப்பாடு மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே கொரோனா தொற்று பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும் என கூறிய அவர் சென்னையில் சமீபகாலமாக தோற்று அதிகரித்து வரும் அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக வீதி வீதியாக சென்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தொற்று அதிகரிப்பதற்கான காரணங்களை கண்டறிந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் சென்னையை பொறுத்தவரையில் தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 37 சதவிகிதம் வரை இருந்தது சமீபகாலமாக 15 சதவிகிதமாக குறைந்ததாகவும் அது மேலும் குறைந்து தற்போது 12 சதவிகிதத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை 12 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதமாக குறைக்கும் அளவிற்கு மாநகராட்சி பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த 15 நாட்களாக குறைந்து வருவதாகவும் இதனை நழுவ விடக் கூடாது என்பதற்காக மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இருந்தபோதிலும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இதனை சாத்தியமாக்க முடியும் எனவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கேட்டுக்கொண்டார். முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்றாலே பெரிய தவறு என்று மக்கள் மனதில் பதிய வேண்டும் எனக் கூறிய அவர், இயல்பான முறையில் தொற்று எண்ணிக்கை குறைவது தான் நமக்கு நல்லது என அவர் தெரிவித்தார்.

Exit mobile version